Breaking News :

Thursday, April 25
.

'ரெம்டெசிவிர்' மருந்து இனி தனியார் மருத்துவமனைகளிலும் விற்பனை!- தமிழக அரசு முடிவு!


தமிழக அரசு இன்று (16/05/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (16/05/2021), தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்து தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

நமது தமிழ்நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே இவ்வாறு நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் வந்துள்ளன. மேலும், 'ரெம்டெசிவிர்' மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லை  என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிடப் பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.


இதன்படி, வருகிற 18/05/2021 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணைய தளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டப் பின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச்சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொள்ளும்.


இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.