Breaking News :

Sunday, October 13
.

இராமேஸ்வரம் கோவில் அற்புதங்கள்


ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி
பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர்
கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.

இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த
மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது

இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.

இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய
பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும்.

மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம்
உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.

பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.

இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

ஒரு முறை சிலர்,ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம்பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

காலில்சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி

சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
அவனது குழந்தை பாக்கியம்
இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே
அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள்.

அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக
அருளுகிறார்.

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவரகசியமாகும்.

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி
தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம்.,உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து பயன்பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.