சென்னை பெருநகர காவல்துறை இன்று (15/05/2021) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள், ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறிச் சுற்றுபவர்களைக் கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிவுடன் பணிச் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் சில இடங்களில் தனிநபர்கள் தன்னிச்சையாக சுற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் குழுமமாக அமர்வது, இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருவது என கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவதால், இதுப் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கேமரா பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை வைத்து பொறுப்பு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (15/05/2021) மெரினா, காமராஜர் சாலை, காந்தி சிலை அருகில் கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் என்.கண்ணன், காவல்துறை இணை ஆணையர் (கிழக்கு மண்டலம்) வே.பாலகிருஷ்ணன், காவல்துறை துணை ஆணையாளர் (பொறுப்பு-மயிலாப்பூர்) ஈ.டி.சாம்சன் மற்றும் அதிகாரிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும் பணியைப் பார்வையிட்டனர்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
டிரோன் கேமரா கண்காணிப்பு பணி தொடக்கம்!
.