Breaking News :

Monday, June 17
.

“மருதநாயகம் என்ற மர்ம நாயகம்” : ஆசிரியர்; : ‘அமுதன்’


RM 158
வாசிப்புப் பெருவோட்டம் 2021 இலக்கு 50 / நூல் 43
நான்காம் ஆண்டு வாசிப்புத் திருவிழா – பதிவு - 10
வரலாறு சார்ந்த நூல்கள்  : பதிவு -2( நான்காம் வாரம்)
“மருதநாயகம் என்ற மர்ம நாயகம்” 
ஆசிரியர்; :  ‘அமுதன்’
வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம்
324 பக்கங்கள்  விலை: 300 ரூபாய்கள்

திரு.அமுதன் அவர்களை ‘ஆயிரம் ஆண்டு அதிசயம’ என்ற தஞ்சைப் பெரிய கோவில் குறித்த நூலின் மூலம் முதலில் அறிந்து கொண்டேன்.. அந்தத் தமிழ் மன்னன் கட்டிய கோவிலின் செய்திகளோடு அமுதன் அவர்களது ‘தமிழ்’ மீதான பெருமிதம் அந்நூலில் துலங்கக் கண்டேன்..
திரு.தனசேகரன் என்ற அமுதன் மதுரைக் காரர்.. தினத்தந்தி பத்திரிகையில் பலகாலம் பணியாற்றியவர்.. ‘ஆதிச்ச நல்லூர் -கீழடி மண் மூடிய மகத்தான நாகரிகம்’ என்ற அவரது நூல் என்னை அவரிடம் இன்னும் நெருங்க வைத்தது..
‘அகநி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகெங்கும் தமிழர் தடம்’ என்ற நூலின் வாசிப்பிற்குப் பின் அவரது நட்பும் கிடைத்தது.. 
வரலாற்றை அப்படியே பாடம் போல எழுதிச் சென்ற வரலாற்று ஆய்வாளர்கள் உண்டு.. வரலாற்றில் தம் விமர்சனத்தை வைத்து யோசிக்க வைத்த வரலாற்று நூல் வித்தகர்கள் இருக்கிறார்கள்.. வரலாற்றில் புனைவு கலந்தும் புனைவில் வரலாற்றை ஊறுகாய் ஆக்கித் தந்தவர்களும் உண்டு.. புனைவையே வரலாறு என்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.. வரலாற்றுப் புனைவு என்று தலைப்பிட்டு விட்டு இதில் வரலாற்றைத் தேடவேண்டாம் என்று கதைப்பவர்களும் மலிந்து விட்டார்கள்..
அமுதன் தஞ்சைப் பெரிய கோவிலை காட்டிய போதும் ஆதிச்ச நல்லூரைத் தமிழில் அகழ்ந்த போதும் வரலாற்றை அப்படியே தராமல் வியக்கவும் யோசிக்கவும் இடம் விட்டிருக்கிறார்.. நாலைந்து பாத்திரங்களை உலாவவிட்டு புனைவாக்கி ஐயத்தில் ஆழ்த்தவில்லை.. ஆனால் ராஜராஜனும் அவன் அக்கையாரும் பெண்டுகளும் அமைச்சர் குழாமும் பெருந்தச்சனும் தளிச்சேரி பெண்டிரும் கோவிலின் கல்வெட்டுச் செய்திகளில் வந்திருந்து சுவை சேர்க்கத்தான் செய்தார்கள்..
டாக்டர் ஜாகரும் அலைக்சாண்டர் ரியோவும் தியாக சத்தியமுர்த்தியும் சகஜமாக ஆதிச்ச நல்லூரில் நம் கற்பனையில் உலாவினார்கள். 
அது மட்டுமல்ல.. அந்தத் தேடலில் அமுதனுக்கு முன்பு ஈடுபட்டுச் சாதித்திருந்தவர்களை நூலுக்குள்ளேயே போற்றவும் செய்கிறார்..தஞ்சைப் பெரிய கோயில் செய்திகளைத் தரும்போது திரு.குடவாயில் பாலசுப்பிரமணியனையும்¸ ஆதிச்ச நல்லூர் நாகரிகத்தை சாற்றும் போது திரு. பாலகிருஷ்ணன் IAS அவர்களையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்.
இந்த அமுதனுக்குளளும் ஒரு புனைகதை ஆசிரியர் இருந்து கொண்டு அவரை இம்சித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும் போல.. அவர் சமீபத்தில் எழுதி வெளிவந்திருக்கிற¸ “மருதநாயகம் என்ற மர்ம நாயக’த்தில் மருத நாயகம் 18 ஆம் நூற்றாண்டின் வரலாறாகவும்¸ மர்ம நாயகம் அமுதனின் புனைவாகவும் தோன்றுகிறார்கள்.. 
மருதநாயகம் வரலாற்றில் கோர்வை வராத இடங்களில் அமுதன் தனது ஊகப் புனைவை மர்ம நாயகமாகக் கோர்த்து விட்டிருக்கிறார்.. முன்னுரையில் அமுதன் அதை ஐயத்திற்கிடமின்றி சொல்லியும் விட்டார்..

