Breaking News :

Tuesday, April 23
.

ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு நீக்கம் -தமிழ்நாடு அரசு 


தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக, அமலில் இருந்த ஞாயிறு முழுஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு தளர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.    

தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1-2-2022 முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

மழலையர் விளையாட்டு பள்ளிகள். நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.
அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.

அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கைப் பூங்காக்கள், நீர் விளையாட்டுகளைத் தவிர்த்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.