Breaking News :

Friday, January 17
.

எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று 


இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. 

அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என  பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு  உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது. 

எம்.ஜி.ஆர்.கோபாலன் நேர்மையான  மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். 

வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். 
சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகிய போது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம். 

அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய  ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. 

இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்து கொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்

5-வது குழந்தையை  சத்யபாமா பெற்றெடுத்தார்.  குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

பின்னாளில் அந்தக் குழந்தை வளர்ந்து புகழ்பெற்ற நடிகராகவும், முதலமைச்சராகவும், மக்களின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார் என்றால் அதனை எவராலும் மறுக்க முடியாது. வாழ்க அவர் புகழ் என இந்நாளில் நமது குழுவினரின் சார்பில் அவரை நினைவில் கொள்வோமாக 

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.