இந்த நூலின் இறுதி வாக்கியம் சர் ஜான் லிண்ட்சே என்ற ஆங்கிலேய போர்க் கலை நிபுணரின் கருத்தாக அமைகிறது.. ‘இத்தனை செலவு செய்து¸ ஆயத்தங்கள் செய்து¸ லஞ்சத்தையும் வஞ்சத்தையும் தூண்டிலாக்கி யூசுப் கான் என்ற ஒற்றைப் போர் வீரனை ஒழித்துக் கட்டியதில் ஆங்கிலேயர் சாதித்ததென்ன?’ என்று லிண்ட்சே யிடம் கேட்டபோது¸ அவர் சொன்ன பதில் மூலம் நூல் நிறைவடைகிறது.. ‘ஒன்றுமில்லை’ என்று அவர் சொன்னாராம்..

‘ஒன்றுமில்லை’ என்ற சொல்லிலிருந்து நான் நூலின் மதிப்புரைக்கு நுனியைப் பிடித்துக் கொண்டு நுழைகிறேன்.. நூலுக்குள் அமுதன் தருகின்ற வரலாற்றுக்குள் மருத நாயகத்தை வளர்த்து வீழ்த்தியதில் ஆங்கிலேயர் சாதித்தது என்னவெல்லாம் என்பதை அவரே சொல்லிவிட்டு ‘ஒன்றுமில்லை’ என்ற நிபுணர் கூற்றை நம்மை யோசிக்க விட்டுவிட்டுப் போகிறார் என்று தோன்றுகிறது.

மருதநாயகம் (இதுதான் உண்மைப் பெயரா என்பதும் மர்மமாகவே இருக்கிறது) என்ற முரட்டுத் தமிழ்ப் பையன் கால வெள்ளத்தில் அலைக்கழிக்கப் பட்டு தஞ்சை புதுவை சென்னை திருச்சி என்று வாளோடும் வன்மத்துடனும் யுத்தவெறி கொண்டு திரிந்து 18 ஆம் நூற்றாண்டின் பின் மத்தியில் மதுரையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநராக தமிழ்நாட்டில் எல்லோரும் அஞ்சுகிற யூசுப்கான் என்ற பராக்கிரமத்தை பெற்றிருந்தமைக்கு காரணம் ஏதேனும் இருந்து தானே ஆக வேண்டும்..? அவன் வீழ்த்தப் பட்டதற்கும் அந்த ஏதேனும் ஒன்றுதானே காரணமாய் அமைதல் வேண்டும்..? அவன் சாவினால் யார் நிரந்தர ஆதாயம் அடைந்தார்கள்..ஆங்கிலேயர்கள் மட்டும் தானே.. மற்றவர்கள் அடைந்தது உண்மையில் ஏமாற்றம் அல்லவா.. 

