Breaking News :

Saturday, June 10

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள்
தொகுப்பு: எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
விலை: ரூ.1000/-
பக்கங்கள்: 1017

இப்புத்தகத்தை 2020 அக்டோபரில் வாசிக்கத் தொடங்கி, 2021 நவம்பரில் வாசித்து முடித்து, 2022 ஜனவரியில் பதிவு எழுதுகிறேன் என்று நினைக்கும் போதே சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது நண்பர்களே. இந்த வருடம் இப்படி இருக்காது என நம்புகிறேன்.

புதுமைப்பித்தனில் தொடங்கி ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமிழ் இலக்கிய உலகின் எழுத்தாளுமைகளின்  100 சிறுகதைகளைத் தொகுத்து இரண்டு பாகங்களாகத் தந்திருக்கிறார் எஸ்.ரா. இது முழுக்க முழுக்க தன்னுடைய ரசனை சார்ந்த தேர்வு என்று கூறும் எஸ்.ரா புத்தகத் தலைப்பை ’எனக்குப் பிடித்த 100 சிறுகதைகள்’ என வைத்திருக்கலாம். சிறந்த என்று அடைமொழியிட்டுக் கூறுகையில் இவையே சிறந்தவையென்ற பொருளாகின்றது. தன்னுடைய 2 சிறுகதைகளை இத்தொகுப்பில் வைத்ததனால் கூட இப்படியான தலைப்பை வைத்திருக்கலாம்.

100 சிறுகதைகளில் எனக்குப் பிடித்த, மனதோடு ஒன்றிய ஒரு சிறுகதையாக தஞ்சை பிரகாஷின் ‘மேபல்’ சிறுகதையைச் சொல்வேன். இதை வாசித்த பின்னர் அவரின் ‘மிஷன் தெரு’ நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. 

புதுமைப் பித்தனின் 3 சிறுகதைகளில் ‘செல்லம்மாள்’ கதை மனதை உருக்கியது. நோயுற்ற மனைவியை செல்லம்மாளைப் பார்த்துக்கொள்ளும் கணவன் பிரம்மநாயகத்தின் பாசத்தையும், வேதனையையும் பேசும் கதை. 

அதே போல ’பஞ்சத்து ஆண்டி’ சிறுகதையும் ரொம்பவே உருக்கமான ஒன்று. நலிந்த நெசவாளி ஒருவன் வாழ்வில் நடக்கும் சம்பவம். கதையின் முடிவு துளி கண்ணீரை வர வைக்கும்.

திரைப்படமாக வந்த சில சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளது. நவரசா ஆந்தாலஜியில் அருவருப்பு என்னும் ரசத்தை உருவகப்படுத்துமாறு பாயாசம் என்ற படம் தி.ஜானகிராமன் எழுதிய ‘பாயாசம்’ சிறுகதையே. இக்கதை எவ்வாறு எழுதப்பட்டதோ அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது என்பது இக்கதையை வாசித்தவர்களுக்கும், அப்படத்தைப் பார்த்தவர்களுக்கும் புரியும்.  
நாஞ்சில் நாடனின் ‘இந்நாட்டு மன்னர்கள்’ சிறுகதையை ஒன்லைனராக வைத்துதான் யோகிபாபு நடித்து வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். ச.தமிழ்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையே ‘பூ’ என்ற திரைப்படமாக வந்தது என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்போம். 

பாஸ்கர் சக்தியின் ‘அழகர்சாமியின் குதிரை’ அதே பெயரிலேயே சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்தது என்பதை அறிவோம். இக்கதையை வாசிக்கும் போது அப்படியே படம் பார்க்கும் உண்ர்வே ஏற்பட்டது. சினிமாக்களில் இருக்கக்கூடிய அதே உரையாடல் பாணியில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் திரைப்படத்தில் காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 

அதே போல அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையை நாளைய இயக்குநரில் யாரோ குறும்படமாக எடுத்திருந்த ஞாபகம். ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையின் அடியொற்றி பின்னாளில் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் வெளிவந்ததும், அதுவே அதே தலைப்பில் திரைப்படமாக வந்ததும் அறிந்த ஒன்றே.

இவை தவிர குறும்படமாகவோ, திரைப்படத்தின் ஒரு காட்சியாகவோ அமைவதற்கான கதையம்சமுள்ள சிறுகதைகளாக சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’, வண்ணநிலவனின் ‘பலாப்பழம்’, சுஜாதாவின் ‘நகரம்’, இந்திரா பார்த்தசாரதியின் ’ஒரு கப் காபி’, சாந்தனின் ‘நீக்கல்கள்’, செழியனின் ‘ஹார்மோனியம்’ ஆகிய கதைகளைச் சொல்லலாம்.

சில கதைகளில் வரக்கூடிய பெண் பாத்திரங்கள் நம் மனதில் அப்படியே பதிந்து போய்விடுகிறார்கள். முக்கியமாக தஞ்சை பிரகாசின் ‘மேபல்’ கதையில் வரக்கூடிய மேபல். மேலும் சுந்தர ராமசாமியின் ’ரத்னாபாயின் ஆங்கிலம்’ கதையில் வரும் ரத்னாபாய், வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதையில் வரும் எஸ்தர், பிரபஞ்சனின் ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ கதையில் வரும் அற்புத மரி, ஜே.பி.சாணக்யாவின் ‘ஆண்களின் படித்துறை’ கதையில் வரும் அன்னம் ஆகிய பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நம் மனதிலிருந்து மறைய மாட்டார்கள்.

இதில் மாய எதார்த்தக் கதைகளாக பிரமிளின் ‘காடன் கண்டது’, கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு…’, பிரேம் ரமேஷின் ‘மூன்று பெர்னார்கள்’, ஆகிய கதைகளைக் கூறலாம். இவை எல்லாவற்ரையும் விட பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ கதையைக் கூறலாம். இதுவே இத்தொகுப்பின் மிக நீண்ட கதை. இது சிறுகதை வடிவத்திற்குள் அடங்குமா எனத் தெரியவில்லை. இது ஒரு குறுநாவலாகக் கொள்ளலாம். முதல் சில பக்கங்கள் வாசித்துவிட்டு ஒன்றுமே புரியாமல் மீண்டும் முதலிலிருந்து வாசிக்கத் தொடங்கிய கதை இது. ஆனால் அது முடியும் போது வேறு ஒரு உலகிற்கு சென்று வந்தது போன்றதொரு உணர்வு. விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளை வாசித்தது போன்று.

இன்னும் சில வகைகளுக்குள் பிற கதைகளை வகைப்படுத்தலாம். பதிவு நீண்டுகொண்டே போய்விடும். இவற்றில் சில கதைகள் மனதிற்கு ஒட்டாமலும் இருந்தன. 

முக்கிய படைப்பாளிகளின் முக்கிய சிறுகதைகள் அனைத்தையும் ஒன்றாக வாசிக்க வேண்டுமென நினைப்பவர்கள் இப்புத்தகத்தை தாராளமாக வாசிக்கலாம்.

- குப சிவபாலன்

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.