Breaking News :

Friday, July 12
.

சேப்பியன்ஸ் ஆசிரியர்: யுவால் நோவா ஹராரி


சேப்பியன்ஸ்
ஆசிரியர்: யுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
விலை: ரூ.499/-
பக்கங்கள்: 500

நாம எதுக்காக வாழுறோம்? நம்ம வாழ்க்கையோட நோக்கம்தான் என்ன? மாறிக்கிட்டே இருக்க மனித சமுதாயத்தோட முடிவுதான் என்ன? குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்னு சொல்றப்போ இங்க குரங்குகளும் இன்னும் வாழ்ந்துட்டுதான இருக்கு, அப்போ இந்த குரங்குகள்லாம் எப்போ மனிதனா மாறும்? பணம்தான் எல்லாம்னு எப்போ இருந்து மாறுச்சு? பணம் அச்சடிக்கிறது நம்ம அரசாங்கம்தான் அப்டீங்குறப்போ நிறைய பணம் அச்சடிச்சு எல்லார் கிட்டயும் குடுத்துட்டா வறுமை எல்லாம் ஒழிஞ்சு போய்ரும்ல…

இப்டிலாம் யோசிக்கச் சொல்லி உனக்கு யார்ரா சொல்லிக் குடுத்தானு நம்ம மூளையே நம்மளப் பாத்து கேக்குற அளவுக்கு இந்த மாதிரியான கேள்விகள் நம்ம மனசுக்குள்ள நிறையவே எழுந்துருக்கும். இதுக்கெல்லாம் நாம மனித குல வரலாற்றைத் தேடி பின்னோக்கி காலப்பயணம் மேற்கொள்ளனும். அதுக்கான கால இயந்திரம்தான் இந்த சேப்பியன்ஸ்.

விலங்குகள், பறவைகள்ல எல்லாம் பல வகைகள் இருக்கும் போது மனிதன் மட்டும் ஏன் ஒரே மாதிரியா இருக்கான் அப்டீனு யோசிக்குறப்போ மனித இனத்துலயும் முன்னாடி நியாண்டர்தால் போன்ற பல ரகங்கள் இருந்ததாகவும், அவங்களையெல்லாம் அழிச்சு ஒழிச்சுட்டு அறிவார்ந்த மனிதன்னு தனக்குத்தானே பெயர் வச்சுக்கிட்ட ஹோமோ சேப்பியன்ஸ் மட்டும்தான் உயிர் பிழச்சு இருக்காங்க, அதுவும் பலத்தால இல்ல தன்னோட அறிவாலனு ஒரு உண்மை தெரியும் போது அப்போ இந்த உலகத்தோட அழிவுக்குக் காரணமா இருக்கப் போறது கண்டிப்பா ஒரு அதிமனிதனோட மீயறிவாத்தான் இருக்கும்னு ஒத்துக்கிட்டுதான் ஆகனும்.

கடந்த 30 வருடங்கள்ல ஒவ்வொரு 10 வருடங்கள்லயும் நிகழ்ந்துருக்க மாற்றங்களை ஒப்பிட்டுப் பாத்தா வியக்காம இருக்கவே முடியாது. அத்தனையும் அசுர வளர்ச்சி மிகுந்த மாற்றங்கள். இப்போ மெட்டாவெர்ஸ்னு பேசிட்டு இருக்க பயலுவலாம் யாரு, கார்ட்டூன் நெட்வொர்க்ல பொம்ம படம் பாத்துட்டு இருந்தவய்ங்கதான். இதுலயே புரிஞ்சுக்க முடியும் நிகழ்ந்துருக்க மாற்றங்கள் எந்த மாதிரியானதுனு.

புத்தகத்துக்குள்ள இருக்க விசயங்கள பேசுறதுக்கு முன்னவே இவ்ளோ எழுதி வச்சுருக்கேன். இனி உள்ள இருக்கத பேச ஆரம்பிச்சா பதிவு பனகல் பார்க்ல இருந்து பாண்டிச்சேரி வர போகும் போலயே. சரி கொஞ்சம் பொறுமையா வாசிங்க மக்களே.

ஒட்டுமொத்த மனிதகுலத்தோட வரலாற்ற பேசுற இந்தப் புத்தகத்த அறிவுப் புரட்சி, வேளாண் புரட்சி, மனிதகுல ஒருங்கிணைப்பு, அறிவியல் புரட்சி என நான்கு பகுதிகளா பிரிச்சு விவரிச்சுருக்காரு. ஒவ்வொன்ன பத்தியும் பாக்கலாம்.