இந்த வரலாற்றை தெரிந்த ஆவணங்களின் உதவி கொண்டும் ஆவணம் இல்லாத போது கற்பனையைச் சேர்த்தும் சுவாரசியம் குறையாது சொல்லிச் செல்கிறார் திரு.அமுதன்..

இதே 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கை இராமநாதபுரம் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையங்கள் ஆங்கிலேயரை எதிர்த்த போது இந்த யூசுப்கான் இருந்திருந்தால் வரலாற்றின் போக்கில் ஏதேனும் மாற்றங்கள் வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறதே..

19 ஆம் நூற்றாண்டு பிறக்கும் போது¸ 1801 இல் தமிழ்நாடு முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் முழுமையாகப் போயிருப்பது சற்றேனும் தாமதம் ஆகியிருக்கலாம் என்றும் தோன்றுகிறதே..

உண்மையில் 'ஒன்றுமில்லாத’ மருதநாயகம்¸ எல்லாம் ஆன யூசுப்கான் ஆனபின்னே தடுமாற்றம் கொண்டிருக்கிறான்.. அவனது ஆங்கிலேய ஆதரவும் எதிர்ப்பும் சந்தர்ப்பமயமானவை. திரு.அமுதன் இதை போகிற போக்காக நம்மிடம் கடத்துகிறார்.. ஆனால் முதலிலேயே எல்லாம் சொல்லி நம்மை ஆயத்தப் படுத்துகிறார்..

நூலை இப்போது படிக்கும் வரலாற்று ஆய்வுள்ளம் கொண்ட வாசகர்களுக்கு இதன் சார்பு நிலையற்ற தன்மை தெரியும்.. திரு.அமுதன் கத்தி மேல் நின்று கதை சொல்கிற விதம் புரியும்.. 

ஏனெனில் சமகாலத்து வாசகன் மதம்¸ சாதி¸ அரசியல் மற்றும் தத்துவச் சார்புநிலையில் துண்டாடப் பட்டு இருக்கிறான்.. சார்பற்ற தூய்மை நிலை இலக்கியம் என்பது சமகாலத்தில் இல்லை.. அவ்வாறு இருப்பதாக யாரேனும் சொன்னால் அது கற்பனையென்றே நான் சொல்வேன்.. சம காலத்தில் பஞ்சாங்கமும் சோதிட நூல்களும் கோலப் புத்தகமும் சமையல் குறிப்பு நூல்களும்தான் சார்பற்ற நிலை கொண்ட நூல்களாக எஞ்சும்.. 

ஆகவே சமகால வாசகன் தன் சார்புநிலையை வரலாற்றில் தேட முயல்கிறான்.. அப்படிச் சார்பு நிலை கொண்டு இந்த நூலைப் படிக்கிற வாசகன் சற்று ஏமாற்றம் அடையக் கூடும்.. நடந்ததை நடந்தபடி சொல்கிறபோது உண்மையின் சூடு எல்லா பக்கமும் பரவுதல் இயல்பு..
ஏனெனில் இதில் பூலித் தேவர் வருகிறார்.. அழகு முத்துக் கோன் வருகிறார்.. கட்டபொம்முவின் பாட்டனார் வருகிறார்.. எட்டயபுரத்தார் வருகிறார்.. திருவாங்கூர் மன்னர் வருகிறார்.. ஹைதர் அலி வருகிறார்..ஆனால் எல்லாருக்கும் யூசுப்கான் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது…

