“தலைவன் பிறப்பதில்லை, காலமும் சூழலும் சிந்தனைகளுமே தலைவர்களை உருவாக்குகிறது”. இது மகேந்திர சிங் தோனிக்குப் பொருந்தும்.
தான் சாதிக்க விரும்புவது என்ன என்பதில் தெளிவில்லாமல் இருந்திருந்தால், ராஞ்சியில் பிறந்த தோனி கோரக்பூரில் பிஎஃப் கணக்கு போட்டுக் கொண்டு, மதிய சாப்பாட்டுக்கு என்னமா? என மனைவியிடம் கேட்டுக் கொண்டு, மாத சம்பளத்துக்கு இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்திருப்பார்.
தலைவர்களுக்கே உரிய தெளிவால் சாமானிய இந்தியர்களுக்கு சபலத்தை ஏற்படுத்தவல்ல மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு பேட்டையும் க்ளவுசையும் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடினார். அந்த நொடியில் உருவாகத் தொடங்கினான் இந்திய கிரிக்கெட்டின் இரணியன்.
அப்படி தோனி என்ன சாதித்துவிட்டார்? ஒரு கேப்டனாக அவர் என்ன பிரமாதமான உயரங்களைத் தொட்டுவிட்டார்? இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியின் பங்களிப்பு அத்தனை பெரியதா என்ன?
ஒற்றை சொல்லில் விடை வேண்டுமானால் ஆம்.
வரலாறு எல்லா மனிதர்களையும் ஒரு வரியில் நினைவு கொள்ளும், சிலருக்கு பக்கங்களை வழங்கும், வெகு சிலருக்கு மட்டுமே அத்தியாயங்களை ஒதுக்கும்.
அப்படி நம் சமகாலத்தில், கிரிக்கெட் வரலாற்றில், காலம் ஒதுக்கிய அந்த அற்புத அத்தியாயத்தின் பெயர் தான் மகேந்திர சிங் தோனி.
அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே “ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் எனும் நான்...” என நான்கு முறை அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஒரே அதிபர் FDR தான். நவீன அமெரிக்காவின் வரலாற்றை ரூஸ்வெல்டுக்கு முன், பின் என பிரித்துவிடலாம்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் இருந்து இவரை நீக்கிவிட்டால், 1929 பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதிலேயே 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியை கழித்திருக்கும் அமெரிக்கா. வல்லரசு அந்தஸ்து எல்லாம் அமெரிக்க கற்பனைக்கு கூட எட்டா கனியாகி இருக்கும்.
அவருக்கு நிகராக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியைக் குறிப்பிடலாம். காரணம் எம் எஸ் தோனி என்கிற நபர் இந்திய கிரிக்கெட் வரலாற்றை தனக்கு முன் பின்னாக பிளக்கிறார்.
2004 வங்கதேசத்துடனான போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறக்கப்பட்டார். வங்கதேசத்துக்கு எதிராக, தாகாவில் 2004 டிசம்பர் 27 அன்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மூன்று கேட்ச், இரண்டு ஸ்டெம்பிங் என ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு நல்ல விக்கெட் கீப்பராக இந்திய அணியில் தன் இடத்தை உறுதி செய்தார்.
விசாகப்பட்டினத்தில் 2005 ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், தோனிக்கு ஒன் டவுன் இறங்கும் வாய்ப்பை கொடுத்தார் கங்குலி தாதா.
முதல் சில ஓவர்களிலேயே சச்சின் ஆட்டமிழக்க, அதிரடி நாயகன் சேவாக்குடன் கை கோர்த்தார் தோனி. பவுண்டரிகளும் சிக்ஸரும் தெறித்தன. 148 ரன் எடுத்து பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமானார்.
அதுநாள் வரை அமெரிக்க மாப்பிள்ளை போல இருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மத்தியில், ஜடாமுடிதாரியாய் களமிறங்கி வெளுத்து வாங்கிய மகேந்திர சிங் தோனியை ‘யார் சாமி இவன், இந்த அடி அடிக்கிறான்’ என இந்திய ரசிகர்கள் அவர் மீது ஒரு கண் வைத்தனர்..
2005 அக்டோபர் 31ஆம் தேதி, ஜெய்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 299 ரன் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கு.
வழக்கம் போல இந்தியா சச்சின், சேவாக்கை நம்பி இருந்தது. எதிரணியில் சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்கள் இருந்தனர்.