அறிவுப்புரட்சி:
முன்னரே கூறியது போல் இவ்வுலகம் உருமாறிக் கொண்டிருப்பதும் மனிதனின் அறிவால்தான், அழிவொன்று நேருமானால் அதுவும் மனிதனின் அறிவால்தான். வரலாறு என்பது முழுக்கவும் கட்டுக்கதைகள் அல்ல; ஆனால் வரலாற்றில் உண்டான ஒவ்வொரு மாற்றங்களும் கட்டுக்கதைகளால் உருவானவையே. மதங்கள், பேரரசுகள் என அனைத்துமே கட்டுக்கதைகளை அடித்தளமாகக் கொண்டவைதான் (உதாரணத்திற்கு இந்து மதப் புராணங்கள்).

அவ்வாறான கட்டுக்கதைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு கற்பனையான நம்பிக்கையின் நவீன வடிவங்கள்தான் லிமிட்டெட் நிறுவனங்கள், கடன்கள், பிட்காயின் எனப்படும் மெய்நிகர் பணங்கள், பணப் பரிமாற்றத்தில் தரப்படும் கேஷ்பேக் இப்படி எல்லாமும்.

ஆக அறிவுப் புரட்சியே மனிதகுலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம்.

வேளாண்புரட்சி:
விவசாயிகளையும் விவசாயத்தையும் இன்று ஒரு பிராண்டாக மாற்றி வைத்திருக்கிறார்கள் ஊடகமும், சினிமாத்துறையும். அப்படி சில்லறை சிதற விடுவதற்கெல்லாம் அதில் ஒன்றும் இல்லை என்பது போல இப்புத்தகத்தில் விவசாயப் புரட்சியை பின்வருமாறெல்லாம் வர்ணித்துள்ளார் ஆசிரியர்.

வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில் ஒன்று
வரலாற்றின் மாபெரும் மோசடி
மனிதர்களை சிக்க வைத்த ஒரு பொறி
இது மேட்டுக்குடியினர் எனும் புதிய இனம் உருவாக மட்டுமே வழிவகுத்தது

(இதயெல்லாம் பூமி பட டைரக்டரும் அண்ணனின் விழுதுகளும் பாத்தா என்னாகுமோ)

விவசாயக் கூலிகள் மற்றும் பெரு விவசாயிகள் ஆகிய இருவரையும் பிரித்தறியத் தெரியாதவர்களுக்கு விவசாயமும் விவசாயிகளும் என்றைக்குமே ஒரு பிராண்ட்தான்.

மனிதன் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்த பிறகுதான் ஒரே மாதிரியான பயிர்களை பயிரிட்டு உண்டு சத்துக் குறைபாடு ஏற்பட்டது என்றும் குறைபாடுகளால் பல நோய்கள் உருவாகக் காரணமாக அமைந்தது என்றும் கூறுகிறார். கோதுமை என்ற காட்டுப்புல்லை மனிதன் விவசாயம் செய்து வளர்த்தான் என நினைக்காதீர்கள் அந்தக் கோதுமைதான் மனித இனத்தை வளர்த்தது என்று கூறுகிறார்.

விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகு சமூகமாக கூடி வாழத் தொடங்கிய பின்னர் மொழியின் வளர்ச்சியும் தொடங்கியது. 360 டிகிரி, 24 மணி நேரம் என 6-ஐ அடிப்படையாக வைத்து நாம் உபயோகிப்பவை எல்லாம் முதன்முதலில் எழுத்து வடிவத்தைக் கண்டறிந்தவர்களாகிய சுமேரியர்களிடமிருந்து வந்தது; இன்கா பேரரசில் கயிறுகளில் முடிச்சு போடும் ஒரு எழுத்து முறை இருந்தது; போன்ற எழுத்து சம்பந்தப்பட்ட சுவாரஸ்யங்களும் இவற்றும் அடக்கம். தற்போது நாம் உபயோகிக்கும் எழுத்து வடிவத்திற்கு கியூனிஃபார்ம் எழுத்து வடிவம் என்பது நாம் அறிந்ததே.

