Breaking News :

Friday, April 26
.

அருள்மிகு பொன்மலை வேலாயுதசாமி திருக்கோவில்


கோவை மாநகரின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’. இம்மலையில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன.

பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது.இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது. கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார்.

அவர் கனவில் பழநியாண்டவர் தோன்றி, ‘வடக்கே செல்லும் பாதையில் ஒரு குன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் சந்தன மரமும் அதன் அடியில் பொன்னும் உள்ளன. அருகே என் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அங்கே வந்து என்னைத் தரிசிக்கவும்,’ எனக் கூறினார்.

அதன்படி கோப்பண மன்றாடியார் அத்திருப்பாதங்களுக்கு பூஜையும் உற்சவமும் நடத்தி வந்தார். இந்நிலையில்தான் மைசூர் மகாராஜா ஆணைப்படி திருக்கோயிலும் கட்டப்பட்டது. மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை கோப்பண்ண மன்றாடியார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

இன்றுவரை இப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் கோயில் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இக்கோயிலில் குடிகொண்டுள்ள வேலாயுத சுவாமியை அருணகிரிநாதப் பெருமான் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார். பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் என்றும் வற்றாத, 'வள்ளி சுனை" (தீர்த்தம்) உள்ளது.

தினசரி அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது. திருக்கோயிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலின் உள்ளே, வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத கோலம் காட்டுகிறார்.

"ராஜா", "வேடன்", என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சிதரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிரதான சந்நதியின் தென்பகுதியில், காசிவிஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சந்நதிகள் அமைந்துள்ளன. கோயிலின் பின்புறம், முருகப்பெருமான் திருப்பாதம் பதிந்த பகுதியை ஒரு சந்நதியாக அமைத்துள்ளனர்.

கோவை-பொள்ளாச்சி பாதையில் கோவையிலிருந்து 23வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கிணத்துக்கடவு.

விஷ்ணு போல் தன் மீது பக்தி கொண்ட அடியவரின் பக்தியை மெச்சி, முருகப்பெருமான் தன்னுடைய "திருப்பாதத்தை" மலை மீது பதித்து சென்ற திருத்தலம், 'கோயம்புத்தூர்" அருகே, கிணத்துக்கடவு பகுதியில் உள்ளது.

இவ் ஆலயம் "அருள்மிகு பொன்மலை வேலாயுதசாமி திருக்கோவில்" என்று அழைக்கப்படுகிறது.
முருகா என்று பக்தி கோஷத்தை உச்சரித்து கொண்டே, 200 படிக்கட்டுகளின் வழியாக மலை ஏறலாம்.

பாலக்காட்டுக் கணவாயில் இருந்து வீசும் தென்றல் காற்றை சுவாசிக்கலாம். ஆதவனின் கோபக் கனலுக்குப் பயந்து வெண்மேகங்கள் வானில் சிதறி ஓடுவதையும், வானை எட்டிப் பிடிக்க முடியாமல் தோற்றுப்போன ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பூமித் தாயை பட்டுப் போர்வைபோல் போர்த்தியிருக்கும் இயற்கைக் காட்சியையும் காணலாம்.
ஆலயத்தைத் தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களுக்கு, முதலில் இடும்பன் காட்சி தருகிறார். அவரைத் தொடர்ந்து முழுமுதற் கடவுள் விநாயகர் அருள்பாலிக்கிறார். அவரைத் தரிசித்து விட்டு திருக்கோவிலைத் தரிசிக்கலாம். பழங்கால கோவில் என்பதை பறைசாற்றும் விதமாகப் பெரிய, பெரிய கற்தூண்கள் கொண்டு இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திருத்தலத்தில் முருகப்பெருமான், தன் திருப்பாதத்தை பதித்த வரலாற்றை காண்போம்.

ஆலய வரலாறு:

கி.பி. 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சந்திரகோபண்ண மன்றாடியார். புரவிப்பாளையம் ஜமீன்தாராக இருந்த இவர், தீவிரமான முருக பக்தர் ஆவார்.

விரதம் இருந்து பழனி மலையில் வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து மகிழ்வதே, தன் வாழ்வின் பாக்கியமாக கருதி வாழ்ந்து வந்தார். அந்த வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், ஒரு தைப்பூசத் திருநாள் அன்று, புரவிப்பாளையத்தில் இருந்து உற்றார், உறவினர் மற்றும் கிராமத்தினருடன் குதிரை வண்டியில் பழனிக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். அவர் உள்ளம் பழனியில் எழுந்தருளி இருக்கும், முருகப்பெருமானை மனக் கண்ணில் எழுந்தருள செய்து தியானித்தது.

அவரது யாத்திரை குழுவினர் பழனி அடிவாரத்தை நெருங்கினர். அப்போது அங்கு ஆயக்குடி ஜமீன்தார், தனது கிராம மக்களுடன் நின்றிருந்தார். அவர் புரவிப்பாளைம் ஜமீன்தார் வந்த குதிரை வண்டியை மறித்து, விருந்தோம்பல் செய்து விட்டு மலை ஏறி சுவாமியை தரிசிக்கலாம் என்று அன்பு கட்டளையிட்டார். பழனி ஆண்டவரைத் தரிசித்துவிட்டு விருந்தோம்பல் செய்வதாக சந்திரகோபண்ண மன்றாடியார் அவரிடம் தெரிவித்தும், ‘விருந்து சாப்பிடாமல் மலைக்கு செல்ல விடமாட்டேன்’ என்று ஆயக்குடி ஜமீன்தார் வீம்பு பிடித்தார்.