சச்சின் விக்கெட் வீழ்ந்தது. தோனி களமிறங்கி வாஸ் & முரளிதரனின் பந்துகளை துவம்சம் செய்தார். 145 பந்துகளுக்கு 183 ரன்களைக் குவித்ததார். இந்திய ரசிகர்கள் ‘மஜாப்பா... மஜாப்பா...’ என மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இன்று வரை இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவித்த அதிகபட்ச சர்வதேச ஒரு நாள் ரன்கள் என்கிற சாதனையைப் படைத்தார் தோனி.
1990-களின் கடைசி காலத்தில் மொஹம்மது அசாருதீனுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ஒரு சரியான நபர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த போது அமரேந்திர பாகுபலியாய் கிடைத்தார் கங்குலி தாதா.
2005 - 06 காலகட்டத்தில் கங்குலி இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, மீண்டும் அதே போன்ற சூழல் நிலவியது. அனுபவமிக்க ராகுல் டிராவிட், சேவாக், அனில் கும்ப்ளே என பலரும் அணித் தலைவராக பணியாற்றினர், சரிப்பட்டு வரவில்லை.
160 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் இன் சுவிங், ஸ்டம்புகளை தெறிக்கவிடும் யார்கர், 15 டிகிரி சுழன்று பேட்ஸ்மேனை தடுமாறு வைக்கும் ஸ்பின்களை எல்லாம் அசால்டாக எதிர்கொண்ட சச்சினே, ’இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர்’ என்கிற பந்தில் போல்டானார் என்று தான் வரலாறு நினைவுகூர்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது...
பணம், பல்லாயிரம் கோடி ரூபாய் வணிகம், பல அரசியல் அடுக்குகள், உணர்ச்சிப் பிளம்பான 120 கோடி ரசிகர்கள், தன் ஆட்டம், அணியின் செயல்பாடு, அணிக்கான வீரர்கள் தேர்வு, அணியின் எதிர்காலம் என பல பொறுப்புகளை உள்ளடக்கிய இமய கணம் கொண்ட, ஒரு லட்சம் டன் PSI அழுத்தத்தை ஜூரணிக்க வேண்டிய பணி அது. அப்பதவி பலரை ஈவு இரக்கமின்றி நசுக்கி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பு என்கிற கூர்மையான இருமுனை ஓப்சிடியன் போர்வாள், எப்போது யாரை வெட்டும் என எவராலும் கணிக்க முடியாது.
ராஞ்சி வீரனுக்கு, அந்த சிக்கலான தலைமை பொறுப்பு மிக நெருக்கடியான காலத்தில் தேடி வந்தது. பரிந்துரைத்ததோ இந்திய கிரிக்கெட்டின் இறைவன் சச்சின். தோனி நினைத்திருந்தால் தன்னளவில் ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் இன்னும் பல புதிய உச்சங்களைத் தொட்டிருக்கலாம். மாறாக பசிபிக் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்க தீர்மானித்தார் தோனி.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் என்கிற போர்வாளை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பிரமாதமாக சுழற்றி பல ஃபார்மெட் போட்டிகளில், முக்கிய வெற்றிகளை ’மென் இன் ப்ளூவு’க்கு பெற்றுக் கொடுத்த பெருமை தோனியையே சேரும்.
தோனி தன் தனி மனித சாதனைகளையும், கேப்டனாக அவர் அடைந்த உயரங்களையும் ஒரே காலகட்டத்தில் செய்தார் என்பது இன்னும் ஆச்சர்யமானது.
தோனி எனும் சகாப்தத்தை, காலம் மை பேனாவை எரிந்துவிட்டு, பொன்னெழுத்துக்களால் வடிக்கத் தொடங்கிய ஆண்டு 2007.
ஐசிசி உலக டி20 சாம்பியன்ஸ் போட்டியில் சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற இந்திய கிரிக்கெட்டின் முகங்கள் எதும் இல்லை. அணிக்கு தலைமை தாங்க தோனியைப் பரிந்துரைத்தார் சச்சின். பல்வேறு விமர்சனங்களுக்குப் பிறகு ஏதோ பெயரளவில் சுமாரான அணி போட்டிக்குச் செல்கிறது என பலரும் கருதினர்.
பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டி. இதில் மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், தோனி, சேவாக்கை இறுதிப் போட்டியில் களமிறக்கவில்லை. ரசிகர்கள் மேலும் குழம்பிப் போயினர்.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. “இந்தியாவை 150 - 160 ரன்களுக்குள் சுருட்டி விடுவோம்” என பாகிஸ்தானின் கேப்டன் ஷோயப் மாலிக் ஆரூடம் கூறி இருந்தார். அது அப்பட்டமாக பலித்திருந்தது. இந்தியாவை 157 ரன்களுக்குள் சுருட்டி இருந்தது பாகிஸ்தான்.
இப்போட்டியில் இந்தியா பேட்டிங் செய்த போது யுவராஜ் & கெளதம் கம்பீர் இணை சேர்ந்து 47 பந்துகளில் 63 ரன்களைக் குவித்தது. அப்படி ஒரு வலுவான இணை அமைந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் தோனி.
மிஸ்பா உல் ஹக் இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை எதிர்கொண்டு சிறப்பாக ஆடி வந்தார். அவரை வீழ்த்தினால் ஒழிய போட்டி இந்தியாவுக்கு சாதகமாகாது என்பதை உணர்ந்தார் தோனி.
19 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 145 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. கடைசி ஓவரை அனுபவமிக்க ஹர்பஜன் வீசுவார் என எதிர்பார்த்தனர். அது தான் அப்போது உலக நியதியும் கூட. ஆனால் ஜோகிந்தர் ஷர்மாவை அழைத்து வீசச் சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தோனி.
முதல் பந்தே வைட், இரண்டாம் பந்து டாட், மூன்றாம் பந்தில் சிக்ஸர் இந்திய ரசிகர்களின் இதயத் துடிப்பு சதமடித்தது.
ஜோகிந்தருக்கு சில அறிவுரைகள்... ஃபீல்டிங்கில் சில சிறிய மாற்றங்கள் செய்தார் தோனி. நான்காம் பந்தில் மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் ஆட, அது ஸ்ரீசாந்த் கையில் சிறைபட்டது.
விக்கெட் வீழ்ந்தது. இந்தியா வென்றது.
ஏன் ஹர்பஜனுக்கு இறுதி ஓவர் வீச வாய்ப்பு கொடுக்கவில்லை எனக் கேட்டதற்கு “அவர் மனதளவில் குழப்பமாக இருந்தார். அவருக்கு பதிலாக கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும், துடிப்பான ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். ஜோகி சிறப்பாக செயல்பட்டார்” என பதில் கொடுத்து நகர்ந்தார் தோனி.
மகேந்திர சிங் தோனி வையத் தலைமை கொண்ட தருணமது.
தோனி கேப்டனாகப் பதவியேற்று விளையாடிய முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒன்றில் கூட தோற்கவில்லை. 2009 மார்ச் ஏப்ரல் மாத காலத்தில் தோனியின் நீளப் படை நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை வென்றது.
2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, நான்கு டெஸ்டில் வென்று ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்தது இந்தியா.
கிரிக்கெட் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவை அவர்கள் மைதானத்திலேயே வீழ்த்திய பெருமையும் தோனிக்கு உண்டு
ரிக்கி பான்டிங், கில் க்ரிஸ்ட், பிரெட் லி, மிட்சல் ஜான்சன், மேத்திவ் ஹைடன் போன்ற உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தன் வெற்றிக் கொடியை நாட்டியது.
2008 சிபி சீரிஸின் முதல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 240 ரன்களை இலக்காக வைத்தது. 4 விக்கெட் இழந்து 45.5 ஓவரிலேயே வெறும் 242 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை அலறவிட்டது தோனியின் இந்திய அணி.
2008 மார்ச் 8ஆம் தேதி அதே தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியாவை 49.4 ஓவரில் 249 ரன்களில் 10 விக்கேட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை அழ வைத்தது தோனிப் படை.
ஆஸ்திரேலியாவை வெல்வதே கடினம், அதிலும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெல்வது, நான்கு ஓவர்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா வைத்த இலக்குகளை அடித்து நொறுக்குவது எல்லாம் அதுவரை இந்திய ரசிகர்களோ, உலக ரசிகர்களோ காணாத அபூர்வங்களில் ஒன்று.
இது உள்ளூர் ரசிகர்களைத் தாண்டி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்தது தோனி காந்தம்.
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் என பல நாடுகளிலும் தொடரை வென்றது தோனி படை.
