Breaking News :

Wednesday, April 24
.

குலசை முத்தாரம்மன் வரலாறு


நெல்லையில் இருந்து சுமார் 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம். திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. குலசேகரப் பட்டினத்தில் பல கோவில்கள் அமைந்துள்ளன. என்றாலும் முத்தாரம்மன் கோவில் என்றால் தென் தமிழகத்தில் தெரியாத மக்களே இருக்கமாட்டார்கள்.
 
காரணம் மைசூருக்குப் பிறகு தசரா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இந்தத் தலத்தில்தான். இத்தலம் முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இறைவிட சுயம்புவாக தோன்றிய இந்த ஆலயத்தில் ஞானமூர்த்திஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் முத்தாரம்மனை மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
 
எனினும் குலசேகரப்பாண்டியன் ஆட்சி காலத்தில்தான் இக்கோவிலுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு ஏற்பட்டது. ஒருநாள், மன்னரின் கனவில் தோன்றிய அம்மன் இந்த சிறிய ஊரை உலகறியச் செய்யுமாறு பெரிய நகரமாக மாற்று என்று ஆணையிட்டாள். அவளின் கட்டளையை ஏற்று குலசேகரப் பாண்டியன் அம்பாளுக்கு கோவில் கட்டினான்.
 
பின்னர், அவளுக்குச் சிறப்பான பூஜைகளைச் செய்து வழிபடத் தொடங்கினான். இதனைப் பார்த்த மக்களும், இங்கு திரண்டு வந்து வழிபடலாயினர். இதனையடுத்து முத்தாரம்மனின் சக்தி அனைவருக்கும் தெரியவரவே இந்த ஊர் பெருமைமிக்கதாக விளங்கத் தொடங்கியது என்று சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன.
 
இங்கு அம்பாள் சும்புவாகத் தோன்றி எழுந்தளியுள்ளார் என்பது மிகப்பெரும் சிறப்பு. சுயம்புவாக லிங்கம் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது. பெரும்பாலான இடங்களிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அம்பாள் சுயம்புவாக இங்கு தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனாலேயே இங்கு அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவளாகக் காட்சியளிக்கிறாள்.
 
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருந்தால் இதனைப் பரிவர்த்தனை யோகம் என்று கூறுவர். அதேபோல இச்சன்னதியில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் வாங்கி இருக்கிறாள். எனவே அம்பாள் சிவமயமாகக் காட்சி தருகிறாள். இத்துடன் இல்லாமல், அம்பாளின் ஆற்றலை சிவனும் வாங்கியுள்ளார்.
 
அதனால் இங்கு சிவன் சக்திமயமாகக் காட்சி தருகிறார். இதனைப் பரிவர்த்தனை யோகநிலை என்று கூறுவர். இப்படியொரு அதிசய சக்தி இத்தலத்தில் அமைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் இத்திருத்தலத்தில் அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் ஆகிய தலங்களில் அன்னையின் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
 
இந்த 3 ஆலயங்களிலும் கோவிலில் மந்திரம், எந்திரம், தந்திரம் என்று மூன்று முக்கிய விஷயங்கள் தற்போதும் கடைப்பிடிக்க ப்பட்டு வருகின்றன. இதில் மந்திரம் என்பது அன்னையைத் துதிக்கும் தோத்திரம்.
 
எந்திரம் என்றாலும் சுவாமி சிலைகள் ஸ்தாபிக்கப்படும்போது, சிலைக்கு அடியில் மருந்து சாத்தி வைக்கப்படும் செப்புத் தகடு ஆகும். தந்திரம் என்பது அங்கு நடைபெறும் பூஜை முறைகள் ஆகும். இதே முறைகள் சற்றும் மாறாமல் குலசேகரன்பட்டினம் திருத்தலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.