'தலைவன் தலைவி' படத்தின் பிரஸ் மீட்!

thalaivan-thalaivi-movie-news
'தலைவன் தலைவி' படத்தின் பிரஸ் மீட்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'தலைவன் தலைவி' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. 

'கணவன் மனைவி - அவர்களுக்குள் மோதல் - பிரிவு -  பிறகு ஒன்று சேர்வது' இதுதான் கதை என்பதை, படக்குழுவினரின் பேச்சு உணர்த்தியது. 

பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் நான், "உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் என்ற பட்டியலில்  முதல் 10 இடங்களை உள்ளிட்ட பிடிக்கும் பின்லாந்து, நார்வே நாடுகள் இடையே இரண்டு ஒற்றுமைகள் உண்டு.

ஒன்று.. கடவுள் நம்பிக்கை உள்ளோர் குறைவு.  அடுத்து, விவாகரத்து அதிகம்.

ஆனால் தமிழில் 'விவாகரத்து கூடாது' என்கிற  கருத்தை வலியுறுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. இது பெண்ணடிமைத்தனத்தை  வலியுறுத்துவதாக உள்ளது. உங்கள் படத்திற்கு மட்டுமல்ல பொதுவாகவும் இதைச் சொல்கிறேன்" என்றேன்.

அதற்கு விஜய் சேதுபதி, "படத்தில் பெண் அடிமைத்தனம் ஏதுமில்லை... தவிர, இந்த படத்தில் இரு கதாபாத்திரங்களுக்கு நிகழும் சம்பவங்கள் தான் கதை. மற்றபடி பொதுவாக யாரையும் குறிப்பிடவில்லை" என்றார்  செய்தியாளர் சந்திப்பு என்பதால் அத்துடன் விட்டுவிட்டேன். 

கதாபாத்திரங்களை தங்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் மனநிலை பலருக்கும் உண்டு. ஆகவே  'விவாகரத்து என்பதே தவறு' என்கிற மாதிரி வரும் படங்கள், அவசியமான காரணங்களால் விவாகரத்து பெற்ற நபர்களை - குறிப்பாக பெண்களை -  குற்ற உணர்வுக்கு ஆளாக்கும். 

காரணம் இங்கே,  'ஒருத்திக்கு ஒருவன்' என்பது மட்டுமே எதார்த்தம், நிதர்சனம்.  'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது நடைமுறையில் கிடையாது.

அதே நேரம், கமல் சில வருடங்களுக்கு முன்பு கூட விவாகரத்து ஆன பெண்ணை காதலித்து மணப்பது போன்ற படங்களில் நடித்திருக்கிறார். படத்தின் மையக்கரு அது இல்லாவிட்டாலும் மனதில் தைக்கும் படியான காட்சிகள் அவை. அதற்காக கமலஹாசனை பாராட்டலாம்.

- டி.வி.சோமு