யூசுப்கான் ஆங்கிலேயரின் வரி தண்டல் பிரதிநிதிதான்.. இவரைப் போலவே ஆற்காட்டு நவாப்புக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் பாளையக் காரர்களிடம் வரி பிரித்துத் தரும் பிராமணர்கள்¸ முதலிகள்¸ பிள்ளமார்கள் இருந்திருக்கிறார்கள்.. ஆனால் யூசுப்கானிடம் மட்டும் பாளையக்காரர்கள் அச்சம் கொண்டதேன்..? நவாப் முகம்மதலி வாழ்நாள் முழுவதும் பிரெஞ்சுக் காரர்களுக்கு பயந்து கொண்டு ஆங்கிலேயரிடம் நட்பு கொண்டு அவர்களுக்கு வரி வசூல் குத்தகையை அளிக்கத் தயாரானவன் யூசுப்கான் அந்த வேலையைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பது ஏன்..? நவாப்பின் மாய்மாலங்களுக்கு இசையாமல் ஆங்கிலேயர்கள் யூசுப்கான் மீது நம்பிக்கை வைத்திருந்தது ஏன்..? அதுதான் கொள்ளை..!
கோயிலைக் கொள்ளை அடிக்கிற இசுலாமியத் தளபதிகள்¸ குறிப்பாக  மாலிக்காபூர் பற்றி நமக்கு நிறைய கதைகள் சொல்லப் படுகிறது.. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் மராட்டிய சிவாஜி வழியில் வந்த தஞ்சை மராட்டியனும் கொள்ளை அடிக்கிறான். திருவாங்கூர் வீரனும் கொள்ளை அடிக்கிறான். புதுக்கோட்டைத் தொண்டைமானின் படை வீரனும் கொள்ளை அடிக்கிறான்.. 
வெள்ளைப் பறங்கியனும் பிரெஞ்சுக் காரனும் கோவில் விக்கிரங்களை உலோகங்களாக மட்டுமே பார்த்துச் சூறையாடி மூட்டை கட்டிக் கொண்டு போகிற சம்பவங்களை நூலில் பார்க்கிற போது மாலிக்காபூர்களை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிற வாசகன் சற்று நெளியக் கூடும்..

18 ஆம் நூற்றாண்டு வரலாறு என்றால் ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு ஒரு மகத்தான ஆவணம்.. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து அமுதன் மேற்கோள் காட்டுகிற ஒரு பகுதியில் இந்தக் கொள்ளையர் நிலை அழகாகக் காட்சியாகிறது..
1752 பிப்ரவரி13 ஆம் தேதிய நாட்குறிப்பில் சந்தா சாகேப் படையும் ( தளபதி அவரது மகன் ரசா சாயபு) பிரெஞ்சுப் படையும் கூட்டாக சென்னைப் பட்டணத்தை கொள்ளை கொண்ட செய்திகளை ஆனந்த ரங்கப் பிள்ளை குறித்திருக்கிறார்.. அந்தப் படையினர் பூந்தமல்லி¸ மயிலாப்பூர்¸ பரங்கிமலை¸ சின்னமலை¸ குன்றத்தூர் ஆகிய இடங்களைக் கொள்ளையிட்ட சேதிகளைச் சொல்கிறார்.. கூலிக் காரர்கள் கூட பெருஞ்செல்வந்தர்கள் ஆனார்கள் என்று தனது நாட்குறிப்பில் எழுதுகிறார்..

மதுரைப் பாண்டியப் பேரரசு வாரிசுரிமைப் போரால் சீர்குலைந்த கதை நாமறிவோம்.. இந்தப் பேராசை பிடித்த பாண்டியப் பூனைகளுக்கு அப்பம் பங்கிடவா மாலிக்காபூர் வந்தான்..? அல்லவே..
டெல்லி ஆட்சியின் கால்களுக்குள் அல்லவா மதுரையைக் கொண்டு வந்தான்... தமிழ் நாட்டின் முதல் அந்நிய ஆட்சி.. 
அப்புறம் குமார கம்பணன் வந்தான்.. நாகம நாயக்கன் வந்தான்.. விசுவநாத நாயக்கன் வந்தான்.. தமிழ் நிலத்தை பாளையங்களாக்கினான்.. பாளையக் காரர்கள் தனிக்காட்டு ராஜாக்களாக மக்களைச் சுரண்டிக் கொழுத்தார்கள். மராட்டியன் வந்தான்.. தஞ்சாவூரில் இருந்து கொண்டு பக்கத்து பாளையங்களை அச்சுறுத்தினான்.. ஒளரங்க சீப்பின் ஏஜெண்ட்களாக ஹைதராபாத் நிஜாமும் அவன் கைத்தடியாக ஆற்காட்டு நவாப்பும் வந்தார்கள்.. அப்புறம் ஐரோப்பியர் வந்து எல்லாருடைய பூசல்களிலும் நுழைந்து மொத்தமாகத் தமிழ்நிலத்தை கொள்ளை இட்டார்கள்.

