அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
பல மாவட்டங்களில் அரசு வழங்கும் நிவாரண நிதி மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு கொடுக்கப்படுவதில்லை என்றும் செய்திகள் வருகின்றன. சில இடங்களில், மளிகைத் தொகுப்பில் குறைவான பொருட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மளிகை தொகுப்பு பைகள் நியாய விலைக் கடைகளுக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. சில நியாய விலைக்கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நாள் மற்றும் நேரம் குறித்து டோக்கன்கள் வழங்கப்பட்டாலும் உரிய நேரத்தில் மளிகைப் பொருட்கள் வராததால் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகையை வழங்க முடியாமல் நியாய விலைக் கடை ஊழியர்கள் தவிக்கின்றனர். சில நியாய விலைக் கடைகளில், டோக்கன்களை வாங்கிக்கொண்டு சிலருக்கு நிவாரணத் தொகை மட்டும்
வழங்கப்படுகிறது. இதனால் இவர்களுக்கு மளிகைத் தொகுப்பு என்பது கேள்விக்குறியாகிறது. அதேசமயத்தில், சிலருக்கு மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மளிகை தொகுப்பு பெறாதவர்கள் கடைகளுக்குசென்று ஊழியர்களிடம் கேட்கும்போது, சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரியவருகிறது. மொத்தத்தில் பல இடங்களில், குறிப்பாக விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அரசின் மளிகைப்பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் பரிதவிப்பதாக தகவல்கள் வருகின்றன. நிவாரணத் தொகை வழங்கும்போது, கூடவே மளிகைத் தொகுப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, அனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வறு ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.