சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், இணையத்தில் விண்ணப்பித்த தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ரெம்டெசிவிரை பிரதிநிதிகளிடம் முதல்வர் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழக அரசால் வழங்கப்படும் போது, மருந்து விற்பனை செய்யப்படக்கூடிய இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், அவ்வாறு வழங்கப்படும் மருந்து தவறான முறையில் விற்பனைச் செய்யப்படுவதைத் தடுக்கவும், மருத்துவமனைகள் மூலமாக அதனை வழங்கிட வேண்டுமென்று தமிழக முதல்வர் 16/05/2021 அன்று ஆணையிட்டார்.
இதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவு செய்து, ஆக்சிஜன் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து, ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யும் மருத்துவமனைகளுக்கு, சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்படும்.
இந்த முறையில் இதுவரை 343 தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன. இவற்றில், 151 மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்துக்கானக் கோரிக்கைகளை நோயாளிகளின் விவரங்களுடன் பதிவு செய்துள்ளன. இவற்றிற்கு இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை முதல்வர், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள விற்பனை மையத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதற்கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்."இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் வழங்கும் முறை தொடக்கம்'
.