இவர்களுக்குள் நடந்த சண்டைகளாகவே 18 ஆம் நூற்றாண்டு வரலாறு அசிங்கப் பட்டு கிடக்கிறது. இவர்களுக்காக நடந்த சண்டையில் உள்நாட்டு வீரர்கள் யாருடனும் யாருக்காகவும் போரிட்டு இருக்கிறார்கள்..யாரிடம் இருந்தால் அதிக லாபமோ அவர்களிடம் போய் அவர்களுக்காக சண்டை இடுகிற கூலிப்படைகள் நிறைய இருந்தன.. 
சண்டையைத் தொழிலாக கொண்டு¸ யாருக்கேனும் போர் செய்து கிடைத்த இடத்தில் கொள்ளையிட்ட கும்பல்களில் நெல்லூரில் இருந்த கூலிப்படையும் ஒன்று.. அங்கிருந்த போர்வீரர்களில் முனைப்பும் உக்கிரமும் கொண்டவன் யூசுப்கான்.. அவனது திறமை இராபர்ட் கிளைவுக்கு மிக முக்கியமான ஆற்காட்டுப் போரில் தெரிய வர ஆங்கிலேயப் படையில் முக்கியமான தலைவனாகிறான் யூசுப்கான்.. அவன் எப்போது முகமதியன் ஆனான் என்பதற்கும் ஆதாரமில்லை..
அதற்குமுன் தஞ்சாவூரிலும் (இது அமுதனின ஊகம்) பாண்டிச்சேரியிலும் (இது வரலாறு) போர் பயிற்சி பெற்று சந்தர்ப்ப வசத்தால் நெல்லூர் கூலிப்படைக்குப் போனவன் யூசுப்கான்.. சந்தாசாகேப் படையிலும் போரிட்டு இருக்கிறான்.. அப்போதுதான் கிளைவ் கவனத்திற்கும் தெரிய வருகிறான்.. அதனால்தான் முகம்மதலிக்கு அவன் மீது வெறுப்பு வந்திருக்க வேண்டும்.. 

ஆங்கிலேயப் படைக்கு ஆற்காட்டு நவாப் முகம்மதலி தான் பட்ட கடனை அடைக்க மதுரை – திருநெல்வேலி பாளையங்களில் வரி வேட்டை நடத்திக் கொள்ள ஆங்கிலேயருக்கு குத்தகை அளிக்கிறான். குத்தகையை வசூலிக்க ஆங்கிலேயரின் பிரதிநிதியாக யூசுப்கானை நியமிக்கிறது ஆங்கிலக் கம்பெனி. முகம்மதலி இதை ஏற்கவில்லை.. தன் தம்பி மாபூஸ்கானே வரி வசூல் செய்து ஆங்கிலக் கம்பெனிக்கு சேர வேண்டியதைத் தருவதாகச் சொல்கிறான்.. கம்பெனிக்கு முகம்மதலியின் கள்ளத்தனம் தெரியும்.. ஆகவே மதுரைக்கு கம்பெனியின் பிரதிநிதியாகப் போகிறான் யூசுப்கான்..