‘பல நாட்கள் விரதம் இருந்து பழனி தண்டபாணியை தரிசிக்க வந்தால், அதற்கு ஆயக்குடி ஜமீன்தார் இடைஞ்சலாக இருக்கிறாரே’ என்று மனம் வருந்திய சந்திர கோபண்ண மன்றாடியார், தான் சென்ற குழுவினருடன் பழனிக்கு செல்லாமல் மீண்டும் புரவிப்பாளையத்துக்கு திரும்பினார். ஆனால் அவரது மனதோ பழனி மலையை சுற்றி வந்தது. முருகனை தரிசிக்க முடியாத அவர் உடல்நலம் இன்றி படுக்கையில் வீழ்ந்தார்.

அன்று இரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நீ.. என் மீது கொண்டுள்ள பக்தியை எண்ணி மனம் மகிழ்ந்தோம். என்னை தரிசிக்க பழனி வர தேவையில்லை. உனக்காகவும், இங்குள்ள அடியார்களுக்காகவும், இந்தப் பகுதியில் உள்ள பொன்மலையில் என்னுடைய திருப்பாதத்தை விட்டு சென்றுள்ளேன். அதை தரிசித்து வா’ என்று கூறி மறைந்தார்.

தான் கண்ட கனவு உண்மை தானா? என்று குழப்பத்தில் ஆழ்ந்தார், #சந்திரகோபண்ண #மன்றாடியார். இருப்பினும் இறைவன் மீது கொண்ட பக்தியால், மறுநாள் புரவிப்பாளையம் பகுதியில் உள்ள குன்றுகளில் முருகன் திருப்பாதம் பதிந்த அடையாளம் எதுவும் இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தார்.

அப்போது அங்கிருந்து சந்தன மரத்தின் அடியில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்த அடையாளத்தை கண்டு ஆனந்தத்தில் திளைத்தார். அவருடைய மனம் ஆனந்தக் கூத்தாடியது. அதோடு அருகில் பொன் விளைந்து இருப்பதையும் கண்டார். ‘இதுவே முருகன் உணர்த்திய பொன்மலை’ என்று அவர் உணர்ந்தார்.

தனக்கு அருள்பாலித்த முருகப்பெருமான், அனைத்து மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், வேலுடன் கூடிய முருகப்பெருமானின் சிலையை வடிவமைத்து, அங்கு ஒரு கோவிலை எழுப்பவும் ஏற்பாடு செய்தார். அப்போது சிறியதாக அமைந்த கோவில், பிறகு பல மன்னர்கள் திருப்பணியின் காரணமாக ஓங்கி உயர்ந்தெழுந்தது.

கோவில் கொடிமரத்தை தரிசித்து விட்டு, அர்த்த மண்டபத்துக்குள் நுழைகிறோம். அங்கே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் அவ்வைக்கு தமிழ் ஊட்டிய திருக்குமரன், ‘வேலாயுதசாமி’ என்ற திருநாமத்தில் எழுந்தருளிஉள்ளார். ராஜகிரீடத்தில், ‘உலகை ஆள்பவன் தானே’ என்பதை உணர்த்துகிறார். வேலாயுதசாமியை தரிசிக்க, தரிசிக்க இம்மையில் நாம் செய்த பாவங்கள் நீங்குவதை உணர முடியும்.

அர்த்த மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதரான சுப்பிரமணியசாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். கருவறையை அடுத்த மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கன்னிமூலை கணபதி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி இருப்பதை காணலாம். கோவில் அருகே வள்ளி சுனை இருக்கிறது. இதில் உள்ள நீர், அபிஷேகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அருணகிரிநாதர்:

குமரன் எங்கெல்லாம் வீற்றிருக்கிறாரோ, அங்கெல்லாம் சென்று முருகனைத் தரிசிப்பதே தன் பிறவியின் நோக்கம் என்று வாழ்ந்து வந்தவர் அருணகிரிநாதர். அவர் ஒரு முறை செஞ்சேரிமலையில் உள்ள முருகக் கடவுளை தரிசித்தார். அந்த மலையில் இருந்து பார்த்த போது எதிரே சற்று தொலைவில் உள்ள ஒரு குன்றில் கோவில் எழுப்பப்பட்டு இருப்பதைக் கண்டார்.

பின்னர் இந்த பொன்மலைக்கு வந்து வேலாயுதசாமியை தரிசனம் செய்தார். மேலும் இத்தல இறைவனைப் புகழ்ந்து ‘அரிவையர்கள்’ என்று தொடங்கும் பாடலை பாடி மனம் மகிழ்ந்துள்ளார். ஆதலால் இது பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

அருணகிரிநாதர் இந்த தலத்தை ‘கனககிரி’ என்று பாடி இருக்கிறார். ‘கனக’ என்பது பொன்னையும் ‘கிரி’ என்பது மலையையும் குறிக்கும்.

திருவிழாக்கள்:

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 'தைப்பூசத் திருவிழா', மிக சிறப்பாக கொண்டாடப்படும். தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறும்.

இது தவிர பௌர்ணமி, பிரதோஷ வழிபாடு, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விஸ்வநாதர் சன்னிதி கோவிலில் உள்ளதால் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோவில் நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகிறது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.