இசைக்கருவிகளே பயன்படுத்தாமல் ஏ.ஆர்.ரகுமான் கம்போஸ் செய்த மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா? இந்திய சினிமா வரலாற்றிலேயே இசைக்கருவிகளே இல்லாமல் பாடல் ஒன்றை உருவாக்கியது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான், அது என்ன பாடல் என்பது பற்றி பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா கோலோச்சி வந்த கோலிவுட்டில் இசைப்புயலாக வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் ரகுமான். முதல் படத்திற்கே தேசிய விருதும் வென்று அசத்தினார் ரகுமான். அதிலும் இளையராஜா உடன் அவருக்கு போட்டி இருந்தது. தேவர் மகன் படமா அல்லது ரோஜா படமா என்று இருந்த நிலையில், இறுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ராஜாவை வீழ்த்தி விருதை தட்டிச் சென்றார் ரகுமான்.
ரோஜா படத்தின் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் ரகுமான். அவர் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசமான பல முயற்சிகளை எடுப்பதில் ஏ.ஆர்.ரகுமான் கில்லாடியாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் அவர் இசைக்கருவிகளே இல்லாமல் இசையமைத்த ஒரு பாடல் பற்றி பார்க்கலாம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் - இயக்குனர் மணிரத்னம் காம்போ என்றாலே அது வெற்றி தான். அப்படி ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படம் திருடா திருடா. இப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். மேலும் ஹீரா, எஸ்பிபி, சலீம் கோஸ், அனு அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ஸுக்காக தேசிய விருதையும் வென்று அசத்தியது.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகின. இதில் தான் இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு பாடலை கம்போஸ் செய்து ஒட்டுமொத்த திரையுலகையுமே வியப்பில் ஆழ்த்தி இருந்தார் ரகுமான். திருடா திருடா படத்தில் இடம்பெறும் ராசாத்தி என் உசுரு எனதில்ல என தொடங்கும் அப்பாடலை தான் இசைக்கருவிகளே இல்லாமல் இசையமைத்து இருந்தார் ரகுமான்.
இப்பாடலை ஷாகுல் ஹமீது பாடி இருந்தார். இசைக்கருவிகளே இல்லாமல் எப்படி சாத்தியம் என்று தானே யோசிக்கிறீர்கள். அதில் தான் ரகுமான் ஜீனியஸ் என்பதை நிரூபித்து இருக்கிறார். இசைக்கருவிகள் இல்லாவிட்டாலும் அகபெல்லா எனப்படும் கோரஸ் குரலை பின்னணிக்கு பயன்படுத்தி அப்பாடலை மெருகேற்றி இருந்தார் ரகுமான். இந்தியாவிலேயே இசைக்கருவிகளே இல்லாமல் இசையமைக்கப்பட்ட முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.