Breaking News :

Wednesday, June 19
.

குருவாயூரப்பன் தோன்றிய சரித்திரம்


திருப்பாற்கடலில் திருப்பள்ளி கொண்டுள்ள மாலவன் எண்ணற்ற திருக்கோலங்களில் பக்தர்களுக்காக சேவை சாதித்து அருளுகின்றான். திருமலையில் ஸ்ரீவேங்கடவனாகவும், ஸ்ரீரங்கத்திலே ஸ்ரீரங்கநாதராகவும், இப்படி இன்ன பிற திருநாமங்கள் கொண்டு எண்ணற்ற க்ஷேத்திரங்களில் அருள் பாலித்து வருகின்றான். அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் குருவாயூரப்பனாக குடிகொண்டுள்ள குருவாயூர் மிகவும் புராதனமான திருத்தலம்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீகிருஷ்ண பகவான் குருவாயூரப்பனாகத் திருக்கோயில் கொண்டுள்ளான். நாள் ஒன்றுக்கு இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயில் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிகாலை மூன்று மணிக்கே குளித்து விட்டு குருவாயூரப்பனின் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதை தினமும் இங்கு பார்க்கலாம்.

குருவாயூரப்பன் ஆலய வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. நாரத புராணத்தில் உள்ள குருபாவனபுர மகாத்மியம் என்ற பகுதியில் இந்தக் கோவில் வரலாறும், தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். 
அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. 

கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. 

அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.

அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. 
இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.

இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். 

பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.

அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. 

தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது. மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.
கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் கண்களைக் கவர்கிறது. 
இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும்போது காணக் கண் கொள்ளா காட்சியாக அமையும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது.
கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே ஸ்ரீகிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன. தினமும் இவர்களுக்கு நைவேத்தியமாக அன்னம், பூ, தீர்த்தம் அளிக்கப்படுகிறது.

நின்ற கோலத்தில் அருள் புரியும் பகவான், கண்களில் அன்பும் கருணையும் கொண்டு காட்சி தருகிறார். 
மேலிரண்டு கரங்களில் சங்கு& சக்கரமும், கீழிரண்டு கரங்களில் கதையும், தாமரையும் கொண்டு துளசி, முத்து மாலைகள் கழுத்தில் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனம் பூண்டு, வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துப மணியும் அணிந்து திருக்காட்சி தருகிறார்.

கருவறைக்கு வடகிழக்கே வருண பகவானால் ஏற்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ளது. இந்த நீர்தான் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
 
குருவும் வாயுவும் வருணனை பூஜித்த ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கிணற்றில் வருணனை ஆவாஹனம் செய்துள்ளார்கள். பரிவார தேவதைகளுக்கு பூஜை நடப்பதுபோல் தினமும் இந்த கிணற்றுக்கும் பூஜை நடக்கிறது. 

இந்தக் கிணற்றில் எந்நாளும் தீர்த்தம் குறைந்ததில்லை. இந்தப் புண்ணிய தீர்த்தத்துக்குள் எண்ணற்ற சாளக்கிராம கற்களும் சிலைகளும் உள்ளன. இந்த நீர் சுவையாக இருக்கும்.

பக்தர்களுக்கு தங்கள் மனத்தில் என்ன வடிவம் தோன்றுகிறதோ, அதை முன்னிறுத்தியே குருவாயூரப்பனை வழிபட்டு வருகிறார்கள். 

ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மகா விஷ்ணுவாக வழிபட்டனர். 

பூந்தானம், வில்வமங்களன், மானதேவன், குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். எது எப்படி இருந்தாலும் குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்து, இங்கு வழிபடும் பக்தர்களே அதிகம்!
அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது. குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!

இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாகஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர். 

நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.

விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும்.
 தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகை சார்த்து’ என்று பெயர். 

அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷ ஸூக்தம் சொல்வர். இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்வர். கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.

இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.

காலை பூஜை இதன் பின் ஆரம்பமாகும். இதற்கு உஷத் பூஜை என்று பெயர். இந்த பூஜையின்போது நெய் பாயசமும் அன்னமும் பிரதான நைவேத்தியம். 

இது முடிந்து நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் தரிசனம் தருவார்.
இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள்ளாக பூர்த்தி ஆகி விடும்.

பகவானுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும்தான் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். 

மங்கள ஆரத்தியின்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம். பந்தரடி (பந்தீரடி) என்று சொல்லப்படும் இந்த பூஜையை வேதம் ஓதும் நம்பூதிரிகள் செய்கின்றனர். இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் முக்கியமான நைவேத்தியம்.

ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால் பாயசம், நெய் பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழ வகைகள்.

குருவாயூர் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை மேல்சாந்தி, கீழ்சாந்தி மற்றும் தந்திரிகள் என்று அழைப்பர்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள், அலங்காரங்கள், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. 

இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். 

மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது.

ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம்.

கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர் என்று வைத்துக் கொள்ளலாம். விளக்கு ஏற்றுவது, அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது, மலர் மாலைகளை எடுத்துத் தருவது, நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. 

