புத்தகத்தின் பெயர் : என் இனிய இயந்திரா
ஆசிரியர் பெயர் : சுஜாதா
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 256
விலை : ₹330
என் இனிய இயந்திரா....
ஒரு மனிதனின் கற்பனா சக்தி என்பது அவன் சிந்திக்கும் விதத்தையும் மற்ற விசயங்கள் தெரிந்து வைத்திருக்கும் விதத்தையும் பொறுத்து மாறுபடும். ஆனால் அதையும் மீறி ஒரு சிலரின் கற்பனா சக்தி பிரம்மிக்கும் அளவிற்கு இருப்பதுண்டு. அந்த ஒருசிலரில் மகுடமாக இருப்பவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள்....
1980 களின் பிற்பகுதியில் ஒரு தொடர்கதையாக இக்கதையை எழுதியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என கேட்கிறீர்களா... இக்கதை 2021 ல் இருந்து தொடங்குவதாக அமைகிறது !!!
ஆம் ! 40 வருடங்களுக்கு பின்பு கதை நடப்பதாக கற்பனை செய்து எழுதப்பட்டது இக்கதை ! கதைப்படி ஜீவா என்ற சர்வாதிகாரி இந்திய துணைக்கண்டத்தை ஆள்கிறார். அவர் ஆட்சியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக...
குழந்தை பெறுவதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், அனைவரும் இரண்டு எழுத்திலேயே பெயர் வைத்துக்கொள்ள வேண்டும், அனைவருக்கும் ஐடி எண் கொடுக்கப்பட்டு எதற்கெடுத்தாலும் அந்த ஐடி எண்ணை கூற வேண்டும், வீடு குடிபெயர்ந்து போவதற்கு கூட அரசு தான் வீட்டை நிர்ணயிக்க வேண்டும், எதிலும் எந்திரமயம், எல்லாவற்றிற்கும் ரோபோக்கள் பயன்பாடு, தானியங்கி நடைமுறைகள், அரசை எதிர்த்து பேசினால் கடும் நடவடிக்கை என இப்படி சட்டங்கள் பல உண்டு...
இதில் ரவி மற்றும் மனோ என்ற இருவர் ரகசியமான ஒரு இயக்கத்தை சார்ந்தவர்கள். அரசை எதிர்த்து சர்வாதிகாரி ஜீவா வை கொல்ல நினைக்கிறார்கள். நிலா என்ற பெண்ணின் கணவர் சிபி என்பவன் காணாமல் போகவே, அரசால் ஒரே வீடு ஒதுக்கப்பட்ட ரவி யும் நிலாவும் இணைந்து சிபியை தேட தொடங்குகின்றனர். இதில் ரவியின் செல்லப்பிராணி ஜீனோ எனும் இயந்திர நாயும் இணைகிறது !
ஜீவாவை கொல்லும் வேலையில் நிலாவும் இணைக்கப்படுகிறாள். அப்போது இயந்திர நாய் ஜீனோ வுடன் நட்பாகிறாள் நிலா. ஜீனோ அதீத அறிவை பெற்றுள்ளதால் புதிய புதிய திருப்பங்கள் தருகிறது. மேலும் நம் குழுவில் உள்ளவர்கள் போலவே ஜீனோவும் ஒரு புத்தகப்புழு என்பதால் புத்தகம் வாசிப்பை அடிக்கடி மேற்கொள்ளும் !
கதையின் போக்கில் ஜீனோ அடிக்கும் ஜோக்குகள் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. இயந்திர நாயாக இருக்கும் ஜீனோ தானாக சிந்திக்கும் திறன் பெற்று விடுகிறது. இதனால் எதிரிகள் அதிகமாகின்றனர். ஜீனோவை டிஸ்மான்டில் செய்ய நினைக்கின்றனர். நிலாவின் கணவன் சிபி கிடைத்தானா, ரவி மனோ இருவரின் திட்டம் வென்றதா, ஜீவா கொல்லப்பட்டாரா, ஜீனோ நிலா இருவரின் நிலை என்ன...என்பதே இறுதிக்கதை...
கதையின் ஆரம்பத்தில் இருந்தே சுஜாதா அவர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கற்பனை நம்மை பிரமிக்க வைக்கிறது. இதைத்தொடர்ந்து தான் எந்திரன் எனும் திரைப்படமும் எடுக்கப்பட்டது. (அப்படத்தில் இக்கதையின் சாயல் சிறிது இருக்கும். நாய் ரோபோட் கு தானாக சிந்திக்கும் திறன் வருவது போல் பல காட்சிகள் இருக்கும் )
என் இனிய இயந்திரா ! புதிய மனிதா பூமிக்கு வா
R.சேதுராமன்