அமீர் கான் மீடியா .முதல் பதிப்பு 2019 மொத்த பக்கங்கள் 296 .விலை ரூபாய் 300.
திரைப்படத்தின் அஸ்திவாரம் திரைக்கதைதான் .சுமாரான கதை கூட சிறந்த திரைக்கதையின் மூலம் சுவாரசியப் படுத்த முடியும் .ஒரு காலத்தில் திரைக்கதை அமைப்பதில் இளங்கோ அவர்கள் பெரும் பெயர் பெற்றிருந்தார் . அதன்பிறகு பாக்கியராஜ் அவர்கள் திரைக்கதை அமைப்பதில் மன்னர் என்ற பெயரும் எடுத்திருந்தார்.
ராம் படம் அடைந்த மகத்தான வெற்றியும் அது பெற்ற விருதுகளும் அமீரின் தேர்ந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் கூட.
திரைப்பட இயக்குனராக சாதிக்கும் நினைக்கும் ஒவ்வொருவருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் கூட சொல்லித் தர முடியாத தொழில்நுட்ப ரகசியம் ராம் திரைக்கதை .
விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் திரைப்படம் சார்ந்த படிப்புகளுக்கு பாடமாக வைக்கும் தகுதியும் ராம் திரைக்கதைக்கு உண்டு .அந்த அளவிற்கு திரைக்கதையின் புதிய இலக்கணமாக ராம் படத்தின் திரைக்கதை இருக்கிறது.
இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளரும் வசனகர்த்தவும் இயக்குனருமான அமீர் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
" ராம் படத்தின் சில புதிய அணுகு முறைகளை கையாண்டு இருப்பதாக நினைக்கிறேன் . கதை சொல்லும் முறையில் சர்வதேச படங்களின் யுத்தியை கையாண்டேன். பொதுவாய் தமிழ் திரைப்படங்களில் பாடல் சண்டை ,காமெடி போன்ற விஷயங்களில் இருப்பதால் அதை நோக்கி சில காட்சிகள் அமைக்க வேண்டிய நிலை இருக்கிறது .அதனால் கதைப்போக்கில் தொய்வும் தேக்க நிலையும் நிலவும். ராம் திரைக்கதையை எழுதியபோது அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என்று திட்டமிட்ட தோடு ,நான் எடுத்துக்கொண்ட விஷயத்தை மட்டும் நேர்த்தியாய் சொல்வது என்பதில் கவனமாக இருந்தேன்," என்கிறார் இயக்குனர் அமீர் அவர்கள்.
ராம் கதைச்சுருக்கம் :
பள்ளி ஆசிரியை சாரதாவின் ஒரே மகன் ராம் .அவள் பள்ளியிலேயே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான் த.ன் மனம் முழுக்க கடவுளையும் நற்பண்புகளையும் கொண்டுள்ள ,ராம் மிகவும் மாறுபட்ட சாமியாரிடம் அறிவுரை பெற்று வழிபாடுகளையும் யோகாவையும் செய்து வருகிறார் .கோபம் கொண்டவன் .அவன் விருப்பப்படும் விஷயம் கிடைக்க எதையும் செய்பவன் .தன் தாயுடன் அளவுகடந்த பாசம் கொண்டிருக்கும் ராம் அவளுக்கு ஒரு பிரச்சினையாகவும் இருக்கிறான் .தேவையில்லாத சச்சரவுகளில் அடிக்கடி ஈடுபடுவது ஈடுபடுவதால் பள்ளியிலும் சமூகத்திலும் அவனுக்கு கெட்ட பெயர் .அவனை விடுதிக்கு அனுப்புகிறாள் .தாயை பிரிந்து இருக்க முடியாமல் அவன் திரும்பி விடுகிறான்.
சாரதா தவிர யாரிடத்திலும் பாசத்தை ஏற்க மறுக்கிறான் .பள்ளியில் உடன் படிக்கும் பக்கத்து வீட்டு கார்த்திகேயினி அவனைக் காதலிக்கிறாள்.
ஒருநாள் டீச்சர் வீட்டுக்குள் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து பக்கத்து வீட்டு மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் கதவை உடைத்துப் பார்க்க ரத்தக்கறை படிந்த கத்தியை கையில் பிடித்து இருக்கிறான் ராம்.
ராம் தான் கொலைகாரன் என்று தீர்மானிக்கப்படுகிறது .போலீஸ் வழக்கு பதிவு செய்கிறது .அவன் போலீசின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் இருக்கிறான்.
