Breaking News :

Friday, October 11
.

நடிகை மனோரமா ஓர் அதிசயம்..


ஒருமுறை பின்னணி பாடகி சுசீலா அம்மாவை தென்னிந்தியாவின் லதா மங்கேஷ்கர் என்று குறிப்பிட்டபோது எம்ஜிஆருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..

நிகரற்ற சுசீலாவை யாருடனும் ஒப்பீடு செய்ய தேவையில்லை. சுசிலா, ஒரு சுசிலாதான் என்று பேசினார்.

அதேபோலத்தான் நடிகை மனோரமாவை "பொம்பளை சிவாஜி" என்று குறிப்பிடும்போது கடுமையாக கோபம் வரும் நமக்கு..

காரணம், யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு திரை உலகில் தனித்தன்மை கொண்டவர் நடிகை மனோரமா..

நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர்..

எந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது

ராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர், கோபி சாந்தா.

1950களில் டைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்..

அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை.

கடைசியில் மனோரமாவுக்கு திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்..

தொடர்ந்து துண்டு ரோல்களே ... இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்..

கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்ட மனோரமாவை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம்தான்.

இதனால் கொஞ்சும் குமரியில் கதாநாயகியாக புரமோஷன் கிடைத்தது.. இத்துடன் அலங்காரி, அதிசயபிறவி, பெரிய மனிதன் என மொத்தம் நான்கு படங்களில் கதாநாயகி.

அப்படியே தொடர்ந்திருந்தால் ஒரு நூறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கலாம். ஆனால் தமிழ்திரையுலகின் அதிர்ஷ்டம், மனோரமாவை நகைச்சுவை பாதைக்கு மாற்றி பெரும்பாலான தமிழ்ப்படங்களில் துவம்சம் செய்யவைத்துவிட்டது.

இல்லையென்றால் காமெடி, குணச்சித்திரம் என ஆயிரம் படங்களுக்குமேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கமுடியுமா?..

மனோரமா நடித்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்கள் மிகமிகக்குறைவு என்றே சொல்லக்கூடிய அளவுக்கு தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தபெருமை என்பது சாதாரண விஷயமா?

சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு. விகே.ராமசாமி என காமெடி உலகில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் அனைவருக்கும் நடிப்பில் ஈடுகொடுத்த ஒரே காமெடி பெண் திலகம் மனோரமா மட்டுமே..

இந்த திறமையால்தான் தேங்காய் சீனுவாசன், சுருளிராஜன்,கவுண்டமணி என அடுத்த தலைமுறை காமெடியன்கள் வந்தாலும் அவர்களுக்கும் இவர்தான் கதி என்ற கட்டாய நிலையை உருவாக்கி கொடிகட்டி பறக்கமுடிந்தது..

மனோரமாவை பொறுத்தவரை ஏராளமான நகைச்சுவை நடிகர்களுடன் நடித்து இருந்தாலும், நாகேஷ் உடன் என்பது மிகவும் ஸ்பெஷல்.

1962-ல் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மனோரமாவிடம் காதல் வலை விரித்து வார்டு பாயான நாகேஷ் அவ்வளவு சேட்டைகள் செய்வார்.

அந்தப் படத்திலிருந்து அதகளம் செய்ய ஆரம்பித்த ஜோடி தொடர்ந்து எண்ணற்ற படங்களில் விதவிதமாய் நகைச்சுவையை வாரி வாரி தெளித்தது.

எம்ஜிஆரின் வேட்டைக்காரன் படத்தில் தனியாக டூயட் கொடுக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவத்தை பெற்றது இந்த ஜோடி..

படங்களில் நடித்தாரா வாழ்ந்துவிட்டு போனாரா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப்போனார் மனோரமா.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஏபி நாகராஜன் புக் செய்தபோது மனோரமாவுக்கு, கேரக்டர் பெரியதாக ஒன்றுமில்லையே என்கிற வருத்தம். ஆனால் ஏபிஎன் சொன்ன வார்த்தைகள் இவை.

