அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் பெறாததால், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் கேபி அன்பழகன், செங்கோட்டையன், சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.
சந்திப்பின்போது 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது,
இட ஒதுக்கீடு வழங்கினால் தான், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக முடியும். 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் அறிவுரைப்படி கவர்னரை சந்தித்தோம். தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கவர்னரிடம் விளக்கி கூறினோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளோம். முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது என்றார்.