Breaking News :

Wednesday, December 04
.

நடிகை ரோஜா செல்வமணிக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!


ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர். 

இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது…
நமது திரைத்துறையை சார்ந்த திருமதி ரோஜா அவர்கள் ஆந்திராவில் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சராகி இருப்பது நமது திரைத்துறைக்கும், தெலுங்கு திரைத்துறைக்கும் பெருமை. இந்த நிலைக்கு வர, அவரின் பெரும் உழைப்பு காரணம் என்பது நீங்கள் அறிந்ததே. அவருக்கு நம் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழா நடத்த முடிவெடுத்துள்ளோம். 
மே மாதம் 7 ஆம் தேதி பாரதிராஜா தலைமையில் பாராட்டுவிழா நடை பெறவுள்ளது. ரோஜாவுக்கு ரோஜா என்ற பெயரிட்டவரே பாரதிராஜா அவர்கள் தான். திரு எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் அவர்களுக்கெல்லாம் பாராட்டு விழா நடத்தி பாராட்டப்பட்ட பாரதிராஜா அவர்கள் இவ்விழாவை நடத்துவது பெருமை.  


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் கல்யாண் பேசியதாவது…

பாரதிராஜா இருக்கும் மேடையில் இருப்பதே பெருமை. ரோஜா அவர்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் அந்த கட்சியில் இணைந்து மிகப்பெரிய அளவில் மக்களுக்காக போராடினார். இன்று அவர்களை மக்கள் தெய்வமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர் மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார். அவருக்கு இங்கு பாராட்டு விழா நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி, அதை பாரதிராஜா நடத்துவது இன்னும் பெருமை. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தாருங்கள், நன்றி. 


இசையமைப்பாளர் சங்கம் சார்பில் தீனா பேசியதாவது…

நம் திரைப்பட துறை சகோதரி ரோஜா அவர்கள் மந்திரி பதவி ஏற்ற பிறகு, அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வு இந்த நிகழ்வாகவே இருக்கும் என்பது மகிழ்ச்சி. அனைத்து தென்னிந்திய துறை பிரபலங்களும் இணைந்து பாராட்டுவது மகிழ்ச்சி. திரை பிரபலங்கள் பெரிய பதவிகளில் வகிப்பது, இருப்பது பெருமை. ரோஜா ஆந்திராவில் பதவி வகிப்பது மகிழ்ச்சி. 


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்ரகட்டா பிரசாத் பேசியதாவது…

ரோஜா அவர்கள் எங்கள் தயாரிப்பில் இரண்டு படங்கள் செய்துள்ளார். டிசிப்ளின் என்றால் அவர் தான். அவ்வளவு கடுமையான உழைப்பாளி. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பை தருபவர். அவர் தென்னிந்திய சினிமாவின் நடிகை எனவே அவருக்கு தென்னிந்திய திரைத்துறை முழுதும் இணைந்து பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆர் கே செல்வமணி பெப்சி சார்பில் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருகிறார் அது போல் ரோஜாவும் மீண்டும் மீண்டும் இந்த பொறுப்புக்கு வர வேண்டும் நன்றி. 

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது….

தமிழ் நாட்டு மருமகள் ரோஜா அவர்களுக்கு நாம் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்பது தான் முக்கிய விஷயம். இதை நான் செல்வமணியிடம் தெரிவித்திருந்தேன். பாரதிராஜா சார் பெயர் வைத்தால் அது கண்டிப்பாக நன்றாக இருக்கும். ரோஜா அவர்கள் மக்களுக்காக ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்திருக்கிறார். அதே போல் செல்வமணி இங்கு சினிமா தொழிலாளர்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். நம் வீட்டு பிள்ளையை கொண்டாடுவது போல் நாம் கொண்டாட வேண்டும். இவ்விழா பிரமாண்ட விழாவாக நடக்கும். ரோஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக இது நடக்கும் நன்றி. 


இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது…

மேடையில் பேசுவதென்பது எனக்கு கூச்சம், அதை மாற்றி என்னை பேச்சாளராக்கியது பாரதிராஜா அவர்கள் தான். இன்று மீண்டும் அந்த கூச்சம் வந்துள்ளது. என் மனைவிக்கு பாராட்டு விழா என்றால் நான் இருக்கும் பதவியை தப்பாக பயன்படுத்துவது போல் இருக்கும், வேண்டாம் என ஆர் வி உதயகுமார் அண்ணனிடம் சொன்னேன். இதனை பாரதிராஜா சாரிடம் சொல்ல ஒரு வாரம் தயங்கினேன். அவர் நான் பெயர் வைத்த பெண் நானே தலைமை தாங்கி இவ்விழாவை நடத்தி தருகிறேன் என்றார், அவருக்கு நன்றி. அதிகாரமுள்ள அரசியலில் ஒரு பெண் சாதிப்பது என்பது எத்தனை கடினம் என எனக்கு தெரியும். முதலில் அவர் கொஞ்ச நாள் இருப்பார் பின் வந்துவிடுவார் என்று நினைத்தேன். பின்னால் அவர் மேடையில் பேசுவதை பார்த்து மிரண்டு விட்டேன். அவரிடம் பின் உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள் நான் துணை நிற்கிறேன் என்றேன். அவர் முதல் முறை ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த போது நான் தோற்று அரசியலிலிருந்து வர மாட்டேன் என்றார். மீண்டும் ஒரு தேர்தலில் தோல்வி. அவர் பிரபலமாக, பிரபலமாக சொந்த கட்சியிலும் எதிர்கட்சியிலும் பெரிய எதிர்ப்பு. மூன்றாவது தேர்தலில் வெற்றி பெற்றார் ஒரு யுத்தத்தில் வென்றதாக பேசினார். அது தான் அவரது குணம், அவரது போராடும் குணம் தான் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. ஒரு பெண் கலைத்துறையில் இருந்து அரசியலில் வெற்றிபெற்றதற்கே இந்த விழா என எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் இதில் ஒன்றுபட்டு பாராட்டுவிழா நடத்த ஒன்றிணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் 

இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…

செல்வமணி எனது திரைத்துறை நண்பன், அல்ல குடும்ப நண்பன், ரோஜாவுக்கு நான் தான் பெயர் வைத்தேன். நான் எதை தொட்டு பெயர் வைத்தாலும் விளங்குதே என நான் என் அப்பா அம்மாவை நினைத்து பெருமை கொள்வேன். ரோஜாவுக்கு பெயர் வைத்ததற்கு பெருமை கொள்கிறேன். தனக்கு சரியென்று நினைத்ததை மிக தைரியமாக சொல்லக்கூடிய பெண். எந்த ஒரு விசயத்திலும் மிக தெளிவாக இருப்பார். செல்வமணியை மேடையில் நான் தான் பேச வைத்தேன், இப்போது மிக அற்புதமாக பேசுகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் பெரிய ஆளாக வருவார். தன் மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றி பெற வைத்துள்ளார் செல்வமணி. ரோஜா ஒரு மந்திரியாக பதவி ஏற்றிருப்பது பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது. தென்னிந்திய திரைத்துறையை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட விழாவாக இது இருக்கும். ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும். இந்த விழாவிற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இவ்வாறு அனைவரும் பேசினார்கள்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.