அறிவுப் புரட்சி ஏற்பட்ட போதும் கூட பெண்கள் அடிமைகளாகவும் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்தவர்களாகவுமே (மரபணு ரீதியாகவே) இருந்து வந்துள்ளனர். ஆண், பெண், நிற, இன, மத, சாதிய வேறுபாடுகள் நிறைந்ததாகவே மனிதகுல வரலாறு ஆதியிலிருந்து இருந்து வந்துள்ளது என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

மனிதகுல ஒருங்கிணைப்பு:
நாம் பெரிதாய் கொண்டாடும் கலாச்சாரம் என்பது செயற்கை உள்ளுணர்வுகளின் கூட்டிணைவு என்கிறது இப்புத்தகம். மதம் என்பது புலன் கடந்த ஒழுங்குமுறையின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது என்றால் கம்யூனிசமும் ஒரு மதமே என்று கூறுகையில் ஒரு நிமிடம் நின்று நிதானித்து யோசிக்கத் தோன்றியது. அத்தோடல்லாமல் மனிதன் கண்டறிந்த மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம் என்கிறார் ஆசிரியர்.

பணத்தைக் குறித்து பேசுகையில் பணம் என்பது பௌதிக எதார்த்தம் அல்ல அது உளவியல் சார்ந்த படைப்பு என்கிறார். பணம் அச்சடிப்பானது நம்பிக்கை என்னும் கச்சாப் பொருளின் அடிப்படையிலானது என்பதும் உண்மைதானே.

மதங்களைக் குறித்த பார்வையில் பணம் பேரரசுக்கு அடுத்தபடியாக மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய சக்தியாக இருப்பது மதமே என்கிறார். ஆனால் மதம் என்பது மாறிக் கொண்டேயிருக்கும் ஒன்று. யூதம், கிறித்துவம், இசுலாம் எனப் பிரிந்து தனித்தனியாக இயங்குவது போலல்லாமல், வைணவம், ஆசீவகம், புத்தம் போன்ற மதங்களையெல்லாம் இந்து மதம் தனது மதத்தின் பிரிவுகளாக ஆக்கிக் கொண்டது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி.

தாஜ்மஹால் என்பது இந்தியக் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டா? இல்லை இஸ்லாமிய ஏகாதிபத்தியத்தின் அந்நிய படைப்பா? எனக் கேள்வி எழுப்புகிறார். (என்ன பதில் சொல்றது!)

அறிவியல் புரட்சி:
இப்புத்தகத்தின் இந்தப் பகுதியைதான் மிகவும் ரசித்து வாசித்தேன். போலியான மத நம்பிக்கைகளை உடைத்தது அறிவியல் என அழுத்தமாக பதிவு செய்கிறது இப்பகுதி. (மத அடிப்படைவாதிகள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டதால்தான் மதத்திற்கு அறிவியல் ஈயம் பூசி முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என உருட்டிக்கொண்டிருக்கிறார்கள்)

உலகை கோலோச்சிய மிகப்பெரிய ஏகாதிபத்தியங்கள் ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா என மாறிக்கொண்டேயிருப்பவைதான். ஆனால் அறிவியல் புரட்சியே இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை மூலம். இப்பகுதியில் வரும், வெறும் காடாக இருந்த அமெரிக்கா இப்போது முதலாளிகளின் நாடாக இருப்பதன் பின்னணியும் அதன் பெயர்க்காரணமும் வாசிப்பதற்கு ஆச்சர்யமானவை.

மரணத்தை முறியடிக்கக் கூடிய காயகல்பத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியின் போது எதேச்சையாகக் கண்டறியப்பட்டதுதான் பல உயிர்களைக் கொல்லக்கூடிய வெடிமருந்து என்பது எவ்வளவு பெரிய முரண்.

அக்காலத்தில் முழு உலக நிலப்பரப்பையும் முழுமையாக அறிந்தவர்கள் எவரும் இலர். அதனாலேயே பல நிலப்பரப்புகளைக் கண்டறிய கப்பல் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மன்னர்கள் நிதியுதவியும் படை பலமும் அளித்திருக்கிறார்கள். அப்பயணங்கள் வெறும் நிலப்பரப்பைக் கண்டறியும் ஒன்றாகவோ, வியாபார ரீதியானதாகவோ இல்லாமல் அது ஆராய்ச்சி நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பயணம் என்பதே ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் வெற்றி எனக் குறிப்பிடுகிறார்.

