Breaking News :

Saturday, December 14
.

நினைவு நாள்: ஜெ ஜெயலலிதா சினிமா நடிகையான கதை!


திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. 1964ம் ஆண்டு குமுதம் இதழில் ஜெயலலிதாவின் தாயார் நடிகை சந்தியா எப்படி தன் மகள் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புக்கள் வந்தது என்பதையும், அவர் நடிகையான பின்ணணியையும் கூறி விரிவாக ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். இந்த விவரங்கள் தெரியாத இளைய தலைமுறையினருக்காக இங்கே அந்தப் பேட்டியைக் கொடுத்துள்ளோம்:

“என் மகள் அம்மு – ஜெயலலிதா – திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் முதலில் விரும்பவில்லை. சிறு குழந்தையாக இருக்கும் போதே அம்மு எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள்தான் முதல் மாணவி! படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அம்முவுக்கு இருந்தது. அவள் விரும்பியவாறு நிறையப் படிக்கட்டும் என்றுதான் நானும் எண்ணினேன்.

சிறு வயதில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசையைக் கேட்டால் அதற்கேற்ப நடனமாடத் தொடங்குவாள் அம்மு. நடனத்தின் மீது அவளுக்குள்ள ஆர்வத்தை ஏன் வீண் அடிக்க வேண்டும் என்று நினைத்த நான், நடன ஆசிரியை திருமதி கே.ஜே.சரசாவிடம் அம்முவுக்கு நடனம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். அம்மு விரைவாகக் கற்றுத் தேறியதால் அவளுடைய நடன அரங்கேற்றத்தையும் ஏற்பாடு செய்து நடத்தினேன்.

சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படிக்கும் போதே அவளுக்கு நாடகத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதுவும் ஆங்கில நாடகம். திரு.ஒய்.ஜி.பார்த்தசாரதி குழுவினர் நடத்திய நாடகம் அது. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் அம்முவுக்கு அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில் வி்ல்லனாக நடித்தவர் சோ. அனைவரும் அம்முவின் நடிப்பைப் பாராட்டினார்கள்.

சற்றேறக்குறைய இதே சமயத்தில் திரு.சங்கர் கிரி (ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களி்ன் மகன்) ஆங்கிலத்தில் டாக்குமெண்டரி படம் ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அதில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.

அம்முவின் நடிப்பைப் பாராட்டிய திருமதி. ஒய்.ஜி.பி., திரு.சங்கர் கிரியிடம் அம்முவை சிபாரிசு செய்திருக்கிறார். திரு.சோ அவர்களும் அம்முவின் நடிப்பை சங்கர் கிரியிடம் புகழ்ந்து கூறி, ‘‘உங்கள் படத்தில் அம்மு சிறப்பாக நடிப்பாள்’’ என்று சொல்லி இருக்கிறார்.

அம்முவை தனது டாக்குமெண்டரி்ப் படத்தில் நடிக்க என்னிடம் அனுமதி கேட்டார் சங்கர் கிரி. ‘‘அம்மு சினிமாவில் நடிப்பதை நான் விரும்பவில்லை’’ என்று அவரிடம் சொன்னேன். ‘‘இது ஒரு டாக்குமெண்டரிப் படம். உங்கள் மகளின் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்கிறேன். உங்கள் மகளுக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்’’ என்றார்.

சனி, ஞாயிறுகளில் படப்பிடிப்பு, அதுவும் ஆங்கிலப் படம். இரண்டையும் எண்ணிப் பார்த்த நான் சம்மதித்தேன். அந்தப் படம்தான் ‘எபிசில்’. படப்பிடிப்பு தொடங்கியது.

அப்போது நான் ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்து வந்தேன். அதில் எனக்கு மாமியார் வேடம். படத்தின் கதாநாயகி ஒரு பால்ய விதவை. அந்த வேடத்தில் நடிக்க களை சொட்டும் முகமுடைய ஓர் இளம் நடிகையைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர்.

அவர்கள் தேடிய வண்ணம் கதாநாயகி கிடைக்காததால் அந்தப் பாத்திரம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை விட்டுவைத்து விட்டு படத்தில் வரும் மற்ற காட்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் என்னிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் வந்தபோது தற்செயலாக அம்முவைப் பார்த்து விட்டனர். ‘‘நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே.. உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாப் போடப் போகிறோம்’’ என்றனர்.

ஆனால் நான் அதற்கு சம்மதம் அளிக்கவில்லை.

ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர்கள் என்னிடம் வந்தனர். ‘‘இன்னும் எங்கள் படத்திற்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவுசெய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டனர். நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

‘‘அம்முவின் படிப்பு கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும் வரை காத்திருப்பீர் களா?’’ என்று ஒப்புக்குக் கேட்டேன். அவர்களும் உடனே, ‘‘ஆகட்டும்’’ என்றார்கள். மேலும் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. அம்முவுக்குக் கோடை விடுமுறையும் வந்தது. அதே தயாரிப்பாளர்கள் திரும்பவும் வந்தனர்.

‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி… உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டனர். என் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது. ‘அம்முவை நடிக்க அனுமதிக்க வேண்டியது தானா?’ என்ற எண்ணம் எழுந்தது.

அம்முவிடமும் கேட்டேன்.

‘‘நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’’ என்றாள்.

விடுமுறை நாட்கள்தானே என்று அம்முவை நடிக்க அனுப்பி வைத்தேன்.

இந்நிலையில் நான் நடித்திருந்த ‘கர்ணன்’ தமிழ்த் திரைப்படத்தின் 100வது நாள் விழாவுக்குப் போயிருந்தேன். என்னுடன் அம்முவும் வந்திருந்தாள். அப்போது அம்முவைப் பார்த்த திரு.சிவாஜிகணேசன், அவள் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வருவாள் என்று வாழ்த்தினார்.

