சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் காலை வேளையில் சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மே 24- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் வரத்தும் குறைந்தது.
பயணிகள் விமானத்தை இயக்கினால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, விமானிகளுக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், மே 13- ஆம் தேதி முதல் வரும் மே 22- ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சேலம்- சென்னை இடையே பயணிகள் விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ட்ரூஜெட் நிறுவனம் இன்று (21/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மே 23- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. சென்னையில் இருந்து காலை 07.15 மணிக்கு சேலத்திற்கும், சேலத்தில் இருந்து காலை 08.35 மணிக்கு சென்னைக்கும் ட்ரூஜெட் விமானம் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
சேலத்தில் மே 23 முதல் மீண்டும் விமான சேவை!
.