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் பின்னணியில் முதலாளிகளின் இலாப நோக்கமே முன்னின்றிருக்கிறது. தனிப்பட்ட மனிதனிடம் குவியும் செல்வமே ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் கூறும் ஆடம் ஸ்மித் தன்னலமே பொதுநலம் என்கிறார். இதை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது என்பதை தொடர்ந்து அந்த அத்தியாயத்தை வாசிக்கையில் உணர முடியும். இப்புத்தகம் முழுமையுமே நாம் வழக்கமாக ஏற்றுக்கொண்டு அறிந்து வைத்திருக்கும் ஒன்றை அசாதாரண கோணத்தில் அணுகியிருப்பார் ஆசிரியர்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கூலிப்படையே இந்தியாவை வென்றதே அன்றி பிரிட்டன் அரசு அல்ல என்பது வரலாறை வாசித்தவர்களுக்கு நன்கு தெரியும். இதுவே முதலாளித்துவத்தின் வெற்றி என்ற ரீதியின் அணுகுகிறார். அபினிப் போர் (1840 – 1842) என்பது முதலாளிகளின் சுயநலத்தின் விளைவுதானே.

தொழிற்புரட்சி என்பது இரண்டாவது வேளாண் புரட்சி என்கிறார். நாம் அனைவரும் கன்வேயர் பெல்ட் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். வேலைக்குச் செல்வது சம்பாதிப்பது செலவளிப்பது என்ற ஒரு சுழற்சி வாழ்வு இது. இதில் நம்மை பொருட்களை வாங்க வைக்கும் யுக்திகளை மிகத் தீவிரமாகச் செய்து வருகிறது நுகர்வியம் எனும் கலாச்சாரம். Sale expo, Offers, தொடர்ச்சியாக வரக்கூடிய Mobile App Notifications, Digital Marketing Message and Mail-கள் என அனைத்தும் இந்த நுகர்விய வியாபாரத்தின் கூறுகளே.

இந்தத் தொழிற் புரட்சியினால்தான் குடும்பம், உள்ளூர்ச் சமூகம் ஆகியவை சிதைந்து அரசும் சந்தையும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. இதனால் நாம் அதிசயமாகப் பார்த்த பல பொருட்கள் நம் அருகிலேயே வந்து குவிந்து கிடக்கின்றன. ஓர் எளிய உதாரணம் கடிகாரம்.

இப்புத்தகத்தில் ஓர் அத்தியாயத்தில், ’பொதுவாக அகிம்சை கொள்கைக்காக மகாத்மா காந்தியின் மீது பொழியப்படும் பாராட்டுகளில் சில உண்மையில் ஆங்கிலேயர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவை ஆகும் எனக் கூறுகிறார் நூலாசிரியர். ஏனென்றால் தங்களது ஏகாதிபத்தியத்தின் முடிவை நன்குணர்ந்த ஆங்கிலேயர்கள் தாங்களே அமைதியாக ஆட்சியை ஒப்படைத்துவிட்டு விலகிவிட்டனர் எனக் குறிப்பிடுகிறார்.

போர்கள் சூழ் உலகம்தான் இது. எத்தனையோ போர்களை இவ்வுலகம் பார்த்துவிட்டது. போர் இல்லாமல் இருப்பது உண்மையான அமைதி அல்ல. போர் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருப்பதுதான் உண்மையான அமைதி என்கிறார். உண்மையில் நாம் அப்படியான ஒரு அமைதியான சூழலில் வாழவில்லை. நம்மைச் சுற்றிலும் பனிப்போர்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன என்பது மறுக்கவே முடியாத உண்மை. யாருமே தற்போதைய சூழலில் சகிப்புத் தன்மையோடு இல்லை எனக் கூறும் இவர் அதிகாரம் கிடைத்த போது அமைதிவாதிகளாக இருந்த கிறித்தவர்கள் கூட மறு கன்னத்தைக் காட்டுதல் என்ற தங்களுடைய கொள்கையை காற்றில் பறக்கவிட்டனர் என்கிறார்.

நாம் உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோமா என்றால் அதெல்லாம் நீங்கள் முடிவு செய்யக் கூடாது, உங்கள் உடலில் சுரக்கின்ற செரட்டோனின், டோபமின், ஆக்ஸிடோசின் ஆகிய சுரப்பிகள்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என நினைத்துக் கொள்வதெல்லாம் மகிழ்ச்சியே இல்லை. இது உயிரியல் மகிழ்ச்சி அல்ல, அந்த சுரப்பிகளால் உண்டாகக் கூடிய வேதியியல் மகிழ்ச்சி என்கிறார்.

இப்புத்தகத்தின் அடிப்படையில் பார்த்தால் அறிவியல் ரீதியில் மனித வாழ்க்கைக்கு எந்தவித அர்த்தமும் இல்லை. எது நல்லவிதமான உணர்வைக் கொடுக்கிறதோ அது நல்லது; எது மோசமான உணர்வைக் கொடுக்கிறதோ அது கெட்டது எனக் கூறிய ஜாக் ரூசோவின் வரிகளை இவ்விடத்தில் மேற்கோள் காட்டியுள்ளது என்னவொரு பொருத்தமாக இருக்கிறது.

இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயமான ஹோமோ சேப்பியன்ஸின் முடிவு என்பது வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு பகுதி. முழு புத்தகத்தையும் வாசிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இந்த ஒரு அத்தியாயத்தையாவது வாசித்தால் இதுவே உங்களை மற்ற அத்தியாயங்களையெல்லாம் வாசிக்கத் தூண்டிவிடும்.

சைபார்க் அறிவியல் என்ற ஒரு புதிய பிரிவு எதிர்காலத்தில் உச்சத்தில் இருக்கலாம். சைபார்க் என்பது பாதி மனிதன் பாதி இயந்திரம் என்னும் நிலை. (செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்ட மனிதர்களை எண்ணிக் கொள்ளுங்கள்)

வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பொழுது Resume-க்கு பதிலாக DNA report-ஐ கேட்டுப் பெற்று அதை ஆராய்ந்து அதன் முடிவில் தெரியும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு நமக்கு ஏற்றபடி வேலை ஒதுக்கப்படலாம் அல்லது நமது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்று இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை எண்ணிப் பார்க்கையில் விளையாட்டாகத் தோன்றலாம். ஆனால் விண்வெளிப் பயணம் தொடங்கி வீடியோ கால் வரையில் அவை கண்டறியப்படுவதற்கு முன்பு வரை விளையாட்டாகத்தான் தெரிந்திருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

எதிர்காலத்தில் அறிவியலின் உச்சமாக அழிந்து போன விலங்கினங்கள், பறவையினங்கள், நியாண்டர்தால் மனித இனம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்ய நேர்ந்தால் அது மனித குலத்தின் அழிவிற்கு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம் அல்லது அதிமனிதர்களின் மூளையைப் பொருத்திய புதிய மனித இனம் கூட்டாக இணைந்து இவ்வுலகில் இன்னும் பெரிய மாற்றங்களை நிகழ்த்தலாம்.

ஹோமோ சேப்பியன்களால் அழிவுக்குள்ளாக்கப்பட்ட நியாண்டர்தால்களை மீளுருவாக்கம் செய்வது நமது கடமை என்று கூட கொள்ளலாம். அவ்வாறு உருவாக்கப்படும் அதிமனிதர்கள் கிட்டத்தட்ட கடவுளைப் போல இருப்பார்கள் என்கிறார் ஆசிரியர்.

ஒரு அதிசயக்கத்தக்க வாசிப்பனுபவத்தை தந்தது இப்புத்தகம். மிக நீண்ட பதிவாக இதை ஏன் எழுதினேன் என்றெல்லாம் தெரியவில்லை. இப்புத்தகத்தைப் பற்றி நிறைய பேர் தெரிந்து கொண்டு இதை வாசிக்க வேண்டும் என்று யோசிக்கிறேன். (இப்பதிவையே பலர் முழுமையாக வாசிக்கப் போவதில்லை என்பது வேறு விசயம்). இந்த சூட்டோடு யுவால் நோவா ஹராரியின் ஹோமோ டியோஸ் மற்றும் 21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் ஆகிய புத்தகங்களையும் வாசித்துவிட வேண்டும் எனத் தோன்றுகிறது. அத்தோடு இப்புத்தகத்தின் முடிவில் ஜாரட் டயமண்ட் அவர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார். அவரது ‘துப்பாக்கிகள் இரும்பு மற்றும் எஃகு’ புத்தகமும் வாசிக்க வேண்டிய ஒன்று.

மொழிபெயர்ப்பையும் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும். எங்குமே சலிப்பு ஏற்படுத்தா வண்ணம் நல்லதொரு மொழிநடை. தமிழில் நானறிந்த மொழிபெயார்ப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவராக இவர் இருக்கிறார். இவரது மொழிபெயர்ப்புகளில் வாசிக்க வேண்டிய சில புத்தகங்களும் கூட எனது வாசிப்புப் பட்டியலில் இருக்கிறது. அறிவியல் கலைச் சொற்கள் எளிதில் புரியும்விதத்தில் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வார்த்தைகளுக்கான ஆங்கில வார்த்தைகளும் அத்தியாயம் வாரியாக பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சேப்பியன்ஸ் – வாசித்தவர்கள் அனைவரும் ஹாப்பியன்ஸ்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.