Breaking News :

Tuesday, December 03
.

'ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு!


மனிதனின் தீரா ஆசைகளை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆல்பம், இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் சரிகம இசை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

சென்னையின் பிரபல இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரும் (சர்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்) ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் யு.பி. சீனிவாசன் 'ஜண்ட மட்டான்’ எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கி உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே பி ஒய் சரத் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொள்ள 'ஜண்ட மட்டான்’ வெளியானது. பல்வேறு துறைகளை சார்ந்த முன்னணியினர் இதில் பங்கேற்றனர்.

மருத்துவத்துறையில் பாரீஸில் தனிப் பயிற்சி பெற்றுள்ள டாக்டர் சீனிவாசன், அடிப்படையில் கலைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர். முக்கியமாக பாடல், இசையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இதன் காரணமாக தனது பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் பின்னணி சுவாரசியமானது. ஆரம்பத்தில் டாக்டர் யூ.பி.எஸ் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். அது நாகர்கோயில் வட்டார வழக்கில் கூறப்படும் ‘நள்ளிரவு பேய்களின் ஆட்டத்தை’ பற்றிய கதை ஆகும். பலராலும் பாராட்டப்பட அக்கதையையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என யோசிக்க உடனே நண்பர்களோடு சேர்ந்து களம் இறங்கியுள்ளார்.

இயக்குனர் ஆரிஷ் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். அப்போது இதில் வருகிற பேய்களின் ஆட்டத்திற்கு ஒரு பாடல் தேவைப்பட, அதை மேலோட்டமாக எடுத்து விடாமல் தனி ஆல்பமாக எடுப்போம், இசையின் ஒரு பகுதியை குறும்படத்தில் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.

டாக்டர் யூ.பி.எஸ் நாகர்கோயில் வட்டார வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் அவரே ‘ஜண்ட மட்டான்’ என்ற இதற்கான ஒரு பாடலை எழுதிட, இசையமைப்பாளர்கள் H.ஹூமர் எழிலன், H.சாஜஹான் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கு இசையமைத்திட, மாஸ்டர் சுரேஷ் சித் நடனம் அமைத்திட, அதையும் இயக்கநர் ஆரிஷே இயக்கியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவான இந்த ஆல்பத்தை பார்த்த ‘சரிகம’ அதை வெளியிடுகிறது.

தனது ஆபரேஷன் பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பம் பணி பற்றி டாக்டர் யூ.பி.எஸ் பேசுகையில், “நான் அடிப்படையில் ஒரு டாக்டர். கலையில் சின்ன ஆர்வம் உண்டு, அவ்வளவு தான். ஒரு சிறுகதையாக தொடங்கியது இப்படி குறும்படமாக, ஆல்பமாக உருவாகும் என நானே எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் என் பாட்டி சொன்ன கதையின் விரிவாக்கம் தான் இது. நண்பர்களின் உதவியோடு தான் இதை தயாரித்து உள்ளேன். ஆல்பத்திற்கான பாடல் வரிகளை கூட என்னை வற்புறுத்தி தான் எழுத வைத்தனர்.

பாட்டி கதையில் சில சமூக கருத்துகளையும் இணைத்து பாடல் வரிகளை அமைத்துள்ளோம். இதில் நிறைய கிராபிக்ஸ் வேலைகளை பார்த்தது எனக்கு சினிமா பற்றிய புது அனுபவமாக இருந்தது. இப்போது ஆல்பமாக பார்த்துவிட்டு எல்லோரும் பாராட்டும் போது மனநிறைவாக, மகிழ்ச்சியாக உள்ளது. இது தரும் உற்சாகம் என்னை இன்னும் இத்துறையில் பயணிக்க வைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.