''மோகனாவுக்கு ஆடத்தெரியும். சண்முக சுந்தரத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க தெரியும். ஆனா உனக்கு மட்டுமே இது ரெண்டும் தெரியும். அதுக்கும்மேல கள்ள பார்ட் வேஷமெல்லாம் போட்டு பாடவும் தெரியும்.

படத்திலேயே நீதான் சகலகலாவல்லி. அதனால் ஜில்ஜில் ரமா மணி கேரக்டர் பவர்புல் ஆனது. உங்கள் ஃலைப்பையும் தாண்டி பேசப்படும்''

ஏபிஎன் வாக்கு அப்படியே பலித்தது.. சிவாஜி, பத்மினி, நாகேஷ் போன்றோரே வியக்கும் அளவுக்கு அந்த பாத்திரத்தை துவைத்து எடுத்தவர் ஆச்சி

அதனால்தான் ஜில் ஜில் ரமாமணியை உலகமே பல்லாயிரம் தடவை பாராட்டி பாராட்டி ஓய்ந்து போகாமல் இன்னும் பாராட்டிக்கொண்டே இருக்கிறது.

சிவாஜியை வைத்து ஒன்பது வேடங்களில் எடுத்த நவராத்திரியில் பைத்தியம் வேடத்தில் மனோரமா பின்னி பெடல் எடுத்ததை மறக்காமல்.. பின்னாளில் கண்காட்சி படத்தில் ஒன்பது வேடங்களில் மனோரமாவை வரவழைத்து அழகு பார்த்தார் ஏபி நாகராஜன்.

வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜுட் விடும் கமலை தன் பக்கம் லேசாக இழுக்கப்பார்க்கும் சபலிஸ்ட் விமானப்பணிப்பெண் பாத்திரம்...

பாட்டி சொல்லை தட்டாதே படத்தை பாட்டியாகவே முழுதாக தாங்கிய அந்த கெத்து…

கம்னு கெட என்ற ஒற்றை டயலாக்கில் மற்ற பாத்திரங்களை மூட்டைக்கட்டிபோட்ட சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கண்ணம்மா..

கொஞ்சம் பிசகினாலும் விரசமாகப்போகக்கூடிய அளவில் நடிகன் படத்தில் கொடுக்கப்பட்ட அந்த பேபிம்மா ரோல் மற்றும் மைக்கேல் மதன காமராஜனில் ரூபினியின் தயாராக.. மனோரமாவை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் எல்லை மீறிப் போய் இப்படியுமா என்று வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

அருந்ததியில் அனுஷ்காவுக்கு நிகராக தனது சந்திரம்மாவை அவர் உயர்த்திக்காட்டிய சாகசம் என அவரால் கிடைத்த சாகா வரம் பெற்ற பாத்திரங்கள்தான் எத்தனையெத்தனை..

அமரர் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, தாம் கேட்டதிலேயே வியப்பான குரல் மனேரமாவினுடையது என்று சொன்னபோது உண்மையிலேயே வியப்பாக இருந்தது.. மனோரமாவை புகழ்வதற்காக ஓவராக ரீல் விடுகிறாரோ என்று கூட தோன்றியது.

சோவுடன் மனோரமா நடித்த பொம்மலாட்டம் படத்தின் "வா வாத்தியார வூட்டான்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன், ஜாம்பஜார் ஜக்கு சைதாப்பேட்டை கொக்கு" பாடல் படு காமெடி என்றாலும் பால முரளி, அந்த பாடலை அக்குவேணிவேறாக தனது குரலால் ஏற்ற இறக்கங்களை பாடி விவரித்தபோதுதான் மனோரமாவின் இசைப்புலமை புரிந்தது..

அதிலும், நைனா என்ற ஒற்றை வார்த்தையை பாடிவிட்டு அதன் பிறகு அவர் ராகத்தை இழுத்துக் கொண்டே மேலே சென்று அப்படியே கீழே இறங்கும் விதம்..முன்னணி பின்னணி பாடகிகளே மிரண்டு போன தருணம் அது..