என்ன தான் தோனியின் வெற்றிகள் ரசிகர்களை கிரங்கடித்தாலும், ஒரு உலக மகாயுத்தம் மட்டும் பல தசாப்தங்களாக இந்தியாவால் வெல்லப்படாமல் இருந்தது ரசிகர்களை உறுத்திக் கொண்டிருந்தது.
போரிடும் வீரர்களின் திறன் மீது புல்லின் நுனியளவும் ஐயமில்லை. இருப்பினும் அப்போர் இந்தியாவால் வெல்ல முடியாததாகவே இருந்தது. அந்த உலக மகாயுத்தத்தின் பெயர் கிரிக்கெட் உலகக் கோப்பை.
1983ஆம் ஆண்டு கபில் தேவுக்குப் பிறகு, அக்கோப்பையை இந்தியா வெல்லவே இல்லை.
2011 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின.தோனி சரியாக விளையாடவில்லை என விமர்சனங்கள் அனல் பறந்தன. ஒருவழியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இலங்கை 275 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.
மலிங்கா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே எல் பி டபிள்யூ ஆனார் சேவாக். இந்திய ரசிகர்களின் கண்கள் இருண்டு விட்டன.
சரி எப்படியும் சச்சின் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் பார்த்துக் கொள்வார்கள் என இந்திய ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். மறு முனையில் கெளதம் கம்பீர் களமிறங்கி நிதானம் காட்டினார். அதற்குள் மலிங்கா மற்றொரு பேரிடியை இந்திய ரசிகர்கள் தலையில் இறக்கினார்.
மலிங்கா வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் சச்சின் அவுட் சைட் எட்ஜ் ஆகி வீழ்த்தப்பட்டார். ஆம். இந்திய கிரிக்கெட்டின் ஆதர்ஷ நாயகன், சச்சினின் விக்கெட் பறிபோனது. வான்கடே மைதானம் சொல்லொனா சோகத்தில் மூழ்கியது.
'லஸித் மலிங்கா இஸ் அன்ஸ்டாப்பபிள்' என வர்ணனையாளர் கூறினார். 6.1 ஓவரில் 31 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.
22-வது ஓவரில் தில்ஷான் வீசிய நான்காவது பந்தில், கோலி அடித்த பந்து தில்ஷானிடமே சரணடைந்தது. 114-க்கு 3 விக்கெட் இழந்தது இந்தியா. கோலி 35 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
இக்கட்டான, பல ட்ரில்லியன் டன் அழுத்தம் நிறைந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். ஆட்டத்தை மில்லிமீட்டர் சென்டிமீட்டராக இந்தியாவின் பக்கம் திருப்பினார்.
குலசேகரா வீசிய 49ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் தோனி அடித்த அந்த ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸரில், சச்சினைப் போல சுமார் 120 கோடி இந்தியர்களின் 28 ஆண்டு கால தவத்தை வரம் கொடுத்து களைத்தார் மகேந்திர சிங் தோனி.
அந்த சிக்ஸரும், தோனியின் பார்வையும் என்னும் எப்பொழும்... மனதை மயில் இறகால் வருடும் நினைவுகள்.
2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு புதிய அணியை உருவாக்கத் தொடங்கினார். அணிக்கு முழுமையாக செயல்பட முடியாத சீனியர்களை சிலரை 2007-ல் எப்படி வழி அனுப்பி வைத்தாரோ, அதே போல 2011-க்குப் பிறகும் சில ஜாம்பவான்களை வீட்டுக்கு அனுப்பினார் அல்லது அவர்களே கெளரவமாக ஓய்வு பெற்றனர். 2011-க்குப் பிறகு பல தோல்விகளை சந்தித்த போது தோனி எதிர்கொண்ட விமர்சனங்கள் அப்பப்பா.
அப்போதும் தோனி குழாயடிச் சண்டைகளில் ஜெயிப்பதை விட, கோப்பைகளை வெல்வது முக்கியம் என புதிய அணியை கட்டமைப்பதிலும், அவர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் வாய்ப்பு
வழங்கபட வேண்டும் என்பதிலும் கறாராக இருந்தார். பலன் 2013-ல் சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது இந்தியா.
மூன்று ஐசிசி கோப்பை, ஆசிய கோப்பை, காமன்வெல்த் பேங்க் ட்ரை சீரீஸ், மூன்று ஃபார்மெட் தரவரிசையில் இந்தியாவுக்கு `நம்பர் 1' இடம் என அத்துனை உச்சங்களையும் தான் இந்திய கேப்டனாகப் பதவியேற்ற ஏழு ஆண்டுகளுக்குள் தொட வைத்தார்.
