Breaking News :

Saturday, April 20
.

தைப்பூசம் ஏன் கொண்டாடுகிறோம்?


சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் கடும் தவத்தின் மூலமாக பல வரங்களைப் பெற்றனர், சூரபதுமனும் அவனது தம்பிகளான தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோரும். அதில் முக்கியமானது, ‘தங்களது மரணம் நிகழ்ந்தால், அது சிவபெருமானுக்கு நிகரான சக்தியால்தான் நிகழ வேண்டும்’ என்பதாகும். 

இவர்கள் மூவரும் தாங்கள் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினா். தேவர்களின் தலைவனான இந்திரனும் கூட, யாரும் அறியாத ஓரிடத்தில் போய் மறைந்து கொண்டான். சிறையில் வாடியபடியே தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் நோக்கி தங்கள் பிரார்த்தனையை வைத்தனர்.

அவர்கள் ஈசனால்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவரிடம் சென்றனர்.

அங்கு ஈசன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் தைரியம் எவருக்கும் இல்லை. எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது காம பாணம் வீசச் செய்தனர். 

இதனால் கண் விழித்த ஈசன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியை வெளிப்படுத்தினார். அவை ஆறு தீப்பொறிகளாகப் பிரிந்து கங்கையை அடைந்தது. அதனை வாயுதேவன், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். 

அங்கு அந்த ஆறு தீப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. அவரே முருகப்பெருமான்.

முருகப்பெருமான் அவதரித்தது வைகாசி விசாகம் ஆகும். அவர் சூரபதுமர்களை வதம் செய்தது ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அன்றைய தினம்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அப்படி சூரபதுமர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு பார்வதேவி ஞானவேல் வழங்கினார். 

பார்வதியிடம் இருந்து முருகன் ஞானவேல் பெற்ற தினத்தையே, தைப்பூசத் திருநாள் என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

பழத்திற்காக கோபித்துக் கொண்டு, ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் நின்ற இடம் பழனி. அந்தத் திருத்தலத்திற்குச் சென்றுதான், பார்வதி ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தான், தைப்பூசத் திருநாள், பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது. முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்றதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர் வரை மனம் விரும்பி கொண்டாடும் விழாவாகவும் தைப்பூசம் உள்ளது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சொல் வழக்கு. எனவே மலை மீது இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தைப்பூசத் திருநாளில் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால் தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள். 

தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். 

எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.