Breaking News :

Thursday, April 25
.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழக சட்டமன்றத்தில்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி பேசினார்.

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது:

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 105 வருட பழமையான கட்டிடத்தில் நரம்பியல் துறை இயங்கி வருகிறது. தரை தளத்தில் சர்ஜிக்கல், முதல் தளத்தில் நரம்பியல் சம்பந்தப்பட்டவை. 2ம் தளத்தில் மற்ற நோயாளிகள் உள்ளனர்.

இதன் பக்கத்து கட்டிடத்தில் 128 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று காலை 10.21 மணிக்கு தீப்பிடித்த தகவல் அறிந்ததும் தஞ்சைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லி மீட்பு பணிகளை வேகப்படுத்த சொன்னார்.

உடனே நாங்களும் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினோம். தீப்பிடித்த 10 நிமிடங்களுக்குள் 4 தீயணைப்பு வண்டிகள் வந்து பணியை தொடங்கி விட்டனர்.

அங்கிருந்த நோயாளிகளை துரிதமாக மீட்டோம். செய்தி சேகரிக்க வந்த ஊடகத்துறையினரும் மீட்பு பணியில் இறங்கினார்கள். ஆனால் தீயெல்லாம் அணைந்து 3 மணி நேரம் கழித்து அ.தி.மு.க.வினர் சாப்பாடு வழங்கி உள்ளனர். இதை இங்கு எதிர்க்கட்சி தலைவர் எடுத்து சொல்கிறார்.

இந்த விஷயத்தில் அரசு மிக தீவிரமாக செயல்பட்டது. வேறு முதல்-அமைச்சர் ஆட்சியாக இருந்திருந்தால் 128 நோயாளிகளும் பலியாகி இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் தளபதி முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடங்களை கலைஞர்தான் கட்டினார். நீங்கள் (அ.தி.மு.க.) வெள்ளை அடித்து திறந்து வைத்திருக்கிறீர்கள். அந்த கட்டிடத்தை நீங்கள் கட்டியதாக கூறுவது அபத்தம்.

அந்த ஆஸ்பத்திரிக்கு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி என்று பெயர் சூட்டியதும் நாங்கள். தீப்பிடித்து சேதம் அடைந்த நரம்பியல் துறை கட்டிடம் 105 வருட பழைய கட்டிடமாகும். 10 வருடமாக ஆட்சியில் இருந்த நீங்கள் சரிவர பராமரிக்காததே இந்த தீ விபத்துக்கு காரணமாகும்.

இப்போது அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு திட்டமதிப்பீடு தயார் செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே தீப்பிடித்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ. 65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.