அந்த ஆரம்பத் தகறாரின் உண்மை என்ன..? அது பணம்..கொழுத்த பணம்..பாளையக்காரர்களிடம் வசூலாகும் கொள்ளைப் பணம்.. வந்த வரவில் பெரிதும் மறைக்கப்பட்டு உள்நாட்டு பிரதிநிதிகளான அந்தணர்கள்¸ முதலியார்கள், பிள்ளைகள் ஆகியோரால் சேர்க்கப் பட்ட பணம்..அதில் ஒரு பகுதி லஞ்சமாக நவாபின் பிரதிநிதியான மாபூஸ்கானுக்கு கொடுக்கப் படும்..
ஆகவே இந்த வசூலின் மொத்தமும் தனக்கு வந்து சேரவேண்டும் என்று நினைத்த கம்பெனி தனது ஆளாக யூசுப்கானை அனுப்புகிறது..
யூசுப்கான் இந்த மாபூஸ்கான் என்ற குட்டி நவாப்பைத் தாண்டி வரி வசூலில் கடுமை காட்டுகிறான்.. பாளையக் காரர்களுக்கு அச்சமூட்டுகிறான்.. அவனது போர் வெறி மிகக் கொடூரமானது..மிக்க அபாயமான நேர்மையாளன். எதிர்ப்பவரை அடித்து நொறுக்குகிறான்.
சிவகங்கை இராமநாதபுர கள்ளர் அரசுகள் யூசூப்கானுக்கு ஒத்துழைக்கின்றன.. பாஞ்சாலங்குறிச்சியும் எட்டயபுரமும் கூடத்தான்..

திருநெல்வேலி மேற்குப் பாளையங்கள் மட்டுமே¸ பலவீனப் பட்டு கிடக்கும் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் அஞ்சாமல் பூலித்தேவர் தலைமையில் வரி தர மறுக்கின்றன.  திருவாங்கூர் மன்னரும்  யூசுப்கானின் வளர்ச்சியை விரும்பவில்லை.. அவரும் பூலித்தேவருடன் சேர்ந்து கொள்கிறார்..
இந்த அணியில் மாபூஸ்கானும் சேர்ந்து கொண்டு பூலித்தேவருடன் சேர்ந்து யூகூப்கானைத் தோற்கடிக்கிறார்கள்.. யூசுப்கான் பெற்ற முதல் தோல்வி..!

அதே பூலித்தேவரை எவ்விதம் யூசுப்கான் வென்றார்..? மதுரையின் ஆளுனராக யூசுப்கான் செய்த காரியங்கள் என்ன.. சில நாட்களிலேயே ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டிய நிலைக்கு யூசுப்கான் எவ்விதம் ஆளானான்? கான்சாகிப்பின் இந்த ஆங்கிலேய எதிர்ப்பு¸ தன்னாட்சி சுயநலத்திற்கானதா? இல்லை அந்நிய எதிர்ப்பு புரட்சியா? யூசுப்கான் புரட்சிக் காரனா.. சந்தர்ப்பவாதியா..? ஹைதர் அலி முதல் பூலித்தேவர் வரை எல்லாரும் யூசுப்கான் ஒழிவதில் ஆர்வம் காட்டியதேன்..? தளர்வில்லாத குயுக்தியும் திறமையும் வாய்த்த யூசுப்கான் எவ்விதம் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான் என்பதெல்லாம் வாசகர்கள் படிக்க விட்டு விடுகிறேன்..

இந்த யூசுப்கான் வரலாற்றைச் சொல்வதன் வழியாக 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு பாளையக்கார பிரபுக்களின்¸ ஆற்காட்டு நவாபின்¸ உள்நாட்டு மேல்சாதி மனிதர்களின் பணவெறி பிடித்த பக்கத்தை தமிழ் சமூகம் அறிய தந்திருக்கும் அமுதனுக்கு ஒரு சபாஷ்!

