Breaking News :

Sunday, September 08
.

கருடரின் கர்வத்தை அழித்த சிவபெருமான்


திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாயமாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான்.

பரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார். எனவே நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டார். கூடவே லக்ஷ்மணனும்.

இதை நாரத மகரிஷி பார்த்து பதறிப்போய், வைகுண்டம் போய் கருடனிடம், “இராமபிரானை இந்திரஜித்தின் நாகபாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும். நீ உடனே சென்று இராமபிரானை காப்பாற்று” என்கிறார்.

கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். பரமனையே காப்பாற்றியதால் கருடனுக்கு கர்வம் ஏற்பட்டது.

“என்ன நாரதரே இராமர் பரம்பொருள் அவரே எல்லாம் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் இல்லாவிட்டால் இராமரை யார் காப்பாற்றியிருப்பார்கள்..?” என்றார்.

கருடனுக்கு ஏற்பட்டுள்ள கர்வத்தை புரிந்துகொண்ட நாரதர், இந்த சந்தேகத்தை சத்தியலோகம் சென்று பிரம்ம தேவரை கேட்கும்படி ஆலோசனை கூறினார்.

உடனே சத்தியலோகம் சென்ற கருடன் அங்கு பிரம்மதேவரிடம் கேட்க,

பிரம்மதேவரோ “நான் சதாசர்வ காலமும் தவத்தில் இருப்பவன். எனக்கு எப்படி அது பற்றி தெரியும். ஒருவேளை சிவபெருமானிடம் கேட்டுப்பார். எனக்கு தெரிந்து அவர் ஒரு சிறந்த ராம பக்தர். உன் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்..!” என்றார்.

உடனே கருடன் கயிலாயம் சென்றான். அங்கு சிவபெருமானை பார்க்க, தேவாதி தேவர்களும் ரிஷிகளும் காத்திருக்க, சிவபெருமான் தரிசனத்திற்கு வர தாமதமானது.

கைலாயத்தில் ஒரு நொடி என்பதன் கணக்கே வேறு. சில நொடிகள் கருடன் காத்திருக்க அதற்குள் பல யுகங்கள் முடிந்திருந்தன.

கருடன் இறுதியில் நந்தியிடம் கெஞ்சினார். “நந்தி பகவானே, ஒரு பெரும் சந்தேகத்தை பரமேஸ்வரனிடம் கேட்க வந்திருக்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் தரிசனம் தரச் சொல்லுங்களேன். நான் மட்டுமல்ல இங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர் தரிசனதிற்காக காத்திருக்கிறார்கள்” என்று கூற,

“சுவாமி பூஜையில் இருக்கிறார். அது முடிந்ததும் வருவார்..!” என்று நந்தி கூற கருடன் திடுக்கிட்டார்.

என்னது சிவபெருமான் பூஜையில் இருக்கிறாரா..? முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கே அவருக்காக காத்திருக்க அவர் யாரை பூஜித்துக் கொண்டிருக்கிறார்..? என்ற சந்தேகம் ஏற்பட்டது கருடனுக்கு.

அடுத்த கணம் அங்கே பிரத்யட்சமான சிவபெருமான், 

“கருடா நான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை பூஜித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக அழைத்தது ஏனோ..?”

கருடனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

“சுவாமி… இங்கே முப்பத்துமுக்கோடி தேவர்களும் யுகயுகமாக தங்கள் தரிசனத்திற்கு காத்திருக்க, தாங்களோ ராமனை பூஜித்ததாக சொல்கிறீர்கள். நானோ அவரது மகத்துவம் உணராத பாவியாகிவிட்டேன். என் கர்வம் இத்தோடு ஒழிந்தது. இராமபிரானை நாகபாசத்திலிருந்து விடுவித்ததால் தலைக்கனத்தோடு திரிந்தேன். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மீது எனக்கு மாறாத பக்தி ஏற்பட என்ன செய்யவேண்டும்..? அதற்கு அருள் செய்யுங்கள்…” என்று கேட்டுக்கொள்ள....

பரமேஸ்வரன், மெலிதாக புன்னகத்தார்...

ஒரு பறவைக்கு மற்றொரு பறவையின் மூலமே ஞானத்தை புகட்டவேண்டுமே என்று திருவுள்ளம் கொண்ட கங்காதரன், “கருடா, அதை என்னால் விளக்க இயலாது. அதற்கு சாதுக்களின் சத்சங்கம் வேண்டும். நீ நேராக கயிலையின் வடக்கே உள்ள நீலாச்சலத்திற்கு செல். அங்கு காகபுசுண்டி ஹரியின் பெருமைகளை இதர ஜீவராசிகளுக்கு கூறிக்கொண்டிருப்பார். அவர் உனக்கு ராமபிரானின் மகத்துவத்தை விளக்குவார்” என்று கூறி மறைந்தார்.

கருடனும் நீலாச்சலத்திற்கு சென்று காகபுசுண்டியை வணங்கி, இராமபிரானின் பெருமைகளை கூறுமாறு கேட்டுக்கொள்ள, அவரும் இராமபிரானின் பெருமைகளை விளக்கி, அனைத்தும் இராமபிரான் உருவாக்கிய மாயையே என்று விளக்கி கூறினார்.

“சுவாமி… இராமபிரானை விட மகத்துவம் மிக்கவர் அண்ட சராசரத்தில் எதுவுமில்லை என்பதை புரிந்துகொண்டேன். நன்றி..!”

“இல்லை கருடா… இராமபிரானை விட மகத்துவம் மிக்கது ஒன்று இருக்கிறது….”

“என்ன இராமபிரானைவிட மகத்துவம் மிக்கது இருக்கிறதா..?” கருடன் ஆச்சரியத்திலும் குழுப்பத்திலும் மூழ்க...

“இராமநாமமே அது. இராமனைவிட அவன் நாமத்திற்கு மகத்துவம் அதிகம்!” என்றார் காகபுசுண்டி.

கருடனும் தெளிவுபெற்று அது முதல் இராமபக்தியில் சிறந்து விளங்கினார்.

ஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே

– விஷ்ணு சஹஸ்ர நாமம்

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் பரமேஸ்வரன் பார்வதியிடம் கூறிய இந்த வரிகளின் அர்த்தம் தெரியுமா..?

ராம ராம ராம என்று ஒரு முறை கூறினாலே மகாவிஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது தான்.

ஸ்ரீ ராம ஜெயம்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.