Breaking News :

Thursday, September 12
.

நட்பை மதித்தவர் காமராஜர். எப்படி?


முதல்வராக இருந்த
போது பெருந்தலைவர் காமராஜரின் அலுவலகத்திற்கேத் தேடி வந்தார், ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில் ஒரு மஞ்சள் பை. 

அவரை அழைத்து, அருகில் அமர வைத்த, காமராஜர், 'என்ன ரெட்டியாரே... ஏதாவது, முக்கிய சேதியா, இல்ல, சும்மா பார்க்க வந்தீரா...' என்று கேட்டார்.
வந்தவருக்குத் தயக்கம்.

'பரவாயில்ல சொல்லுங்க, ரெட்டியார்...' என்று, மீண்டும் கேட்டார், காமராஜர்.

'ஒண்ணுமில்ல... என் மகனுக்கு கல்யாணம்... அதான்...'

'இதுக்கு ஏன், ரெட்டியாரே தயங்கணும். நல்ல விசேஷம் தானே...' என்று தட்டிக்கொடுத்து, பாராட்டி, 'நான், என்ன பண்ணணும்...' என்றார், காமராஜர்.

'இல்ல... கல்யாணத்துக்கு, நீங்க தான் தலைமை தாங்கணும்... ஊரெல்லாம் சொல்லிட்டேன்; பத்திரிகை கொடுக்க, நேர்ல வந்தேன்...' என்று தயங்கினார்; 'நீங்க வருவீங்கன்னு, எனக்கு நம்பிக்கை. அதனால, அப்படி சொல்லிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க...' என்று இழுத்தார்.

கோபத்தில் முகம் இறுகி, 'எந்த நம்பிக்கையில், நீங்க முடிவெடுத்தீங்க... யாரைக் கேட்டு, மத்தவங்ககிட்ட சொன்னீங்க...' என்று கடுமை காட்டினார், காமராஜர்.

கலங்கிய கண்களுடன், 'தப்பா நினைச்சுக்காதீங்க... அன்னிக்கு, உங்களுக்கு, வேலுார்ல ஒரு கூட்டம் இருக்கு... பக்கத்துல தான், என் ஊர். அதனால, கல்யாணத்துக்குக் கூப்பிட்டா, கட்டாயம் வருவீங்கன்னு நினைச்சுட்டேன்...' என்றார், ரெட்டியார்.

'உங்க வீட்டு கல்யாணத்துக்கு, வர்றதா முக்கியம்... அதுவா என் வேலை; வேற வேலை இல்லையா... வர முடியாது... நீங்க போயிட்டு வாங்க...' என, பட்டென்று கூறி அனுப்பி விட்டார், காமராஜர்.
முகத்தில் அடித்தது போல் ஆனது, ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லவில்லை. 

கல்யாணத்தை அவர் வீட்டில் எளிமையாக நடத்தினார்; அவரது வசதிக்கு அப்படித்தான் முடியும். கடைசியில், காமராஜர் வரமாட்டார் என்பதும், ஜனங்களுக்குப் புரிந்தது.

'என்னமோ, நானும், காமராஜரும் ஒண்ணா சிறையில் இருந்தோம்... கூட்டாளிங்க... என் வீட்டு கல்யாணத்துக்கு வருவார்ன்னு பெரிசா தம்பட்டம் அடிச்சுகிட்டாரு... பார்த்தீங்களா அலம்பல...' என்ற ஏளனப் பேச்சுக் கூடியது; வந்து, போனவர்கள் எல்லாம் புறம் பேசினர்.

மனம் உடைந்த, ரெட்டியாருக்கு, உடல் கூனிப்போனது. வீட்டிற்குள் சுருண்டு படுத்து விட்டார். அந்த வீடே வெறிச்சோடி போனது. சற்று நேரத்திற்கெல்லாம், காரில் வந்த ஒருவர், 'முதல்வர், காமராஜர் வரப்போகிறார்...' என்ற செய்தியைச் சொன்னார்.

நம்பிக்கையற்று உட்கார்ந்திருந்தார், ரெட்டியார். சில நிமிடங்களில், அடுத்த காரில், இரண்டு பெரிய கேரியரில், சாப்பாட்டோடு வந்து இறங்கினார், காமராஜர்.

ரெட்டியாரால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் சேர்ந்து விட்டது. முதல்வரைத் தழுவியபடி, குலுங்கி அழுதார், ரெட்டியார்.தட்டிக் கொடுத்து, சமாதானப் படுத்திய காமராஜர், 'சுதந்திரப் போராட்டம், ஜெயில்ன்னு எல்லாத்தையும் இழந்துட்ட, உங்க கஷ்டம் எனக்குத் தெரியும், ரெட்டியாரே... பையனுக்கு, கல்யாணம்ன்னு சொன்னப்பவே, நான் வர்றதா சொல்லியிருந்தா, நீர், இருக்குற கஷ்டத்துல, கடன் வாங்குவீர்...
'முதல்வர் வர்றார்ன்னு ஏதாவது பெரிசா செய்யணும்ன்னு போவீர்... அதான், அப்படிச் சொன்னேன்; மன்னிச்சிடுப்பா... உன் வீட்டு கல்யாணத்துக்கு வராம, எங்க போவேன்...' என்று, ஆரத்த ழுவினார்.
கண்ணீர், ஆனந்தக் கண்ணீரான நேரம் அது.

பிறகு, வாசலில் பாய் விரித்து, எடுத்து வந்த சாப்பாட்டை அனைவருக்கும் போடச் சொல்லி, அக்குடும்பத்தாரோடு தானும் அமர்ந்து சாப்பிட்டார்.

சாப்பாட்டு சுமையைக் கூட அவருக்குக் கொடுத்துவிட கூடாது என்று, தன் பணத்தைக் கொடுத்து, வாங்கி வந்தார் என்றால், ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

நிலை மாறினால், குணம் மாறலாம் என்று, மாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில், நட்பைப் போற்றியவர், காமராஜர்!

முனைவர், செ. செல்வராஜ் எழுதிய, 'காமராஜர் நினைவலைகள்' நுாலிலிருந்து..

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.