Breaking News :

Tuesday, November 05
.

காதுக்கு பஞ்சர் ஒட்ற பசை - 'முதல் மரியாதை' வடிவுக்கரசி!


பாரதிராஜா சார் ஒரு நாள் என்னை அழைத்து, ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் அது வயதான கதாபாத்திரம் என்றும் கூறினார். சிவாஜி சாரின் மனைவி கேரக்டர் என்றால் வேண்டாம் என்று சொல்வோமா? என்ன? உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

படப்பிடிப்பில் மேக்கப் போடுவதற்காக இரத்த கையெழுத்து ராஜேந்திரன் என்பவர் வந்தார். அவர் முதலில் என்னுடைய காதை மடக்கி வைப்பதற்காக, ஒரு சின்ன ஸ்பாஞ்சை எடுத்து, அதை கட் செய்து நீளமாக்கினார். அதை என்னுடைய காதில் வைத்து, காதை மடக்கி, பஞ்சர் ஒட்டுவதற்கு ஒட்டப்படும் சொல்யூஷனை வைத்து அதில் ஒட்டினார். அதில் காது அப்படியே மூடிக்கொண்டது. அதை சுற்றி பாம்படம் தொங்க விடப்பட்டு இருந்தது.

பல் அனைத்தையும் கருப்பாக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதால், அயர்ன் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கரியை எடுத்து தூளாக்கிக் கொண்டார். படப்பிடிப்பில் மேக்கப் செய்வதற்கு என்று பசை ஒன்று இருக்கும்.

அதை கையில் எடுத்த அவர் என்னுடைய வாயை திறக்க வைத்து, பல்லில் தேய்த்தார். அதற்கு மேலே இந்த தூளாக்கிய கரியை எடுத்து தேய்த்தார். அதன் காரணமாக என்னால் ஒன்றுமே சாப்பிட முடியவில்லை. அதனை தொடர்ந்து என்னுடைய தலைக்கு விக் வைத்தார்கள்.

அப்படித்தான் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டது. அந்த மேக்கப்பை போடுவதற்கு அரை மணி நேரம் ஆகிறது என்றால், அதை நீக்குவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும் கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஷெட்யூல். அந்த பத்து நாட்களும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அப்படி அவஸ்தை பட்டேன். எங்களுடைய டைரக்டர் எப்படி என்றால், ஷூட்டிங் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, எல்லா நடிகர்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

அதனால் எனக்கு ஷூட்டிங் இருக்கிறதோ இல்லையோ, தினமும் மேக்கப் போட்டுக் கொண்டு நான் ஷூட்டிங்கில் ஏதாவது ஒரு மரத்தடியில் படுத்து இருப்பேன். டைரக்டர், வடிவை கூப்பிடு என்று சொன்னால் நான் உடனே எழுந்து வருவேன்.

ஒரு கட்டத்தில் மேக்கப்பை நீக்கும் போது, தயவு செய்து நீக்க வேண்டாம் நான் குளிக்கும் போது கூட காதை ஸ்டிக் வைத்து சமாளித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். காரணம் அதை கழட்டி மாற்றுவது அவ்வளவு கடினமான ஒன்று. இவ்வளவு கஷ்டப்பட்டு நான் அதில் நடித்தேன் என்றார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.