Breaking News :

Friday, May 03
.

மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் பிறந்தநாள் சிறப்பு பதிவு


எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். ப. நீலகண்டன் அவர்கள் எம்.ஜி.ஆரின் 17 படங்களை இயக்கியுள்ளார். ஜெ. ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர். நடிகை லதா 13 படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார்.

 

முதல் படம்

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் எல்லிஸ் டங்கன் என்ற இயக்குனரால் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்யப்பட்டார். இது எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதை ஆகும். ஆனாலும் 1947 ல் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை எம்.ஜி.ஆர்க்கு அதிகம் புகழ் கிடைக்கவில்லை.

 

கதாநாயகனாக முதல் படம்

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் "ராஜகுமாரி". முதல் திரைப்படமான சதிலீலாவதி வந்து ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் பின்பே கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்தார். முதலில் இப்படத்தில் பி.யு.சின்னப்பா அவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடானது. ஆனால் இயக்குனர் எம்.ஜி.ஆர் நடித்த முருகன் படத்தினைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர எண்ணினார். அத்துடன் கருணாநிதியின் வசனமும் இப்படத்தில் இடம்பிடித்தது. இந்தப்படம் 1947 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் கதாநாயகன் "எம்.ஜி.ராமசந்தர்" என்று டைட்டில் போட்டு வெளிவந்தது.

சுடப்பட்ட நிகழ்வும் திரைவாழ்க்கையும்

தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. அவருடைய புதிய பாணி பேச்சினை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர். இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.

 

முதல் முழு நீள வண்ணப்படம்

1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக "மாடர்ன்" தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது.

 

தேசிய விருது

தமிழக நடிகர்களிலேயே முதன் முதலாக நடிப்புக்கான தேசியவிருதினை ("பாரத்") பெற்றவர் எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 திரையரங்குகளில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

 

இறுதி படம்

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !.

நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.

 

1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்கியராஜ் உருவாக்கிய அவசர போலிஸ் 100 வெற்றிப்படமாக விழைந்தது.

 

நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்

29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். உப தலைவர்.

 

14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.

1953-ல் உப தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்

1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்

1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.

மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.

 

அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

திரையுலக புரட்சி

விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "கலை அரசி".

தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்" -  "எங்க வீட்டுப் பிள்ளை".

 

மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)

 

அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழின் முதல் வண்ண படமாகும்.

'மர்மயோகி' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்.

 

16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. 

 

எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் ! 

 

தஞ்சை ராமையாதாஸ்

மாயவநாதன்

பாபநாசம் சிவன்

கா.மு.ஷெரீப்

மு.கருணாநிதி

கு.சா.கிருஷ்ணமூர்த்தி

ஆத்மநாதன்

கே.டிசந்தானம்

ராண்டார் கை

உடுமலை நாராயணகவி

சுரதா

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

லட்சுமணதாஸ்

கு.மா.பாலசுப்பரமணியன்

அ. மருதகாசி

முத்துகூத்தன்

கண்ணதாசன்

வாலி

ஆலங்குடி சோமு

அவினாசி மணி

புலமைபித்தன்

வித்தன்

நா. காமராசன்

முத்துலிங்கம்

பஞ்சு அருணாசலம்

இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்

எம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

நாடோடி மன்னன்

ஆசை முகம்

ராஜா தேசிங்கு

நினைத்ததை முடிப்பவன்

எங்கவீட்டுப் பிள்ளை

கலை அரசி

பட்டிக்காட்டு பொன்னையா

மாட்டுக்கார வேலன்

அடிமைப் பெண்

நீரும் நெருப்பும்

நாளை நமதே

நேற்று இன்று நாளை

உலகம் சுற்றும் வாலிபன்

ஊருக்கு உழைப்பவன்

அரசிளங்குமரி

சிரித்து வாழ வேண்டும்

குடியிருந்த கோயில்

தயாரிப்பு மற்றும் இயக்கம்

எம். ஜி. ஆர் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்பட நிறுவனத்தின் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர். மேலும் நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

 

1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளை பாக்கியராஜ் தன்னுடைய அவசர போலிஸ் 100 என்ற படத்தில் பயன்படுத்திக் கொண்டார்

கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

 

 நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்.

 

 எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

 எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

 

 காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

 சினிமாவில் கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

 

 எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

 

 தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

 

 ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

 

 அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

 ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

 ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

 

 அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

 

 எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

 முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

 அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !

 

 ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.