Breaking News :

Thursday, September 12
.

காலதாமதம் ஆனாலும் பிளஸ் 2  பொதுத்தேர்வை நடத்துவதே சரியானது - அரசுக்கு  கமல்ஹாசன் யோசனை!


பிளஸ் 2 பொதுத்தேர்வு விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

“மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ, 12-ம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகவே முடியும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமைப்பின்படி, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத்தேர்வுகளுக்கும், வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பிப்பதற்கும், வேலை வாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கும் +2 மதிப்பெண் அவசியமானதாகிறது.

பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத்தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும். கொரோனா இரண்டாம் அலை தணிந்ததும், மூன்றாம் அலை ஏற்படுவதற்கு முன்னதாக அனைத்து முன்னேற்பாடுகளும் பாதுகாப்பான சூழலில் தேர்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே சரியானது.

தேர்வு தாமதமாக நடத்தப்பட்டால் தேசியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைவிட தேர்வை ரத்து செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதே கவனிக்கப்படவேண்டியது.

சில மாநிலங்களில் பொதுத்தேர்வை ரத்து செய்தபோதும், முறையான திட்டமிடுதலுடன் பொதுத் தேர்வை நடத்திக் காட்டியிருக்கிறது கேரள அரசு. கேரளத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த தயாராக வேண்டும்.

இவ்வாறு கமல் ஹாசன் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.