பரம்பரையாக வாரிசு உரிமை பெற்றவர்களே கீழ்சாந்தியாக நியமிக்கப்படுவார்கள். தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிதான். சென்னமனா என்னும் பரம்பரை குடும்பத்தினரைச் சார்ந்தவர்களே தந்திரி ஆக முடியும்.

கார்த்திகை 1ஆம் தேதியில் இருந்து மார்கழி மாதம் 11ஆம் தேதி வரையிலான 41 நாட்கள் மண்டல காலம் எனப்படும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் வந்து குருவாயூரப்பனை தரிசிப்பார்கள். மண்டல கால பூஜையின்போது 40 நாட்களுக்குப் பஞ்சகவ்ய அபிஷேகமும் 41ஆவது நாளன்று சந்தன அபிஷேகமும் செய்து வைக்கப்படும். 

குருவாயூரப்பன் விக்கிரகத்தின் மார்பில் தினமும் சந்தனம் சார்த்தப்படுவது வழக்கம் என்றாலும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாளில் செய்யப்படும் சந்தன அபிஷேகத்தைத் தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள்.

கோவில் தந்திரி சிறப்பு பூஜைகளைச் செய்த பிறகு இந்த சந்தன அபிஷேகம் மூலவர் குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும். 

இதற்கான சந்தனக் கலவை தயாரிப்பதற்கு மைசூரில் இருந்து சந்தனக் கட்டைகளும், காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவும் வரவழைக்கப்படும். தவிர பச்சைக் கற்பூரம், பன்னீர், கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள்களும் கலந்து சந்தனக் கலவையைத் தயாரிப்பார்கள். 

இதைத் தயாரிப்பதற்கு உண்டான செலவில் ஒரு பகுதியை கோழிக்கோடு சாமுதிரி மன்னர் குடும்பமும், எஞ்சிய தொகையை குருவாயூர் தேவஸ்வம் போர்டும் ஏற்றுக் கொள்ளும்.

சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. 

குருவாயூரப்பனின் திருமேனியைத் தீண்டிய இந்த சந்தனத்தைப் பெறுவதற்குப் பக்தர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவார்கள்.

வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாராயண பட்டத்ரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கி விட்டது.
பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல... அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் சொல்வார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்.

 கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் பரம பக்தர்கள்.

ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி, அங்கு எவரும் அமர்வதில்லை.
 
நாராயணீயத்தை 'பாகவத ஸாரம்' என்று கூறுவர். இதில் நூறு தசகங்கள். மொத்தம் 1,034 செய்யுள்கள். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி எழுதி இருக்கிறார்.

நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் சுவையானது.

பட்டத்ரி: ‘நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?’

குருவாயூரப்பன்: ‘நெய்ப் பாயசம்.’
ப: ‘ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்..?’
கு: ‘அவலும் வெல்லமும் போதுமே...’
ப: ‘அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?’
கு: ‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.’
ப: 'மன்னிக்க வேண்டும் பகவானே... இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?'
கு: 'துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.'
ப: 'அதுவும் என்னிடம் இல்லை என்றால்..?'
கு: 'எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா... அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.'

குருவாயூரப்பனிடம் இருந்து இப்படி ஒரு பதிலைக் கேட்டதும் பக்திப் பரவசம் மேலிட நாராயண பட்டத்ரி கதறி அழுதார்.

பட்டத்ரியின் நாராயணீயத்துக்கு மூலமாக அமைந்தது ஞானப்பானை என்னும் நூல். இதுவும் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் படைப்பு ஆகும். மலையாள மொழியில் இதை எழுதியவர் பூந்தானம் என்பவர். இப்படி எண்ணற்ற பக்தர்களை ஆட்கொண்டு, தன்வயம் ஆக்கி இருக்கிறார் குருவாயூரப்பன்.

எந்த நேரமும் ஏதாவது பிரார்த்தனைகள், வழிபாடுகள் என்று எப்போதும் ஆலயம் பிஸியாகவே இருக்கும்.
துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.
அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை. 

எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டாவில் தேவஸம் போர்டுக்குச் சொந்தமான யானைகள் கொட்டாரம் அமைந்துள்ளது. 

குருவாயூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த யானைகள் கொட்டாரத்துக்கும் வந்து பார்த்து மகிழ்கிறார்கள். 
சுமார் 100க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. 200க்கும் மேற்பட்ட பாகன்கள் பணி புரிகிறார்கள். 

இதைத்தான் உலகிலேயே தனியார் கண்காணிப்பில் உள்ள மிகப் பெரிய யானைகள் பூங்கா என்கிறார்கள்.
பத்மநாபன் மற்றும் கேசவன் என்கின்ற இரண்டு யானைகளின் படங்களை ஆலயத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், இந்த யானைகளுக்குத் தனி மரியாதை பக்தர்களிடம் இருந்து வருகிறது.

திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது குருவாயூர்.

அதிகாலை மூன்று மணி முதல் இரவு ஒன்பதேகால் மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

குடும்பத்தோடு சென்று குருவாயூரை தரிசியுங்கள். குருவாயூரப்பனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.