Breaking News :

Wednesday, April 24
.

என்றும் மார்க்கண்டயன் நடிகர் சிவகுமார்


1965ல் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‛காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த சிவகுமாருக்கு 1970களில் கதாநாயகன் வேடமேற்று நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களை தந்தார்.

குறிப்பாக இயக்குனர் தேவராஜ் மோகன் இயக்கிய பெரும்பாலான படங்களில் சிவகுமாரே கதாநாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களை தந்துள்ளார். ‛‛பொன்னுக்கு தங்க மனசு, கண்மணி ராஜா, அன்னக்கிளி, உறவாடும் நெஞ்சம், கவிக்குயில், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, பூந்தளிர் மற்றும் இவரது 100வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி வரை இந்த கூட்டணி தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்தன.

இயக்குநர் கே.பாலசந்தரின் இயக்கத்திலும், நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன்
‛‛அக்னி சாட்சி மற்றும் சிந்து பைரவி போன்றவை அடங்கும். இயக்குநர் எம்.பாஸ்கர், கே.ரங்கராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் என்று அன்றைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் படங்களிலும் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

திரைப்பட நாயகனாக மட்டுமின்றி இவர் நல்ல ஓவியர் என்பதற்கு இவருடைய பல ஓவியங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் போன்றவை உதாரணங்களாக கூறலாம்.

எழுத்துப் பணியிலும் இவருக்கு ஆர்வம் உண்டு என்பதற்கு இவர் எழுதிய நான் ராஜபாட்டை அல்ல என்ற புத்தகத்தை கூறலாம். இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 80 வயதிலும் யோகாவில் அசத்தும் சிவகுமார் கடந்தாண்டு கொரோனா காலக்கட்டத்தில் மூச்சுபயிற்சி தொடர்பாக ஆலோசனை கூறி பலருக்கும் உதவி செய்தார். சிவகுமார் சிறந்த பேச்சாளர். பல மேடைகளில் இவரது பேச்சுக்கள் மற்றவர்களுக்கு உந்துதலாக அமைந்தது என்றால் மிகையல்ல. தொடர்ந்து 2.15 மணிநேரம் எந்தவித இடைவெளியின்றி மகாபாரதம் இதிகாச புராணத்தை பேசி அசத்தியவர்.

தன்னுடைய பெயரில் ஸ்ரீ சிவகுமார் எஜுகேஷனல் அன்ட் சாரிடபிள் டிரஸ்ட் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனம் அடுத்தக்கட்டமாக இவரது மகன்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரால் அகரம் பவுண்டேஷனாகவும் தனியாக உள்ளது. ஏராளமான குழந்தைகள் இந்த தொண்டு நிறுவனம் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

எந்த ஒரு துறையிலும் தீய வழியில் செல்வதற்கு ஏராளமான வழிகள் உண்டு. சினிமா துறையில் அது அதிகம். அப்படிப்பட்ட துறையில் ஒரு மனிதர் இப்போது வரை எந்தவித ஒழுக்ககேடுமின்றி இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் சிவகுமார். தன்னுடைய பிள்ளைகளையும் அப்படியே கொண்டு வந்துள்ளார்.

பொதுவாக வயதாக வயதாக ஞாபக சக்தி குறையும் என்பார்கள். ஆனால் இந்த வயதிலும் மனதளவிலும், உடலளவிலும் என்றும் மார்க்கண்டயனாக வெள்ளித்திரைவானில் பரிணமித்து சொந்த வாழ்விலும் அதை கடைப்பிடித்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்னோடியாக திகழும் ஒப்பற்ற திரைக்கலைஞர் சிவகுமார் ஆவார்.

Thanks to தினமலர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.