Breaking News :

Thursday, April 25
.

கூத்தாண்டவர் கோவில்  சித்திரை திருவிழா - கண் திறத்தல் நிகழ்ச்சியில் திருநங்கைகள் பரவசம்!


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில். இந்த கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர் அரவான். இங்கு சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், சித்திரா பௌர்ணமி நாளானது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மனதில் அரவானை நினைத்துக்கொண்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கு இந்த கோவிலில் மிகவும் விசேஷம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலின் திருவிழா  கடந்த 5 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் படி கூத்தாண்டவர் கோவிலின் முக்கிய நிகழ்வான சாமிகண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் மணக்கோலத்தில் தாலி கட்டி கொண்டனர்.

இதில், தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோயிலுக்கு வந்து கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் நேற்றிரவு முழுவதும் தாலி கட்டிய திருநங்கைகள் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். 20ம்தேதி இன்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பின்னர் பந்தலடியில் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகள் பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து வெள்ளை புடவை உடுத்தி சோகத்துடன் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்.

இன்று மாலை மாலி பலிச்சோறு படையலிடப்பட்டு குழந்தை பாக்கியம் இல்லாத புதுமண பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். இதனை தொடர்ந்து 21ம் தேதி விடையாத்தியும், 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர், கோயில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.