இன்ஸ்பெக்டர் உமர் உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறார் .ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ராம் குறித்து சொல்கிறார்கள் .பக்கத்து வீட்டுக்காரரின் மகளும் காதலித்தவளுமான கார்த்திகேயனியை விசாரணைக்கு அழைக்க ,அவளும் உண்மை எல்லாம் சொல்கிறாள்.
தன் கையிலிருக்கும் நண்பனின் சட்டைப் பொத்தான் தன் தாய் உடலில் கண்டெடுத்த பொத்தானும் ஒன்றாக இருப்பதை கவனித்த ராம், மலைச்சாமியிடம் கொடுத்து தன் தாயின் உடல் அருகே கண்டதாகக் கூறுகிறான்.
டீச்சர் கொல்லப்பட்ட தினத்தில் அவளை சந்தித்த கடைசி ஆள் தன் மகன் தான் என்பதை உணரும் மலைச்சாமி, அவன் தான் டீச்சரை கொன்றான் என்பதை தெரிந்து கொள்கிறார்.
தான் போதை உட்கொள்ளும்போது டீச்சர் பார்த்து விட்டதால் கொன்று விட்டதாக ஒப்புக்கொள்கிறான் சதீஷ்.
உண்மையை அறிந்ததால் மலைச்சாமியின் மகனை சிறையில் அடைக்கும்படி கட்டளையிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
அப்பாவின் பெல்ட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொல்கிறான் சதீஷ் .அவன் அந்த இடத்தை விட்டு செல்கிறான்.
ராம் அவனை கொல்ல பின் தொடர்ந்து செல்கிறான் .அவர்கள் இருக்குமிடம் அறிந்து கொள்ளும் கார்த்திகேயனி தன் அண்ணனை கொல்வதிலிருந்து ராமை காப்பாற்ற முயற்சிக்கிறாள்.ஆனால் ராம் தன் தாயைக் கொன்ற சதீஷைக் கொல்கிறான்.
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம். திரைப்படம் கதை சுருக்கம் பார்த்து இந்த கதை, வசனம், திரைக்கதை தயாரிப்பு இயக்குனர் அமீர் அவர்கள் 67 காட்சிகளாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் .
ஒவ்வொரு காட்சியிலும் பலதரப்பட்ட ஷாட் அமைத்து ,பல எண்ணிக்கையில் ஷாட் அமைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் .
திரைக்கதையை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு பயன்படும் வகையில் ஷாட்டுகளில் பிரிவுகளை எளிதில் புரிந்து கொள்ளும் படி தொழில்நுட்ப குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்கள் .
ஒவ்வொரு காட்சிகளும் எத்தனை அடி நீளத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன அவை படத்தில் எவ்வளவு நேரம் இடம்பெற்றிருக்கின்றன போன்ற தகவல்களையும் கூடுதலாக தரப்பட்டிருக்கிறது .இது போன்ற நுணுக்கமான தகவல்களுடன் வெளிவரும் முதல் திரைக்கதை புத்தகம் இதுவே.
இந்த தகவல்கள் திரையுலகில் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர்ளுக்கு மட்டுமல்ல சுயமாக திரைக்கதை அமைக்க முனைபவர்களுக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
.ஒவ்வொன்றாக படிக்கும் பொழுது நமக்கே கூட இயக்குனர் பணி மேற்கொண்டு விடலாம் என்கிற எண்ணம் தோன்றுகிறது .அவ்வளவு திரைப்பட பயிற்சி அளிக்கின்ற புத்தகமாகவும் இது விளங்குகிறது.
இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு நானே ஒரு இயக்குனர் ஆகிவிட்டேன் என்ற அளவில் ஒரு எண்ணம் .
இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு அந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். என்னால் படத்தை பார்க்க முடியவில்லை .ஒவ்வொரு ஷாட் வாரியாக படத்தை பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு காட்சியும் பிரியும் பொழுதும் இது என்ன ,என்ன ஷாட் ,கேமரா எங்கு வைக்கப்பட்டிருக்கிறது ,நடிகர் எங்கு இருக்கிறார் டைரக்டர் எங்கு இருந்து இயக்கி இருக்கிறார் ,ஒளிப்பதிவாளர் எங்கு இருக்கிறார் என்கிற எண்ணம் தான் தோன்றுகிறது .படத்தில் ஒன்றிப் போக முடியவில்லை.
புத்தகத்தை படிக்கும்போது திரைப்படம் கண்ணுக்கு அவ்வளவு காட்சிகளாக இருக்கவில்லை.
ஆனால் திரைப்படத்தை பார்க்கும் போது புத்தகத்தைப் படித்த காட்சிகள் கண்முன் விரிகிறது .
திரைப்படம் தயாரிப்பு என்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.