Breaking News :

Friday, April 19
.

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?


இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார். இதன் பின்னணியில் அமைந்த புராண வரலாறு வருமாறு:

ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்றத் தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.