Breaking News :

Friday, October 11
.

சுஜாதாவின் காபி கதை!


ஏண்ணா..! பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..?

இல்லையேடி..! எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு , கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..

அறுபது வயதிற்கு மேற்பட்ட , தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு, எரிபொருள் காப்பி தான்.. .! கார்த்தால ஒரு தடவை . அதே போல் மத்யானம் மூணு மணிக்கு ஒரு தடவை. ஒரு வாய் காபி உள்ளே போனால் தான், அன்னிக்கு வேலையே நடக்கும். குறிப்பாக ஆண்களுக்கு.

காபி அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும், சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும், சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில், குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு, மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும்.

அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூடத் தட்டி விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.

அந்தக் கால கூட்டு குடும்பங்கள் , பெரிய சம்சாரிகள் வீட்டில், இரண்டாவது டிகாக்ஷன் தான் எல்லாம். முதல் டிகாக்ஷனில் குடும்பத் தலைவருக்கு மட்டும் ரகசியமாக தயாரிக்கபடும். இன்றைய காஃபி மேக்கர்களெல்லாம் ஃபில்டருக்கு இணையாகாது.

பழைய திரைப்படங்களில் 'பிராமணாள் காபி க்ளப்' என்ற போஸ்டரை அதிகம் பார்க்க முடியும்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு, எங்கள் "ஸ்ரீரங்கம் ரெங்க பவன்" ஹோட்டல் காப்பி மிகவும் பிரசித்தம்.. அவர்களே கூட பிரத்யேகமாக, "ரெங்கநாயகி காபி" என்று, ஒரு கடை வைத்து இருந்தார்கள்..! எனது சீனு ,மற்றும் ராமநாதன் பெரியப்பாக்கள், வெளியூரிலிந்து வருபவர்கள், டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி," ரங்க பவனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காப்பி கொடுத்தாம்பா" என்று ஸ்லாகிப்பதைக் கேட்டு இருக்கிறேன்.

ஒரு சிறிய டபராவின் உள்ளுக்குள்ளே, சூடு இறங்காமல் இருப்பதற்காக ஒரு குட்டி டம்ப்ளரை கவுத்து, காபியை கொடுக்கும் வழக்கம் இன்றும் பல ஊர்களில் இருக்கின்றது..! மிக ஜாக்கிரதையாக அதைப் பிரித்து டபராவில் கொட்டி, ஆற்ற வேண்டும். இல்லையெனில் மேலே சிந்தும் அபாயம் உண்டு. இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் காந்தி சிலை அருகே, "முரளி கடை" ஒன்றில் தான், காபி சொல்லி கொள்ளும் படியாக இருக்கிறது.

காப்பி போடுவது என்பது ஒரு கலை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை பெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு..! நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு..! .அளவாக சர்க்கரை போட வேண்டும்.இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எல்லாம் அதன் சுவையை மங்க செய்து விடும். ஒரு மிதமான கசப்பு தான் அதன் தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும், நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது, தங்க வேண்டும்.சில பிரகிருதிகள் அதனுடன் ,சேர்ந்து மருந்து மாத்திரையை எடுத்துக் கொள்ளும்
போது , ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று சொல்ல தோன்றும்.

காலையோ , மதியமோ பரபரப்பு இல்லாமல் குடிக்க வேண்டும்.

ம்..' மேலே படிக்க போறானா இல்லை வேலைக்கு போக போறானா?; ', என்ன இருந்தாலும் அவா சுப்பிணியை கல்யாணத்துக்கு கூப்பிடாதது தப்பு தான்'- இப்படி சில வம்பு சம்பாஷணைகளையும், சேர்த்து கொண்டால் காப்பி கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதெல்லாம் மிடில் கிளாசுக்கு தான். கொஞ்சம் வசதி இருந்தால் போர்ன்விட்டா, ஓவல்டின் என்று தடம் மாறி விடுவார்கள். அப்படியே காப்பி சாப்பிட வேண்டி இருந்தால் , பையன் கறுப்பாகி விடுவானோ என்ற பயத்தில் அம்மாக்கள் நிறைய பால் விட்டு, வெள்ளை காப்பி ஆக்கி விடுவார்கள்..! அவன் படித்து விட்டு பின்னாளில் இஞ்சினியர் ஆகி, ராமகுண்டத்தில் இருந்து 'கறு கறு' என்று வருவான், என்பது வேறு விஷயம்.