ஆங்கிலேயருக்கு பயந்து கொண்டு ஆற்காட்டு நவாபின் பிரதிநிதி மியானோ என்பவன் மதுரைக் கோட்டையைக் கைவிட்டு கோவில்புரி என்னும் ஊரில் இருந்த கோட்டை போன்ற பெரிய கோயிலில் ஒளிந்து கொண்டான்.. ஆங்கிலத் தளபதி ஹெரான் என்பவன் எதிரியைப் பிடிக்கும் சாக்கில் கோட்டையைச் சூறையாட உத்தரவு இட்டான்..அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த யூசுப்கான் அதை ஆதரிக்கவில்லை. மறுத்துப் பார்க்கிறான். கோயிலில் கிடைக்கப் போகும் செல்வங்களில் ஹெரானுக்கும் படை விரர்களுக்கும் இருக்கும் ஆசையை யூசுப்கானால் தடை செய்ய முடியவில்லை.. கோயில் சூறையாடப்பட்டு தளபதி ஹெரான் வெண்கல விக்கிரகங்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறான்.. 
கொள்ளை போன பொருட்களை கள்ளர் சமூகத்தினர் சூடு தணியும் முன்பே மீட்டிருக்கின்றனர் என்பது அடுத்த சுவாரசியம்..
கோவில் குடி எங்குள்ளது...? அங்கே கொள்ளையடிக்க பட்ட கோயில் எது..?
நீண்ட தேடலுக்குப் பின்னர் இந்தக் கோயிலின் தடத்தை கண்டறிகிறார் வரலாற்று ஆர்வலர் திரு.அமுதன்.. 

அது மதுரைக்கு கிழக்கில் உள்ள திருமோகூர் பெருமாள் கோயில்தான்.. 
கோயிலின் தல வரலாறு இந்த ஹெரான் என்ற ஆங்கிலேய அதிகாரியின் கோயில் கொள்ளையை பதிவு செய்து வைத்திருக்கிறது.

இது போன்ற வரலாற்றுத் தேடல்களும் நூலுக்கு சுவை கூட்டுவனவாக உள்ளன..

மருத நாயகம் என்ற கான் சாகிப் என்ற யூசுப்கானின் தடயமே இருக்கக் கூடாது என்று நினைத்த ஆங்கிலேயரும் ஆற்காட்டு நவாப்பும் யூசுப்கான் உடலை தலை¸ முண்டம்¸ கைகள் கால்கள் என பாகங்களாக வெட்டிப் புதைத்த கொடுமையும் நூலில் பதிவாகிறது..

அவர்கள் தடயத்தை அழித்திருக்கலாம்..ஆனால் மக்கள் அந்த நாயகனை மறக்கவில்லை.. அவனது வரலாறு ‘கான் சாகிப்புச் சண்டை’ என்ற நாட்டு பாடல் ( நா.வானமாமலை சேகரிப்பு) ஒன்றில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை¸ அந்தப் பாடல் கூறும் சில சம்பவங்களோடு இணைத்துச் சொல்லிப் போகிறார் திரு.அமுதன்.. 

வரலாற்றின் சுவடுகளை நான் தந்திருக்கிறேன்.. யூசுப்கானை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று அமுதன் நூலில் கோடி காட்டியிருக்கிறார்..
இந்த நூலுக்கு திரு.கமலஹாசன் அணிந்துரை தந்திருக்கிறார்.. நூல் பற்றி எந்த முன்வரைவும் வேண்டாம் என்று நான் தீர்மானித்துக் கொண்டதால் இந்த விமர்சனத்தின் முந்தைய பத்தியை எழுதி முடித்த பிறகே அணிந்துரையைப் படித்தேன்..
ஏறக்குறைய என் புரிதலும் அவர் புரிதலும் ஒத்துப் போவதைக் கவனித்தேன்.. மருத நாயகத்தை முதல் சுதந்திர வீரன் என்கிற அளவுக்கு கமல் உயர்த்திப் பிடிப்பதை மட்டும் நான் ஏற்கவில்லை.. நூலைப் படிப்பவருக்கு அப்படி எண்ணம் வருமா என்று தெரியாது.. திரு.கமலஹாசனுக்கு இந்தக் கதை அவரது கனவுக் கதை அல்லவா..!
'Big Boss' இந்த நூலை இந்த சீசனில் அறிமுகம் செய்யலாம்.. யார் கண்டது..
என்னளவில் 18 ஆம் நூற்றாண்டுக்குள் சில பொழுதுகள் வாழ்ந்து வந்த அனுபவம் கிடைத்தது..
நன்றி..திரு.அமுதன் என்ற Muthappan Dhanasekaran Dhanasekaran அவர்களுக்கு..       அதிகமாகத் தெரியாத செய்திகளுக்கும் அவற்றின் புரிதலுக்கும்..

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.