Breaking News :

Friday, April 19
.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் - சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு


அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் - சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..

இந்த மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரி சூரியமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி பிரியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே, அந்தக் கூட்டத்தை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாக கருத வேண்டுமென வாதிட்டார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், ஆனால் பொதுக்குழுவை தள்ளிவைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே கடிதம் எழுதியுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அந்த கடிதம் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அதிமுக தரப்பில் விஜய பிரசாந்த் ஆஜராகி, மனுதாரர் சூரிய்மூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என வாதிடப்பட்டது.

அப்போது இந்த மனு தொடர்பாக, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து மனுதாரர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி , விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 21) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.