டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார்.
போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.
எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் திரட்ட முடிவு செய்தார். இதுகுறித்து அவர், "பதக்கத்தின் உண்மையான மதிப்பு என்றும் என் இதயத்தில் இருக்கும். பதக்கம் என்பது வெறும் பொருள் மட்டுமே. ஆனால், பலருக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது. என்னுடைய வீட்டில் இருந்து தூசி அடைவதை விட இந்த வெள்ளிப் பதக்கம் ஒரு உயிரை காப்பற்றட்டும். அதனாலேயே நோய்வாய்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இதை ஏலத்தில் விட முடிவு செய்தேன்" என்று தன் பதக்கத்தை ஏலத்தை விடுத்தார்.
இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த Zabka எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலர் செலுத்தி அவரது மெடலை ஏலத்தில் வென்றது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் மரியா. குழந்தையின் பெற்றோரிடம் அந்த பணத்தையும் அவர் ஒப்படைத்தார். இதில் வியக்கத்தக்க மற்றொரு தகவல் என்னவெனில்,ஏலத்தில் வென்ற அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் மரியாவிடமே கொடுத்துவிட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம், "மரியாவின் மனிதநேயத்தை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். டோக்கியோவில் வென்ற அவரது வெள்ளிப் பதக்கம் என்றும் அவரிடமே இருக்கட்டும்" என்று கூறி நெகிழ வைத்திருக்கிறது.