Breaking News :

Wednesday, October 16
.

நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்தநாள் சிறப்பு பதிவு!


இடுக்கண் வருங்கால் நகுக  எனும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க ஒவ்வொருவரும் , தங்களது வாழ்வில் துன்பத்தை சந்திக்கும்போது புன்னகைக்கும் எழுதப்படாத விதி நடைமுறையிலுள்ளது. ஆனால் தமக்குள் துன்பங்களை வைத்துக்கொண்டு பிறரை சிரிக்க வைத்து, அவர்களின் துன்பத்தை இல்லாதொழிப்பவர்கள் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட கலைக்குழந்தைகள்.

இவ்வாறு உலகில் பல கலைக்குழந்தைகள் இறந்தும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.  இவ்வாறு நம்முன்னே தங்களது நடிப்பாற்றலாலும், நகைச்சுவை உணர்வினாலும் தங்களை அடையாளப்படுத்தி ,  வாழ்ந்த ,வாழ்ந்துகொண்டிருக்கின்ற கலைஞர்களில் அடையாளப்படுத்தி சொல்லக்கூடியவர்களில் ஒருவர். தமிழத்திரையுலகில் தன் நகைச்சுவையாலும், நடிப்பாற்றலாலும், 50 வருடங்களுக்குமேல் தமிழ் திரையுலகை தன்னகப்படுத்தி , ரசிகர்களை தன்பால் ஈர்த்து வைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ்.
கடந்த 1933 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ம் தேதி தமிழ்நாட்டின் தாராபுரம் பகுதியிலுள்ள கொளிஞ்சிவாடி எனும் ஊரில் கிருஷ்ணாராவ் ,ருக்மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் நாகேசுவரன் எனப்படும் நாகேஷ்
இவர் , குண்டப்பா , குண்டுராவ் எனும் பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.

தனது சொந்த ஊரான தாராபுரத்தில் ஆரம்பகல்வியை மேற்கொண்;ட நடிகர் நாகேஸ் பின்னர் கோவையிலுள்ள பீ எஸ் ஜீ எனும் கல்லூரியில் கலைப்பிரிவில் படித்து பட்டம் பெற்றார்.  தனது தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமூகத்தில் தன்னுடைய பெயர் தெரியும் அளவுக்கு முன்னேறிய பிறகே வீட்டுக்கு வருகை தருவேன் எனும் சவாலை விடுத்து , நாகேஷ் சென்னையை வந்தடைந்தார். சென்னைக்கு வந்த நாகேஷ்; ரயில்வே ஊழியராக பணிபுரிந்தார். இந்நிலையில் தனது இடம் இதுவல்ல என நன்றாக அறிந்துவைத்திருந்த நாகேஷ் , தனது இலக்கை நிர்ணயித்துக்கொள்ளாத நிலையில், தனது வாழ்க்கை தொடர்ந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் கம்பராமாயணம் எனும் நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்ட நாகேஷ் அதில், வயிற்றுவலிகாரராக வேடமிட்டு,  தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். குறித்த நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் ,  அவரின் நடிப்பு திறனை பாராட்டி , பரிசு வழங்கினார்.

குறித்த நிகழ்வு நாகேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக மாறியது. அதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக  பல நாடகங்களில் நடித்துவந்த நடிகர் நாகேஸ்  , கடந்த 1959 ம் ஆண்டு, திரையுலகில் கால்தடம் பதித்தார். தாமரைக்குளம் எனும் திரைப்படத்தில் நாகேஷ், முதன்முதலில் நடித்தார்.

அதனைத்தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துவந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் அவருக்கு முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. குறித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதில் நாகேசுக்கு ஜோடியாக சச்சு நடித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து தனது நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்துக்கொண்ட நடிகர் நாகேஷ்     தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் இருவேறு பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம் .ஜி.ஆர் ஆகியோருடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.  மேலும் கே பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் ,குணச்சித்திர பாத்திரத்தில் நடித்த நடிகர் நாகேஷ் , மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவ்வாறு நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நாகேசை , கதாநாயகன்; அந்தஸ்திற்கு கொண்டுசென்ற பெருமை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரையே சாரும். நீர்;க்குமிழி எனும் திரைப்படத்தில் நாகேசை , கதாநாயகனாக நடிக்கவைத்தார் கே பாலச்சந்தர்.

