கேரள மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார் பினராயி விஜயன்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தொடர்ந்து, இரண்டாவது முறையாக மாநிலத்தின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வரைத் தொடர்ந்து 20 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். முதல்வரைத் தவிர புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்துக் கொண்டனர். தமிழக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துக் கொண்டார்.
நடந்து முடிந்த கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலானக் கூட்டணி 99 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். கூட்டணி 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
.
கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றார்!
.