Breaking News :

Sunday, October 06
.

ஆடியில் கூழ் வார்ப்பது ஏன்?


ஜமதக்னி முனிவரும் அவர் மனைவியான ரேணுகா தேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாவசு, பரசுராமன் என நால்வர் பிறந்தார்கள். 

அதன்பின்...ஒருசமயம், கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகா தேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். அப்போது, இந்திரன் வருணனை அழைத்து மழை பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால், அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து போய், உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாதநிலையில் காட்டில் இருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இதுவே, அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவானவரலாறு. வேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி, காட்டில் வாழ்ந்தவர்களிடம், ‘பசிக்கிறது’ என உணவு கேட்டாள்.அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று, “அம்மா! நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். நீயோ, அந்தணப் பெண்ணைப் போலத் தோற்றமளிக்கிறாய்.

உனக்கு எங்கள் உணவைத் தரக் கூடாது. அதற்குப் பதிலாக பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள்” என்று அளித்தனர். இந்த பச்சரிசிமாவையே திருநெல்வேலி மாவட்டகிராமங்களில் ‘துள்ளு மாவு’ என்கிறார்கள். 

உரலில் இட்டு இடிக்கும் போது துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசிமாவு கொண்டு ரேணுகா கூழ் காய்ச்சிக் குடித்து பசியாறினாள். அவர்கள் தந்ததைக் கொண்டு பசி யாறிக் கொண்ட ரேணுகாதேவி, சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள்.அப்போது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. 

கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள்.சிவபெருமான் அவளுக்கு காட்சியளித்து,“ ரேணுகாதேவி! சக்தியின் அம்சம் நீ! மனித குலத்தை தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள், மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே, அந்த துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக் கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்கு!” என்று வரம் அளித்து மறைந்தார். 

அதன் பின், ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள்.இந்த நிகழ்ச்சி மழைக்காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பெண்கள் வேப்பிலை ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும், அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியை, புனிதமான ஆடி மாதத்தில் 
வேண்டுகிறோம்..

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.