Breaking News :

Tuesday, April 16
.

முதல்வனின் முதல் கோவில்...!


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய
 ஸ்ரீ கணேச பஞ்சரத்ன ஸ்லோகம்
  
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம்
னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம்

விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி அருகே ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில்

கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில். 

கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. 

கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் கொங்கணம் கடற்கரையில் இருந்து ஆயிரத்து எட்டு பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.

ஆனால் அங்கு வந்தவர்களோ 1007 பேர்தான். 

ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது. 

பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டு விநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார். 

இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது.

யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராம தானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது. 

தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள். 

பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது.

இத்திருக்கோவிலில் மஹா மண்டபத்திற்கு வெளியில் தெற்கு நோக்கி ஐந்து முகங்கள், 13 கரங்கள் (எட்டு கரங்கள் மற்றும் ஐந்து தந்தங்கள்) கொண்டு பஞ்ச முக விநாயகர் காட்சி அளிக்கிறார்.

விநாயகருக்கு என்று தனியாக தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவம் என நடைபெறும் விநாயகர் கோவில்கள்  ஆறுமுகமங்கலம் ஸ்வாமி ஶ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், மணிமூர்த்தீஸ்வரம் ஶ்ரீ உச்சிஷ்ட விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி ஶ்ரீ கற்பகவிநாயகர் ஆலயம், பாண்டிச்சேரி ஶ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் ஆகும்.

இத்திருக்கோவில் 5 நிலை ராஜகோபுரம் கொண்ட கோவிலாகும். ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் நடைபயணம் (பரிக்ரமா) மேற்கொண்ட போது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்காக ஆறுமுகமங்கலம் வழியாக வந்த போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது  இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடினார். அதைத்தொடர்ந்து  திருச்செந்தூருக்கு சென்று சுப்ரமணியர் சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார். ஆதிசங்கரர் தாம் பாடிய கணேச பஞ்ச ரத்ன கீர்த்தனையை தாமே எழுதி கையொப்பமிட்ட செப்பு பட்டையம் இன்றும் இத்திருக்கோவிலில் உள்ளது. சித்திரை திருவிழாவின் 6ம் திருநாளன்று இந்த செப்பு பட்டையம் பொதுமக்களின் தரிசனத்திற்கு காண்பிக்கப்படும். மற்ற நாட்களில் மூலவர் அருகில் வழிபாட்டில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஸ்வாமி ஆயிரத்தெண் விநாயகர் மீது ஒளவையார் விநாயகர் அகவல் பாடினார்.

இத்திருக்கோவிலின் மூலவரான ஸ்வாமி ஆயிரத்தெண் விநாயகருக்கு "ஸ்வாமி" பட்டம் பெயருக்கு முன்பு வழங்கப்படுவது தனி சிறப்பாகும்.

வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள். 

சுப்ரமணிய ஸ்வாமிக்கு ஐப்பசி மாதம் சஷ்டி விழா நடைபெறுவது போல ஸ்வாமி ஆயிரத்தெண் விநாயகருக்கு மார்கழி மாதம் ஆறு நாட்கள் சஷ்டி விழா நடைபெறும். "விநாயகர் நோன்பு" என்றழைக்கப்படும் இவ்விழாவின் ஆறு நாட்களும் பஞ்சமுக விநாயகர் உள் ரதவீதி எழுந்தருளல் நடைபெறும்.

சித்திரை மாதத்தில்  10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திருவீதி உலா வருவார். 

இத்திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சோமவாரம் ஆகிய விழாக்களும் நடைபெறும்.

இந்த விநாயகரை தமிழகம் முழுவதும் உள்ள பல பிராமணர்கள் மற்றும் ஆறுமுகமங்கலம், கொற்கை, மாரமங்கலம், முக்காணி, ஆத்தூர் ஆகிய ஊர்களின் சில சைவ வேளாளர் குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.