Breaking News :

Friday, April 19
.

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம்


திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில்  கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களையும் கொண்டது.
திருவானைக்கா எனப்படும், திருவானைக்கோவில் திருச்சிக்கு 
அருகே அமைந்துள்ள மாபெரும்சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்,  அருணகிரிநாதர், தாயுமானவர்,  ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம்என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில்  ஒன்றான #நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது. 

தல வரலாறு:
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

தலச் சிறப்புகள்:
பஞ்சபூத தலம்: நீர்த்தலம்திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில்  அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கடும் கோடை காலத்திலும், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம், நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி 
என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.  

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க 
ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். 

அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

அம்பிகை வழிப்பட்ட லிங்கம்
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

குபேர லிங்கம்மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால், சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கும், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமையவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும், இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியையும்,  ஜம்புகேஸ்வரரையும்  மனம் உருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

சிற்பங்கள்பல அரிய சிற்பங்களும் இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடது புரம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள். 

ஆலய பிரகாரம் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழி வரலாற்றுச் சிறப்புகள் கல்வெட்டுகள் பல்வேறு  சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிகவும் தொன்மையானவை.

அரசர், சான்றோர் திருத்தொண்டு இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ  பாண்டியர்கள் மட்டும் அன்றி போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள்,  மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களை செய்வித்தவர் இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள். நீலகண்ட நாயக்கர் நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளுச செய்தார். சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோயிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத் தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர். சந்தபேந்திரன் நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பியருளினார்.வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புதம் காலமும் இதுவேயாகும்.பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தில் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை ஒட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர். திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறையிலியாக அளித்தான்.திருத்தலப் பாடல்கள்
திருவானைக்கா நாயன்மார்கள் 
மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் கீழே:

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

மூலவர்:  ஜம்புகேஸ்வரர்
பிறபெயர்கள்: திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்: வெண்நாவல்
தீர்த்தம்: காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முற்பட்டது.
சிறப்பு: நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றோரின் பாடல்கள் பெற்ற தலம்.

ஓம் நமசிவாய...!


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.