தமிழக மாநகராட்சிகளில் மிக முக்கியமானதாக விளங்கும் சென்னை மாநகராட்சியின் உதவிப்பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை தாக்கிய தி.மு.க., எம்.எல்.ஏ., மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை திருநொற்றியூர் பகுதியில் உள்ள நடராஜன் தோட்டம் என்ற இடத்தில், சாலை போடும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் பணியை மேற்பார்வையிட்ட உதவிப் பொறியாளர், பணியாளர்களை திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக செய்தி வெளியாகி உள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ.,வின் அடாவடி அராஜகம் பொது வெளியில் மக்களை சென்றடைந்ததை அறிந்த திமுக மேலிடம், அவரை பகுதி செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக அறிவித்தது, இந்த விடியா அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?.
தாக்குதலுக்கு உள்ளான மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் சாலை போடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடம் முறைப்படி புகாரினை பெற்று, அவர்களை தாக்கிய தி.மு.க., எம்.எல்.ஏ., மீதும், அவரது ஆதரவு ரவுடிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆளும் தி.மு.க.,வினரின் அராஜகத்தால் உறைந்து போன அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் பொது மக்கள் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாகும் போது பத்திரிகைகள், மீடியாக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அவற்றை தெரிவிப்பதோடு தைரியமாக போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். அரசு அலுவலர்களையும், போலீசாரையும் மிரட்டும் அராஜக போக்கினை உடனே நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.