“முற்றுப்புள்ளி வரும் வரை வாக்கியம் முடிவதில்லை” என்பது தோனியின் வார்த்தைகள். அதன் படி ஆட்டம் முடியும் வரை போராடும் குணத்தை இந்திய அணிக்கும், அதை ரசிக்கும் மனப்பாங்கை இந்திய ரசிகர்களுக்கு தன் செயல்வழி கற்றுக்கொடுத்தவர் தோனி.
“ச ரி க ரி க... க ம ப ம ப... த ப த...” என சங்கீதத்தை முறையாக படிக்காத யுவன் சங்கர் ராஜா எப்படி மங்காத்தாவில் மிரட்டினாரோ, அப்படி சிறு வயதில் கிரிக்கெட் அகாடமிக்கு எல்லாம் செல்லாத தோனியின் அதிரடி ஆட்டங்கள், Dhoni Instinct முடிவுகள், களத்தில் திடீரென மாற்றப்படும் வியூகங்கள், இந்திய அணியை பல முறை கோப்பையை முத்தமிட வைத்தன.
2013 ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இஷாந்த் ஷர்மாவை 18வது ஓவர் வீச வைத்தது, 2016 ஐசிசி உலக டி20 சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு ரன்னில் வங்கதேசத்தை வென்றது, 2013ஆம் ஆண்டின் சாம்பியன் டிராஃபியில் ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது என Dhoni Instinct முடிவுகளை பட்டியலிடலாம்.
கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஸ்ட்ரெயிட் டிரைவ், ஃபுல் ஷாட், ஸ்கூப் ஷாட்டோ போன்ற கிரிக்கெட் இலக்கணங்களை எல்லாம் அவர் அடித்த பவுண்டரிகளும், ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர்களும் உடைத்தெறிந்தன.
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா... என இழுத்துக் கொண்டிருந்த காலம் போய், அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு... என ரசிகர்களின் ரசனை மாறிய காலமது.
சச்சின், டிராவிட் போன்ற ‘க்ளாஸ்’ பேட்மேன்களைப் பார்த்துப் பழகிய இந்திய ரசிகர்களுக்கு ‘மாஸ்’ பேட்ஸ்மேன்கள் என்றால் யாரென சேவாக்கோடு சேர்ந்து அறிமுகம் செய்தவர் மகேந்திர சிங் தோனி.
க்ளவ்ஸ்களை கழட்டி சரி செய்துவிட்டு, அடுத்த பந்தில் அவர் தெறிக்கவிட்ட ஒவ்வொரு சிக்ஸர்களும் ரசிகனின் ரத்தத்தை சூடேற்றியது, நரம்புகளை முருக்கேற்றியது.
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினின் சதம், அனில் கும்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கே புலகாங்கிதமடைந்து கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு, ‘அதெல்லாம் சிற்றின்பம் டா தம்பி’... இங்க பாரு டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, உலகக் கோப்பை, சிபி சீரிஸ் என கிரிக்கெட் ரசிகனுக்கு பேரின்பங்களையும் பரமசுகத்தையும் காட்டியவர் தோனி தான்.
இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் ஏராளமாக இருப்பினும் தோல்வி ஏன்? என தோனியின் விசாரணையில் இந்தியாவிடம் ஒரு நல்ல ஃபினிஷர் இல்லை என தெரிந்து கொண்டார்.
ஐசிசி ஒரு நாள் போட்டிகள் தர வரிசையில் 2008 - 2010 காலகட்டத்தில் பல மாதங்கள் தோனி நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். தொடர்ந்து பல ஆண்டுகள் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார்.
தன் சொந்த சாதனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆறாம் நிலை, ஏழாம் நிலையில் பிரஷர் நிறைந்த ஃபினிஷராக இந்தியாவுக்காக களமிறங்கினார் தோனி.
டி20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியாவிடம் ஒரு நல்ல அணி இருக்கிறது, இருப்பினும் தோனியை போல ஒரு நல்ல ஃபினிஷர் இல்லை என வெளிப்படையாக கடந்த மே 2021-ல் கூறியுள்ளார் ரிக்கி பான்டிங். அந்த அளவுக்கு ஃபினிஷர் வேலையை கனகச்சிதமாக செய்தவர் தோனி.