அங்கே அம்முவைக் கண்ட தயாரிப்பாளர் – டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்கள், அம்முவை அவரது படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வழக்கம்போல் மறுத்தேன். கோடை விடுமுறையிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொள்வதாகக் கூறினார். ‘முரடன் முத்து’ என்ற கன்னடப் படம் அது. கல்யாண்குமார்தான் ஹீரோ. அம்மு நடிக்க ஒப்பந்தம் ஆனாள்.

பனாரஸ் மெட்ரிக் ரிசல்ட் வந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்கு சிறப்பு ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள். அம்முவும் கல்லூரியில் சேர்ந்து இரண்டு நாட்கள் சென்றும் வந்தாள். அப்போது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.

கதாசிரியர் – டைரக்டர் திரு.ஸ்ரீதர் அவர்கள் அம்முவுக்குத் தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார். திரு.பந்துலு அவர்கள் ‘ரஷ்’ படத்தில் அம்முவின் நடிப்பைப் பார்த்திருக்கிறார். ‘புகழும் திறமையும் உள்ள ஒரு முன்னணி டைரக்ட ரிடமிருந்து ஒரு வாய்ப்புக் கிடைத் துள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அம்முவை நடிக்கச் செய்வதா அல்லது தொடர்ந்து படிக்கச் செய்வதா?’ எனக்கு ஒரு பெரிய பிரச்சனை மீண்டும் ஏற்பட்டு விட்டது. என் குடும்ப நண்பர்கள், என் நல்வாழ்வில் அக்கறை கொண்டோர் அனைவரிடமும் இது பற்றி ஆலோசனை செய்தேன்.

அம்முவுக்குப் படிப்பா? நடிப்பா? இதை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை எனக்கு.

என் தந்தையோ, ‘‘குழந்தை நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா? அம்முவை ஏன் சினிமாத் துறைக்கு வரச் செய்கிறாய்?’’ என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். முடிவில் அம்முவைத் தேடி வந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று தீர்மானித்து அம்முவை நடிக்க அனுமதித்தேன். (அந்தத் திரைப்படம்தான் ‘வெண்ணிற ஆடை‘) அம்முவைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்கள் அவளைத் தேடித்தான் வந்தது. அதற்கு அடுத்த படத்தில் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்தாள்.

அம்மு நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால் அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?

அதே சமயம் என் மகள் அகில உலக நட்சத்திரமாக வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

1964ம் ஆண்டு குமுதத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பேட்டி.

கோவாவுக்கு அருகில் இருந்த கார்வாரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஷுட்டிங். கார்வாரில் வேறுவேறு விடுதிகளில் தங்கியிருந்த படக்குழுவினர் அனைவரும் படகுத் துறையில் ஒன்றுகூடி அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவிலிருந்த தீவுக்குச் செல்ல வேண்டும். ஒருநாள் ஜெயலலிதா வரத் தாமதமானது. அவருடைய டூப் அணிந்திருந்த உடைகளை வைத்து அவர் வந்ததாக எண்ணிய தயாரிப்பு நிர்வாகி ஓகே சொல்ல, படகு புறப்பட்டுச் சென்று விட்டது.

படகுத்துறைக்கு வந்த ஜெயலலிதாவைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி சுப்பிரமணியத்திற்கு அதிர்ச்சி. அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டதை அறிந்த ஜெயலலிதாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. வேறு படகு கிடைக்குமாவென்று சுப்பிரமணியம் விசாரித்துப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை.

அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர் யோசனை ‌சொன்னார்: ‘‘இங்கிருந்து ரோடு வழியாக பதினைந்து கி.மீ. தூரம் போனால் மீன் பிடிப்பவர்கள் அந்த தீவுப் பக்கம் குறுக்கு வழியாகச் செல்லும் இடம் வரும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் தீவு இருக்கிறது. கட்டுமரத்தில் போய் விடலாம்’’ என்று கூறினார்.

அப்படியே செய்தார்கள். மூன்று கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் அலையடிக்கும் கடலில் நிலையற்று ஆடும் கட்டுமரத்தில் பயணம் செய்யத் துணிச்சலும் மன வலிமையும் நிறைய இருக்க வேண்டும். அவை இரண்டுமே ஜெயலலிதாவிடம் நிறைய இருந்தன. மோட்டார் படகில் சென்றவர்கள் தீவுக்குச் சற்று முன்பாகவே படகை நிறுத்திவிட்டு, கரைக்குச் செல்ல சிறிய துடுப்புப் படகுகள் வந்து சேர்வதற்காக காத்திருந்தார்கள். தங்களுக்கு முன்பாகவே கட்டுமரத்தில் ஜெயலலிதா செல்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள்.

ஜெயலலிதாவின் உடையும் ஒப்பனையும் கடல் நீர் வாரியடித்ததில் நனைந்து விட்டிருந்தன. எம்.ஜி.ஆர். வந்ததும், ‘‘ஒரே ஆச்சரியமா இருக்கு. எங்களுக்கு முன்னாடி எப்படி வந்தே?’’ என்று கேட்டார். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமும், அழுகையும் பீறிட்டுக் கொண்டு வெளிப்பட்டன ஜெயலலிதாவிடமிருந்து. நடந்ததை விளக்கினார். எம்.ஜி.ஆரின் மோதிரக் கையால் அன்று குட்டுப்பட்டார் தயாரிப்பு நிர்வாகி. படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.

நன்றி பால கணேஷ்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.