மொழிபெயர்ப்பு
சிங்கள சிறுகதைகள்
ஆசிரியர் : ரிஷான் ஷெரிப்
வம்சி பதிப்பகம்
பக்கம் : 176
ரிஷான் ஷெரிப் தனது மொழிபெயர்ப்பு நூல்களுக்கு பெயர் போனவர். 2021 ஆம் ஆண்டின் இலங்கை சாஹித்திய அகாடமி விருது பெற்ற நூல் இது. இந்நூலின் சிறப்பம்சம் - இதில் உள்ள 9 சிறுகதைகளை எழுதியது 6 பெண் எழுத்தாளர்கள். தனது மொழிபெயர்ப்புக்கு பெண் எழுத்தாளர்களின் கதைகளை தேர்ந்தெடுத்தமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள். இச்செயலின் மூலம் தன்னை சிறந்த இலக்கியவாதி என்பதை நிலைநாட்டுகிறார் ரிஷான் ஷெரிப்.
நம் சமூகமும் சரி, நம் ஆண்வர்க்கமும் சரி இன, மொழி, மதம் தாண்டி பெண்களை புத்தகங்களை தொடவிடாமல் பார்த்துக்கொண்டது கடந்த காலங்களில். ஆனால் தடைகளை தாண்டி ஓடியே பழக்கம் கொண்ட பெண்களோ தமிழ் மொழி தோன்றிய காலம் முதல் இலக்கியத்தில் தங்கள் பங்களிப்பை நிரூபித்து கொண்டுதான் வருகின்றனர். இந்நிலை சமகாலத்தில் சற்று சமத்துவம் பரவி வந்தாலும், பெண்களின் பங்களிப்பு இலக்கியத்தில் சற்று குறைவே. இதற்கு இலங்கையும் விதி விலக்கல்ல. பெண்கள் ஏன் எழுத வேண்டும்? பெண்களுக்கு என்ன வெளி உலக அனுபவம் இருந்துவிட போகிறது எழுதுவதற்கு? இதனை வேறு கோணத்தில் சிந்தித்து பார்க்கலாம். எண்ணற்ற ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் உணர்வுகளை, வாழ்க்கையை தங்களின் பார்வை வழிமட்டுமே கூற முயன்றுள்ளனர், ஆனால் அதில் வெற்றியடையவில்லை என்பதை பல ஆளுமைகள் ஒப்புக்கொண்டுவிட்டனர். இதுவே பெண் எழுத்தாளர்கள் இலக்கியங்களில் இதற்கான புரிதல் நிச்சயம் பெருகும் என்பது என் கருத்து. இதற்கு பறைசாற்றும் விதமாக இச்சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது.
பெண்களை கொண்டாடிய தி ஜா வின் படைப்புகளையும், பெண் மன உளைச்சல்களை அப்பட்டமாக படம் போட்டு காட்டிய எஸ். ரா வின் படைப்புகளையும் வாசித்த நமக்கு இத்தொகுப்பில் வரும் பெண்களின் கதைகளோ வேறு பரிணாமத்தையும், புதிய பார்வையையும், ஆழ் சிந்தனையையும் தருகிறது.
என்னை கவர்ந்த கதைகள் :
1.நிழல் பெண்கள்
2.பின் தொடர்தல்
3.அந்திம காலத்தின் இறுதி நேசம்
4.அரசிலை பதக்கம்
5.எழுதல்
நிழல் பெண்கள் கதையின் தொடக்கமே நம்மை உறையவைக்கிறது, வீட்டின் தனிமையான இரவில் ஒரு சிறுமி, அவள் அம்மாவோ சிறையில், காலையில்தான் வருவாள் இதன் பின்னணியே கதை. கணவனை இழந்த ஒரு தாய் படும் அல்லல்கள் நம் இதயத்தின் கணம் கூட்டுகிறது.
பின் தொடர்தல் கதையிலோ, அழகு என்று இந்த உலகம் வரைந்த வட்டத்திற்கு வெளியே வாழும் ஒரு பதின் பருவ பெண்ணின் மனம் கொட்டிதீற்கும் குமுறல்கள். இதனை ஒரு பெண்ணால் மட்டுமே உணர்ந்து உள்வாங்கி எழுத முடியும் எக்காலத்திலும்.
அந்திம காலத்தின் இறுதி நேசம் ஒரு மாறுபட்ட நட்பு. நட்பிற்கு நாம் வகுத்த வரையறைகளை உடைத்து சுக்குநூறாக்கும் கதை.
அரசிலை பதக்கம் - நீண்ட நாட்களுக்கு பிறகு என் உறக்கத்தை சூறையாடிய கதை. இதற்கு மௌனம் மட்டுமே என்னால் கொடுக்க முடிந்த உயரிய மதிப்பு, மகுடம்.
எழுதல் - சாந்தா குருப் என்ற பதின் பருவ கதாபாத்திரம் போருக்கு செல்லாமலே வீரமங்கையாக திகழ்ந்தவள் என்றுதான் சொல்லவேண்டும். குடும்பத்தை விட, ஆண் வர்கத்தைவிட, சாதியை விட, சமூக கட்டுப்பாடுகளை விட கடினமான வேறு போர்க்களம் இருந்துவிட முடியாது என்பதற்கு இக்கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
கவர்ந்த வரிகள் :
1.இப்படி மறைவாக செய்வதென்பது சம்பந்தப்பட்டவருக்கு தொழுநோயைப்போலவும், எனக்கு வைக்கோலை போலவும் இருக்கும்.
2.அணையப்போகும் விளக்குக்கு நெய் ஊற்றுபவள்.
3.நீங்களும், நானும் நாட்கணக்கில் நேசத்தை வீணடித்து கொண்டிருக்கையில் அவ்வாறானவர்கள் நேசம் கிடைக்காமலேயே செத்து போய் விடுகின்றனர்.
இலங்கை இலக்கிய கடலின் ஆழம் சென்று தேர்ந்தெடுத்த 6 விலைமதிப்பில்லா சிப்பிக்குள் இருந்து எடுத்த 9 முத்துக்களை பத்திரமாக மீட்டெடுத்து தமிழுக்கு கரை சேர்த்த ரிஷான் ஷெரிஃக்கு மிக்க நன்றி.
- இர.மௌலிதரன்