உலகிலேயே சர்வதேச டெஸ்ட் போட்டி (60), சர்வதேச ஒரு நாள் போட்டி (200), சர்வதேச டி20 (72) போட்டி என எல்லா ஃபார்மெட் ஆட்டங்களிலும் 60 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கிய ஒரே நபர் தோனி தான். ஒட்டுமொத்தமாக ஒரு அணியை 332 சர்வதேச போட்டிகளில் தலைமையேற்று வழிநடத்திய பெருமையும் தோனிக்கு மட்டுமே உண்டு. தான் ஆடிய கடைசி போட்டி வரை உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவே இருந்தார். உலகிலேயே அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் தோனி தான்.
“என் கிரிக்கெட் வாழ்கையில், நான் கண்ட சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான்” சச்சின் டெண்டுல்கர் .
“தோனியை வைத்துக் கொண்டு நான் போருக்கே செல்வேன்” முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் கேரி க்ரிஸ்டன்.
“தோனி அன்றும், இன்றும், என்றும் என் மனதில் என் தலைவனாகத் தான் இருப்பார்” விராட் கோலி.
வரலாற்றில் எல்லா சகாப்தங்களும் ஒரு கட்டத்தில் சமாப்தமாகத் தான் வேண்டும். தோனி என்கிற பொன்னெழுத்துக்களால் வடிக்கப்பட்ட வாக்கியத்துக்கும் ஒரு கருமையான புற்றுப் புள்ளி வந்ததைத் தான் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்த போது “It is the end of an era.” என கங்குலி தாதா கூறி இருந்தார்.
ஆம், 15 ஆகஸ்ட் 2020 அன்று வெறும் 17 வார்த்தைகளில் நன்றி கூறி விடைபெற்றது இந்திய கிரிக்கெட்டின் அந்த மகாசகாப்தம்.
தமிழகத்தில் ”சி என் அண்ணாதுரை எனும் நான்...” என்ற முழக்கம் எப்படி
“கருணாநிதி எனும் நான்...”
“எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நான்...”
என பல நான்களுக்கு வித்திட்டதோ, அப்படி இந்திய கிரிக்கெட்டில் “மகேந்திர சிங் தோனி எனும் நான்...” என்கிற வரலாற்று சகாப்தம் பல புதுமைகளுக்கும், வெற்றிகளுக்கும் வித்திட்டு இருக்கிறது.
2100ஆம் ஆண்டில் உங்கள் கொள்ளுப் பேரனோ, என் எள்ளுப் பேரனோ, கோலியின் ஒன்றுவிட்ட தம்பி மகனின் பேரனோ... யார் வேண்டுமானாலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கலாம். ஆனால் தோனி காட்டிய வெற்றித் திசையில் தான் அவர்கள் பயணிக்க வேண்டி இருக்கும்.
அந்தளவுக்கு பிரகாசமாக, பிரம்மாண்டமாக இந்திய கிரிக்கெட் வானத்தில், இனி வரும் தலைவர்களுக்கு ஒரு திசைகாட்டியாய் மின்னிக் கொண்டிருக்கிறார் மகேந்திர சிங் தோனி.
அசாத்தியமான காரியங்களை அசகாய சூரத்தோடு செய்து முடித்த போர் வீரனுக்கே உரிய பெருமைகளோடு பலர் மனதின் ஓரத்தில் இன்னமும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் கேப்டன் தோனி. ம்ஹும்... பத்ம பூஷன் விருதைக் கூட ராணுவ சீருடையில் வாங்கிய லெப்டினன்ட் கர்னல் தானே இவர்! போர் வீரன் என்கிற சொல்லுக்கு உகந்தவர் தான்.
சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு “ரஜினியாய் இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்” என ஒரு பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
2004ஆம் ஆண்டு இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான தோனிக்கொ, 2007-ல் டி20-ல் இந்திய அணியின் தலைவரான தோனிக்கோ, 2011 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டின் சொந்தக்காரருக்கோ, 2020ஆம் ஆண்டில் பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் கூட இடம் கிடைக்காமல் புறந்தள்ளப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவருக்கோ அந்த சிரமம் இருந்ததே இல்லை.
காரணம் அவர் என்னும்... எப்பொழும்... மகேந்திர சிங் தோனியாகவே இருக்கிறார். ஒரே சூரியன்... ஒரே சந்திரன்... ஒரே தோனி.