Breaking News :

Wednesday, February 21
.

ஆந்தை க்ரீக் பாலத்தில் சம்பவம்


Robert Enrico 1962ல்  இயக்கிய இந்த திரைப்படம் மிக முக்கியமானது. உலகம் முழுவதும் திரைப்படக் கலை பயிலும் மாணவர்கள் மத்தியில் இந்தப் படம் பிரபலமானது. 28 நிமிடங்களே ஓடக்கூடிய இந்தப் படம் பார்ப்பவர் நெஞ்சை உலுக்கி எடுத்துவிடும். இத்தனைக்கும் இந்தப் படத்தில் வசனங்கள் ஏதும் கிடையாது.

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ராணுவ பயிற்சி முகாம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவன் நுழைகிறான். அவனை கைது செய்து ராணுவம் விசாரிக்கிறது. இறுதியில் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது.  பனி பெய்யும் ஒரு காலை வேளை அவுல் கிரீக் என்ற இடத்தில் ஒரு ஓடைமீது உள்ள  பாலத்தின் மீது தூக்குமேடை தயார் செய்யப்படுகிறது. சுற்றிலும் துப்பாக்கிய ஏந்திய காவலர்கள். ஒரு பலகையை இழுத்தால் போதும் அவனுக்கு உயிர் போய்விடும். சுற்றிலும் மரம், செடி, குன்று, ஆறுகளெல்லாம் புதிய எழிலைக் கொட்டிக்கொண்டிருக்க, இங்கு சூழ்நிலை மூச்சுமுட்டச் செய்கிறது.

ஒரு நொடி சுற்றிலுமுள்ள உலகத்தின் மீது இறுதியாக ஒருமுறை கண்ணோட்டம் விடுகிறான். கண்களை மூடுகிறான். அதிகாரியின் ஆணை... பலகை நகர்கிறது... 

ஆனால், என்ன வியப்பு! எப்படியோ தூக்குக் கயிறு அறுந்து போகிறது. அவன் கீழே இருக்கும் ஓடையில் விழுகிறான். ஓடையில் விழுந்ததும் உயிரைப் பணயமாக வைத்து நீந்தத் தொடங்குகிறான். வெள்ளத்துடன் வரும் பாம்பு, பூச்சி போன்றவைகளிடமிருந்து எப்படியோ தப்பித்து நீந்துகிறான். காவல் படையின் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் இவனை குறிவைத்து சுடுகின்றன. சுற்றிலும் குண்டுகள் பாய்ந்துச் செல்கின்றன. வெள்ளத்தின் இழுப்பையும் மீறி அவன் நீந்துகிறான். அவன் கரை சேர்வதற்குள் சக்தியெல்லாம் இழந்துவிடுகிறான். ஆனாலும் உயிர் மீது உள்ள அளவு கடந்த ஆசையில் அவன் மணலில் உருளுகிறான். பிறகு மெதுவாக எழுந்து ஓடத் தொடங்குகிறான். பரந்த வெளி, காடு, பறவைகள், எங்கெங்கும் வாழ்க்கையின் கோலாகலம். முடிவில்லாமல் வளர்ந்துகொண்டே போகும் ஒற்றைப் பாதையில் ஓடிக்கொண்டே இருக்கிறான்.

இறுதியில் தன் வீட்டை நெருங்குகிறான். தொலைவில் வீடு தெரிகிறது. காத்திருக்கும் அவன் இளம் மனைவி. கையைத் தூக்கிகொண்டே படியிறங்கி ஓடி வருகிறான். இவன் ஓடிக்கொண்டே அவளது திறந்த கைகளுக்குள் போய் விழுகிறான்.

சட்டென்று காட்சி கலைகிறது. அவுல் க்ரீக் பாலத்தின் மேல்புறம் தூக்குமரத்தில் இவனது பிணம் தொங்குகிறது. சாகும் தருணத்தில் இவனது தப்பித்துக் கொள்ளும் கனவு முடிந்துபோகிறது!

நியாயத்தின் பேரில் மனிதன் மனிதனைக் கொல்லும் கேவலமான கொடுமையை மிகவும் நுட்பமாக அழுத்தமாக படம் பிடித்துக் காட்டும் அபூர்வ திறன் வாய்ந்த குறும்படம் இது. வசனங்கள் இல்லாமலே கூட‌ உங்களது கண்கள் திரையிலிருந்து அகலாது. ஆறடி உயரமுள்ள ஒரு உடலை அழிப்பது மட்டுமல்ல, அவனது சுதந்திரத்தைக் கொல்வது, அவனது ஆற்றல், ஆசை, ஆர்வங்கள், கனவுகள், அவனது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த பல உயிர்கள், இவைகளைக் கொல்வது என்பதாகும். எல்லா உலகையுமே கொல்வதாகும். கொல்வது என்பதே மனித ஆற்றலை மீறிய ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் இல்லையா? இப்படத்தின் பாதிப்பு நம்மிடம் நீண்ட நாட்கள் மறையாமல் இருக்கும் என்பது உறுதி.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.