Breaking News :

Monday, October 14
.

1967 நவம்பர் 1-ம் தேதி தீபாவளி வெளியீடு ‘இரு மலர்கள்’.


 

1967 நவம்பர் 1-ம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்தது ‘இரு மலர்கள்’. இதேநாளில், சிவாஜியின் இன்னொரு படமான ‘ஊட்டி வரை உறவு’ படமும் வெளியானது.

 

இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘இருமலர்கள்’ நூறு நாட்களைக் கடந்து ஓடியது. படம் வெளியாகி, 56ஆண்டுகளாகியும் இன்னும் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டே இருக்கிறது ‘இரு மலர்கள்’.

 

அரை நூற்றாண்டு கடந்தும் மணம் பரப்பும் ‘இரு மலர்கள்’

-

காதலிப்பது ஒருவரை. கல்யாணம் செய்துகொள்வது இன்னொருவரை என்று நம் சமூக வாழ்க்கையில் ஏகப்பட்டபேருக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்படியான கதையைக் கொண்டு எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. உணர்வுப் போராட்டங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இருந்துகொண்டு தவிக்கிற சோகத்தையும் கோபத்தையும் குவியலாக்கி மலரவைத்த படம்தான் ‘இருமலர்கள்’.

 

சுந்தர், உமா இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படிப்பவர்கள். ஆரம்பத்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தாலும் பின்னரொரு தருணத்தில், இருவருக்குள்ளும் மலர்கிறது காதல். இருவரும் காதலை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.

 

சுந்தரின் உறவுக்காரப் பெண்ணான சாந்தி, சுந்தரின் வீட்டில் தங்கியிருக்கிறார். மொத்தக் குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறார். தன் மகனுக்கும் சாந்திக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதில் சுந்தருடைய அப்பாவுக்கு விருப்பம். சாந்திக்கும் இதே எண்ணம்தான்!

ஆனால், சுந்தருக்கும் உமாவுக்குமான காதலைத் தெரிந்துகொள்கிறாள் சாந்தி. தன் மனதைத் தேற்றிக்கொள்கிறாள். ஆனால் இதெல்லாம் தெரியாமல், தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதில் ஆவேசம் காட்டுகிறார் சுந்தரின் அப்பா.

-

அங்கே, காதலி உமா, தன் அண்ணனிடம் சம்மதம் வாங்கச் செல்கிறாள். அண்ணனின் விருப்பத்துக்கு மாறாக நடக்க விரும்பாமல், தனக்குத் திருமணம் நடந்துவிட்டதாக காதலன் சுந்தருக்குக் கடிதம் எழுதுகிறாள். உண்மையில் அண்ணனும் அண்ணியும் விபத்தில் இறந்துவிட, அவர்களின் குழந்தையைக் காக்கும் பொறுப்புக்காகவே இந்த முடிவை எடுக்கிறாள்.

 

இதற்கிடையே சாந்திக்கு வேறொரு மாப்பிள்ளைப் பார்க்கிறார்கள். ஆனால் அவனோ, சுந்தருக்கும் சாந்திக்கும் தவறான உறவு இருப்பதாகச் சொல்லிப் புறக்கணிக்கிறான். சாந்திக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான் சுந்தர். திருமணம் நடக்கிறது. பெண் குழந்தையும் பிறக்கிறது.

 

கொடைக்கானலில் மிகப்பெரிய தொழிலதிபராக மனைவி குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்கிறான் சுந்தர். அவனுடைய மகள் படிக்கும் பள்ளிக்கு டீச்சராக வருகிறாள் உமா. டியூஷன் எடுப்பதற்காகவும் வீட்டுக்கு வருகிறாள். சாந்திக்கும் உமாவுக்கும் நல்ல நட்பு உண்டாகிறது. ஆனால் சுந்தரைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள்.

சுந்தரும் உமாவும் சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். புரிந்துகொள்கிறார்கள். இதேசமயத்தில், உமா தனது கணவரின் முன்னாள் காதலி என்பது சாந்திக்குத் தெரியவருகிறது.

உமா, சாந்தியின் வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் நாம் ஏற்பாடு நடத்திவிடக்கூடாது என முடிவெடுக்கிறாள். இதேபோல, முன்னாள் காதலர்கள் இருவரும் ஒன்று சேரவேண்டும் என மனைவி முடிவெடுக்கிறாள். இறுதியில் என்னவானது என்பதை மனம் கனக்கச் சொல்லியிருப்பதுதான் ‘இருமலர்கள்’

சுந்தராக சிவாஜி கணேசன். உமாவாக பத்மினி. சாந்தியாக கே.ஆர்.விஜயா. சிவாஜியின் அப்பாவாக வி.நாகையா. சிவாஜி - கே.ஆர்.விஜயாவின் மகளாக சிறுமி ரோஜாரமணி.

நாகேஷ், மனோரமா, அசோகன் முதலானோரும் நடித்திருந்தார்கள். சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா மூவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தார்கள். அவரவர்கள், அவரவருக்கான கதாபாத்திரத்தை உள்வாங்கி ஆகச்சிறந்த நடிப்பை வழங்கினார்கள்.

 

ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் தன் வசனத்தால் உயிரூட்டினார் ஆரூர்தாஸ். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் கவிஞர் வாலியின் பாடல்கள் அனைத்தையும் எழுதினார். ‘மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள்’ என்ற பாடலும் படமாக்கப்பட்ட விதமும் அற்புதமாக இருந்தது. அதிலும் பாடலில் சிவாஜி ஒரு நடை நடந்துவருவார். இந்த நடைக்காகவே ஏழெட்டு முறை படம் பார்த்த ரசிகர்களெல்லாம் இருக்கிறார்கள். ’கடவுள் தந்த இருமலர்கள்’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. ’அன்னமிட்ட கைகள்’ என்ற பாடலும் இனித்தது. ’மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பாடல், படத்தை இன்னும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிற பாடலாக அமைந்தது. ‘மகாராஜா ஒரு மகாராணி’ என்ற பாடலும் பாடலில் சிவாஜி, கே.ஆர்.விஜயா, ரோஜாரமணி முதலானோரின் நடிப்பும் அசத்தியெடுத்துவிடும்.

 

எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி / இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி / அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக / முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுறையாய்த் தருக / முதுமை வந்தபொழுதும் இளமை கொள்ளும் இதயம் / நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும் / மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் / என்னைச் சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பாடலின் வரிகளில் வாலியின் சிந்தனை ஜொலித்தது.

நன்றி 

இணையத்திலிருந்து 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.