Breaking News :

Monday, June 24
.

காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம்


ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர்.  பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.  

ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும். இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார். 

இந்த அரசாணிக்காய் மகிமை எல்லா சத்துக்களும் அடங்கும் ஒரு நோய் நிவாரணி. அதனால் தான் பெரியவா பரிகாரமாகச் சொல்லிருக்கிறார் இவற்றின் சக்தியை அனைவரும் பெறவேண்டும் என்பது ஒரு சூட்சமம்.

நாள் முழுதும் சந்திரனால் ஏற்படும் மன வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வு, என்னவென்றே தெரியாத குழப்பம் போன்றவற்றிற்குப் பெரியவா சொல்வது இரவு படுக்கும்பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக் கொண்டு படுக்க சொல்லுவார் . காலையில் அந்த மனோ தோஷமானது அந்த தண்ணீரில் இறங்கிவிடும் அந்த நீரை மரத்திலோ, வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதற்குப் பிறகு எந்த மன வியாதிக்காரருக்கும் ஒரு தெளிவு ஏற்படும் என்பது ஆணித்தரமான உண்மை.

 ஒருமுறை பெரியவாவுக்கு மிகுந்த காய்ச்சல் ஏற்பட்டது அவருடைய ஆயுர்வேத சீடரான ராமசர்மாவை காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். மருத்துவர் அங்கு வந்து தன் மருந்தை பெரியவாவிடம் கொடுத்தார் அதற்கு அழகிய சிரிப்புடன் பெரியவா சொன்னார் "உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர இந்த மருந்து அல்ல; எனக்கு மற்றொரு மருந்து உள்ளது நான் மறுபடியும் குளித்து விட்டு வருகிறேன்" என்று கூறினார். 

ராமசர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை குளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது. "நாம் இருவரும் தற்பொழுது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கலாமா!" என்று பெரியவா கேட்க, மருத்துவரும் ஒண்ணும்புரியாமல் சரி கூற,  இருவரும் இணைந்து விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஜெபித்தார்கள். 

ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார். என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது. பெரியவர் எப்பொழுதும் செல்வம் மற்றும் ஆரோக்கியம் இல்லாதவர்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு விஷ்ணு சகஸ்ரநாம மற்றும் கடவுளின் நாமத்தை ஜெபிக்கச் சொல்லுவார். 

நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகிக் கொண்டிருப்பது என்பது 12ம் அதிபதி தசா புத்தி காலங்களில் நடைபெறும். ஆனால், சிலபேருக்குத் தொடர்ந்து இந்த விரயம் இருந்துகொண்டு இருக்கும். அதற்குப் பெரியவா கூறுவது மற்றொரு வழியில் தானமோ தர்மமோ செயல்படுத்த வேண்டும் என்று அவர் கருத்து. அதற்குப் பெரியவா தன் பக்தர்களிடம் சூட்சமாகத் தினமும் காலை வேளைகளில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்குதல் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவு தானம் செய்தால் வீண் விரயத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுவார்.

ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழைகளுக்கு அரிசி அல்லது உணவு தானம் செய்ய வேண்டும். நாம் எவரெல்லாம் 4-ம் பாவமான வீடு, சொத்து நோக்கிச் செல்கிறோமோ அது சேமிப்பு அல்ல புண்ணியம் என்பது தான் சேமிப்பு. இந்த புண்ணிய சேமிப்பு தான் பெரியவா "ஒரு  பிடி அரிசித்திட்டம்” என்று  26 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா ஊர்களில் சென்று ஆரம்பித்து வைத்துவிட்டார். அவர் அந்த தானத்தைச் சிரமம் இல்லாமல் எளிமையாகக் கூறினார்.

அவர் கூறியது "நீ உண்ணும் ஒரு பகுதி உணவை அதாவது அரிசியைத் தினமும் சமையல் செய்யத் துவங்கும் போது ஒரு பிடி அரிசியையும் ஒரு நயா பைசாவையும் ஒரு பானையில் போட வேண்டும். இவற்றைச் சேகரித்து இல்லாதவர்களுக்கு மற்றும் கோவில் பிரசாதமாக தரப்பட வேண்டும்". இதில் ஒரு சூட்சம விதி உள்ளது. நாம் முன்பு செய்த சேமித்த கர்மா மற்றும் சனீஸ்வரனால் ஏற்படும் இன்றைய கடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். நிறையக் கடனால் தத்தளிப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது.

ஒரு பக்தர் தனக்கு இரத்த சோகை மற்றும் எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது அதனால் எனக்குச் சோர்வாக உள்ளது என்று பெரியவாவிடம் கேட்க அதற்குப் பெரியவா தங்க பஸ்பம் சாப்பிடு (மணத்தக்காளி கீரை) என்று சூட்சமாகக் கூறினார். பெரியவாக்கு தெரியும் சூரியன் (எலும்பு) மற்றும் சனியின் (இரும்புச் சத்து) பாதிப்பு உள்ளவர்களுக்கு இரும்பு மற்றும் கால்சியம் சத்து சேர்ந்த  மணத்தக்காளி என்கிற தங்க பஸ்பம் என்று. 

தாங்கமுடியாத முதுகு வலிக்கு நல்லெண்ணெய் சிகைக்காய் தேய்த்து வெந்நீரில் குளியல் அதன்பின்  மிளகு ரசம், பிரண்டை துவையல் என்று பெரியவா சொன்னது  எளிய வைத்தியம் ஆகும். 

நோயில்லா வீட்டில் மூன்று மருத்துவ எண்ணெய் கட்டாயமாக இருக்கும் என்று பெரியவா கூற்று.  அவை  நல்லெண்ணெய் (விளக்கேற்ற, சமைக்க, எண்ணெய் தேச்சு குளிக்க), விளக்கெண்ணெய் (வெறும் வயிற்றில் குடிக்க, சூடு தணிக்க, புண் மருந்தாக) மற்றும் வேப்பெண்ணெய் (முட்டி வலி) மருந்தாக சொல்லுகிறார் நம் மகான்.

இன்றைக்கும் என்றைக்கும் அவர் அருளிய இதுபோன்ற ஆலோசனைகள் நம்மை கண்டிப்பாக காப்பாற்றும்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.