உங்கள் விருப்பம் படத்தில் தேங்காய் சீனிவாசன் உடன் "மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா" பாடலை யூடியூபில் போய் தேடிப் போய் பாருங்கள்.. அவ்வளவு அசால்டாக சகல வித்தைகளையும் காட்டி மொத்தமாக இறக்கி ரசிகர்களை சிரிக்க செய்வார்.

அதேநேரத்தில் சென்டிமென்ட் என்றாலும் பெண்களை உருக வைப்பதில் மனோரமாவை நடிப்பு அலாதியானது.

உனக்கும் வாழ்வு வரும் படத்தில் அவர் பாடி நடித்த "மஞ்சக்கயிறு.. தாலி மஞ்சக்கயிறு... பாடல் பட்டி தொட்டியெல்லாம் எல்லா தவறாமல் ஒலித்தது.. அந்தப் பாடல் ஒலிக்காத சுபநிகழ்ச்சிகளே கிடையாது.

அனைத்து மட்ட பெண்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்தவர் மனோரமா. அதனாலேயே பெண்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.

1980களில் கதாநாயகர்களுக்கு அம்மா என்றால் அது மனோரமாதான். சின்ன கவுண்டரின் அம்மாவாகட்டும், அண்ணாமலையின் அம்மாவாகட்டும், தனித்து நின்று விளையாடி உருக வைத்திருப்பார்.. கமல் பிரபு சத்யராஜ் கார்த்தி என மனோரமாவின் பிள்ளையாய் திரையில் வராத நடிகர்களே கிடையாது என்ற நிலைமையை உருவாக்கி வைத்திருந்தார்.

எந்த சூழ்நிலையை தாங்கிக்கொண்டு திரையில் இவ்வளவு சாதனைகளை படைத்து இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால் நிச்சயம் நிச்சயம் ராம் கண்களில் கண்ணீர் வந்தே தீரும்.

ராமநாதன் என்ற நடிகருடன் திருமணம். வெறும் 15 நாள் வாழ்க்கை. அதன் பிறகு அவர் பிரிந்து போய்விட்டார்.

வயிற்றில் உருவான குழந்தையுடன் எதிர்காலமே இருண்டு போன நிலையில் மனோரமா. ஆனால் அவரோ எதற்கும் கலங்கவில்லை.

வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கணவன் வாழ்கிறாரே என்று மூலையில் உட்கார்ந்துகொண்டு கதறவில்லை.

கணவனைப் போலவே அவர் மூலம் பிறந்த மகன் பூபதியாளும் நிம்மதி என்பது சொந்த வாழ்வில் மருந்துக்கும் இல்லாமல் போனது மனோரமாவிற்கு .

இருந்தபோதிலும் தன்னை அழவைக்கும் உலகத்தை சிரிக்க வைக்க வேண்டுமென்று புயலாய் கிளம்பினார். கோடிக்கணக்கான ரசிகர்களை பல தலைமுறைக்கு சிரிக்க வைத்து சிகரத்தையே தொட்டார்.

எழுத எழுத நிறைய மனோரமாக்கள் வந்தாலும் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குணச்சித்திரத்தையும் நகைச்சுவையும் சேர்த்து திணறத் திணற அடித்த அந்த அம்மா கேரக்டர்.. இன்னமும் டிஸ்டர்ப் செய்தபடியே இருக்கிறது .. ஆச்சி கைய வச்சா அது ராங்கா போனதில்லை..

இந்திய சினிமா வரலாற்றில் நம்பமுடியாத பக்கம் என குறிப்பிடப்படவேண்டிய ஆச்சி மனோரமா மறைந்து, இன்றோடு 8ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை நம்ப மறுக்கிறது, அவருடைய நடிப்புக்கு பறிகொடுத்த மனது ..

நன்றி ஏழுமலை வெங்கடேஷ்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.