குறித்த திரைப்படமானது மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து, தன்னால் சகல துறைகளிலும் சோபிக்க முடியுமென்பதை நிரூபித்திருந்தார் நடிகர் நாகேஷ். அதனைத்தொடர்ந்து, தேன் கிண்ணம், நவக்கிரகம் , எதிர்நீச்சல், யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற திரைப்படங்களில் நாகேஷ், கதாநாயகனாக நடித்தார்.

50 வருட திரைவாழ்க்கையில் நாகேஷ் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதில் மக்கள் திலகம் எம் ஜீ ஆருடன் 45 திரைப்படங்களில் நடித்து, அவரிடம் பாராட்டை பெற்றவர் நடிகர் நாகேஷ். இவர் நடித்த பல திரைப்படங்களில் இவருக்கு ஜோடியாக மனோரமாவே இணைந்து நடித்துள்ளார். முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொள்ளாத நாகேஷ், நடனத்தில் தனக்கென   ஒரு தனிப்பாணியை அமைத்துக்கொண்டு நாகேஷ்பாணி  எனும் முத்திரையினை பதித்துக்கொண்டார்.

இவரும் சிவாஜி கணேசனின் இணைந்து நடித்த திருவிளையாடல் எனும் திரைப்படத்தில் வந்த , நகைச்சுவைக்காட்சி, தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் என்றும் மறக்க முடியாத காட்சி.

இவ்வாறு தனது வெற்றிப்பாதையினை தொடர்ந்த நாகேஷ், தன் பெயர் ஊர்சொல்லும் அளவிற்கு பிரபல்யமடைந்த விடயத்தினை தனது தாயிடம் சொல்ல புறப்பட்ட நாளில்,  அவரது தாயின் இறுதிச்சடங்கு நடைபெற்றமை அவரை நீங்கா துயருக்கு கொண்டுசென்றது. ரெஜீனா எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நாகேசுக்கு ஆனந்தபாபு, ரமேஸ் பாபு, ராஜேஸ் பாபு எனும் 3 மகன்கள் உள்ளனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகை ஆட்சி செய்த நடிகர் நாகேஷ், கடந்த 2009 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 31 ம் தேதி மாரடைப்பால் உயிர்நீத்தார். 5 சகாப்தமாக தமிழ் திரை ரசிகர்களை மனம் விட்டு சிரிக்கவைத்து , மனம்கொண்ட சோகங்களை மறக்க வைத்த நடிகர் நாகேஸிற்கு, இந்திய அரசின் எவ்வித விருதுகளும் கௌரவிக்கவில்லையென்பது கலையுலகை சற்றே கண்கலக்க வைக்கும் நிகழ்வாகும். இந்தியாவின் ஜெரிலூயி என அழைக்கப்பட்ட நடிகர் நாகேஷ், தான் நடித்த தசாவதாரம் திரைப்படத்தின் இறுதிநாள் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டபின்னர் , அவர் சொன்ன கடைசி வார்த்தை என் கடைசி படம் நல்ல படம்,  என்ற வார்த்தையாகும்.

தாமரைக்குளம் எனும் தமிழ் திரைப்படத்தினூடாக திரையுலகில் தவழ ஆரம்பித்த மாபெரும் கலைஞன் நடிகர் நாகேஷ், பல அவதாரங்களை எடுத்து, தசாவதாரத்தில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.  நாகேசுக்கு பின்னர் , எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இன்று திரையுலகில் ஜொலித்து வந்தாலும்,  அவர்கள் அனைவருக்குமு; நகைச்சுவையில் முன்னோடியாக திகழ்ந்தவர் நடிகர் நாகேஷ்.

இந்திய அரசு அவருக்கு விருது வழங்கி கௌரவிக்காவிடினும்,  கலை ரசிகர்கள் ,  திரையுலகத்தினர் , உலக மக்கள் அனைவரும் அவருக்கு வழங்கிய மிகப்பெரிய பரிசு அவரின் அந்த ஆயிரம் திரைப்படங்களையும் ஏற்றுக்கொண்டமையே.  நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற சகாப்தங்கள் வாழ்ந்த காலத்தில் தன்னையும் மிளிர வைத்து, தனக்கென தனியிடத்தை பதித்து, இந்திய திரையுலகில் தனித்துவமிக்க நாயகனாக விளங்கிய நடிகர் நாகேஷ் என்றும் நாம் நினைவில்...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.