Breaking News :

Friday, July 12
.

புத்தகம் : கனவைப் போலொரு மரணம்


புத்தகம் : கனவைப் போலொரு மரணம்

ஆசிரியர் : அ. வெண்ணிலா | கவிதை |
பக்கங்கள் : 80 | விலை : 100 | 

கனவுகள் நம் உடலைக் கட்டிப் போட்டு நம் எண்ணங்களுக்கு சிறகினை அளித்து நம்மை பறக்கச் செய்யும். ஒவ்வொரு இரவும் நம் மரணத்திற்கான ஒத்திகை தான். அதில் கூடவே பயணிக்கிறது நம் கனவுகள். ஒவ்வொரு இரவிலும் கனவுகள் நம்மை ஆளுகின்றன மரணத்தை ஒத்தி வைக்கின்றன. நம் மீண்டும் பிறப்பது போல கண் விழிக்கும் போது தற்கொலை செய்து கொள்கின்றன கனவுகள். இது கனவினைப் பற்றிய என்னுடைய வரிகள். 

இப்படி கனவினை கருவாக கொண்டு கவிஞர் வெண்ணிலா அவர்கள் எழுதிய இந்த கவிதை தொகுப்பு கனவை போல அடிக்கடி மரணத்தை சந்திக்கும் சாமானியனின் உள்ளுணர்வு. 

யாரும் பார்க்காத பார்வையில் ஒரு விசயத்தை நாம் பார்க்கும் போதும் பேசும் போதும் தான் அது முக்கியத்துவம் பெறும். பெரும்பாலும் கவிஞர்களின் பார்வைகள் அதனையே தேடிச் செல்லும். அதுபோல கவிஞர் வெண்ணிலா அவர்கள் பார்வை வித்தியாசமாக பார்க்காத பார்வையாக உள்ளது. 

ஆணின் காமப்பார்வை ஆசைகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்படும் தற்காலத்தில் கூட ஓர் பெண்ணின் காம ஆசைகளும் கனவுகளும் பேசப்படுவதில்லை. பெண் என்பவள் சாத்தான்கள் மூலம் படைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு இருக்கிறாள், அவள் அதனை தனக்கு சுமையாக இருக்கிறது என்று விலக்கிக் கொள்ளும் போதெல்லாம் இந்த சமூகம் அவளை ஏளனம் செய்கிறது. சாத்தான்கள் அதனைக் கண்டு சிரிக்கிறது என்ற கவிதை வரிகள் உண்மையில் என்னை ஈர்த்தது. இதனை படித்த உடனே இந்த புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிவிட்டேன். 

முதலில் வருபவர்களுக்கு தான் முன்னுரிமை என்ற உலகம் இது. அது போலவே தான் முன்வரிசையில் உட்காரும் மாணவர்களுக்கும் முன்னுரிமை என்பது ஒரு மாயை என்கிறார் கவிஞர். பின்னிருக்கையில் அமர்வது எவ்வளவு சவுகரியமாக இருக்கிறது என்பதை அழகாக எழுதியுள்ளார்.

சவுக்கை போலத் தான் நாம் பேசும் வார்த்தைகள், அதற்கு கன்னத்தில் அறைய மட்டுமே தெரியும். ஆனால் அதனை சுருட்டி தலையணையாக வைத்து உறங்கவும் செய்யலாம் நம் அன்பானவர்கள். வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கச்சிதமாக கூறியுள்ளார் கவிஞர் வெண்ணிலா அவர்கள்.

தலைமுறைகள் கடந்து கொண்டே வர பழக்க வழக்கங்கள் கூட கடந்து கொண்டே வருகிறது. அய்யன் திருவள்ளுவர் சொன்னது போல நீர் இன்றி அமையாது உலகு என்றார். மண் பானை பித்தளை பாத்திரம் என சேமித்து வைத்து காலம் போய் இப்போ வாட்டர் பாக்கெட் என சுருங்கி விட்டது என்று சுற்றுச்சூழல் பற்றியும் அக்கறை காட்டி கவிதை எழுதியுள்ளார். 

குழந்தைத்தனமான குணம் கொண்டவர்கள், கோபம் ஏன்? நகர வாழ்வு, காமம், காதல், வானவில், இயற்கை என அனைத்து விதமான கவிதைகளும் அடங்கிய ஓர் கலவை தான் இந்த கனவைப் போலொரு மரணம். 

நிச்சயம் வாசித்துப் பாருங்கள்

தமிழ்செல்வன் இரத்தினம்
04/03/2022

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.