கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில், 11ஆம் வகுப்பில் சேருவது குறித்து குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் மாணவர்கள் 11ஆம் வகுப்பு சேருவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசு மேனிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் மேனிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கவேண்டும். ஒரே பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிகமாக சேர விண்ணப்பித்திருந்தால், அதிகபட்சம் 15 சதவிகித இடங்கள் மட்டுமே கூடுதலாக நிரப்ப வேண்டும். மிகவும் அதிகமான மாணவர்கள் ஒரே பாடப்பிரிவின் கீழ் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தால், பள்ளியிலேயே தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கலாம். மாணவர்கள் விண்ணப்பித்திருந்த பாடப்பிரிவிலிருந்து 50 கொள்குறி வினாக்கள் கொடுக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.
ஜூன் 3ஆம் வாரத்தில் வகுப்புகளை தொடங்கவேண்டும். கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும், இணைய வழியாகவும் பாடங்களை நடத்தலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.