காப்பியை டம்ளர் டபராவில், குடித்தால் தான் அது ருசிக்கும்.. இந்த கப் அண்ட் சாசர் எல்லாம் டீ யிற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம், காபிக்கு அல்ல..! திருச்சியில் "பத்மா கபே" என்று ஒரு ஓட்டல் உண்டு. ஆர் ஆர் சபா சமீபம் . அங்கே இன்ன பிற அயிட்டங்கள் இருந்தாலும் , அதன் காபிக்கு தான் மவுசும் கூட்டமும்..பிற்காலத்தில் திருச்சியில் அபிராமி , காஞ்சனா போன்ற ஹோட்டல்களில் ஓரளவு தரமான காப்பி கிடைத்து வந்தது..!

இந்த ப்ரு, நெஸ்கா ஃ பே எல்லாம் ஹனி மூன் தம்பதியரின் அசதிக்கும் , விளம்பரத்துக்கும் , மட்டும் தான் சரியாக வரும்.

திடீர் என்று ஒரு நாள், எங்கள் மாரீஸ் தியேட்டரில், இடைவேளையின் போது புஸ் புஸ் என்று சத்தம் போட்டு ஒரு இரும்பு கம்பிக்குள் காப்பி கப்பை செலுத்தினார்கள்..  நிறைய நுரையுடன் பாலாக ஒரு காபி வந்தது. எஸ்ப்ரெசோ என்று அழைத்தார்கள்.

ஆர்வ மிகுதியில், உடனே குடிக்க போக, சூட்டில் நாக்கு பற்றி கொண்டது.

சென்னையில் தி நகர் பஸ் நிலையம் அருகில் "இந்தியா காப்பி ஹவுஸ்" என்று ஒரு கடை இன்றும் இருக்கிறது..! ஒரு காலத்தில் புகழ் பெற்றது. அங்கே ரயில்வே, ஐ ஆர் ஆர் போல வெள்ளை பீங்கான் கப்பில் தான் காப்பி .ஆனால் சகாய விலையில் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளை கேட்டு பாருங்கள் . காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுக்க, க்யூவில் நின்று ஒரு மணி நேரத்திற்குப் பிறகு , ஒரு காப்பி குடித்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி சொல்லி மாளாதது..

அதிகமாக காபி விளையும் கர்நாடகாவில் கூட, காபியின் சுவை என்னை பொறுத்தவரை சுமார் தான்.

உடுப்பியும் , காமத்தும், ஓரளவு சொல்லி கொள்ளும்படியான ஹோட்டல்களாக இருந்தாலும் , நம்ம ஊர் "கும்பகோணம் டிகிரி" காப்பிக்கு நாக்கை அடகு வைத்தவர்களால் ஒருவித தயக்கத்துடன் தான் அவைகளை ஏற்று கொள்ள முடியும் .

கல்யாணங்களில் காபியின் தரம் என்பது, திருமண உறவையே அசைக்கும் வல்லமை பெற்றது.

சுடு தண்ணி..! ,சுடு தண்ணி...! என்று திட்டிக்கொண்டே, எல்லோரும் ரயிலில் வரும் காப்பியை குடிப்பது, தவிர்க்க முடியாதது..

ஒரு காலத்தில் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில், தரமான காப்பி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

தலையெழுத்தே என்று, குடிக்கும் காப்பி என்றால், இரண்டை சொல்லலாம் ஒன்று விமானங்களில் கொடுக்கப்படுவது. .மற்றொன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூம்களில் நாமே கெட்டில் பயன்படுத்தி தயாரிப்பது..

விமானங்களில் ஒரு முழு கப்பிற்கு டிகாக்ஷன் கொடுத்தாலும் , ஒரு குட்டி குமிழிலிருந்து சொட்டு பாலை கலப்பதற்குள், ஆறி தொலைத்து விடும்..மற்றொன்று பால் பவுடர் வகையை சேர்ந்தது.

"ஹௌ ஆர் யு டூயிங் டுடே..? " என்று கூறி அறிமுகமில்லாதவரிடமும் சிரித்தால் , அது அமெரிக்கா..

"மில்க் ?.."

"நோ தேங்க் யூ…! "

ஒரு குண்டு பீப்பாய்காரி, உங்கள் ஆர்டரையும் , பெயரையும் ஸ்கெட்ச் கொண்டு ஒரு பெரிய பேப்பர் கப்பில் எழுதி, காப்பி தயாரித்து கொடுத்தால் அது ஸ்டார் பக்ஸ்..! கை சுடாமல் இருப்பதற்காக ஒரு பேப்பர் மேலுறையை, நீங்கள் சொருகி கொண்டு மேலுக்கு ஒரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு.

'டொங்க்' என்று டம்ப்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசி பலனை தெரிந்து கொண்டு விடலாம்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.