காலை 6 மணி காட்சி - முதல்வர் விஜய்க்கு நன்றி - நடிகர் தனுஷ்
'ஓம்' திரைப்படத்தின் அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி கொடுத்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
செம்மரக் கடத்தில் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. டம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் நிலையில், தமிழகத்தில் அதிகாலை 6 மணி காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ், காலை 6 மணிக் காட்சிக்கு அனுமதி அளித்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.
வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'ஓம்' திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்! அனைவருக்கும் அன்பும், நன்றியும்" எனத் தெரிவித்துள்ளார்